நன்மையை ஏவாமல் தீமையை தடுக்காமல் இருப்பது ஈமானின் பலவீனமா?

இக்கேள்விக்கு பதில் உண்டு.

  1. உண்மையான முஃமின்கள் தாம் நல்லமல்களில் ஈடுபடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் பிறரை நன்மை செய்யத் தூண்டுவார்கள். அவை வளருவதற்கு தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவார்கள்.அத்துடன் தாம் தீமைகளில் ஈடுபடாதிருப்பதுடன் அதில் பிறர் ஈடுபடுவதை விட்டும் தடுப்பார்கள். அதனை விட ஒரு படி சென்று கூறுவதானால் தீமையை தடுப்பவர்களுக்கு பக்கபலமாகவும் இருப்பார்கள்.

(وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ المُنكَرِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ)

9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.”

இங்கு முஃமின்களது பிரதானமான சிறப்புப் பண்புகள் எவை என்று கூறப்படுகிறது.

அ. முதல் பண்பு அவர்கள் தமக்கிடையே விசுவாசமாகவும் தோழமையுடனும் நடந்து கொள்வார்கள்.

ஆ. பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து வாழ்வார்கள்.(இது முதல் பண்பான பரஸ்பர நற்புறவின் வெளிப்பாடாகும்)

மேற்கூறப்பட்ட இரு பண்புகளுக்கும் பிறகு தான் தொழுகை,ஸகாத், அல்லாஹ் ரஸூலுக்கு கட்டுப்படுவது என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பண்புகளைக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்பது மேற்படி வசனம் கூறும் முக்கியமான கருத்தாகும். அதாவது, இப்பண்புகளைக் கொண்டில்லாத சமூகத்துக்கு அல்லாஹ்வின் அருள் இருக்கமாட்டாது என்பது தெளிவான உண்மையாகும்.

  1. தீமையை நன்மையாக மாற்ற முயற்சி எடுக்கும் அளவுக்கு மட்டுமே ஈமான் இருக்கும்:

“من رأى منكم منكرًا فليغيِّره بيده، فإن لم يستطع فبلِسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان”. أخرجه مسلم،

“உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை தன் கையால் மாற்றட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை தன் நாவால் மாற்றட்டும், அப்படியும் முடிவில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் மாற்றட்டும். ”

இந்த ஹதீஸில் வரும் ”யுகையிர்” (يُغَيِّر) என்ற வாசகம் ”மாற்றுதல்” என்ற கருத்தைத் தரும்.

மாற்றுதல் என்பது அத்தீமையிலிருந்து அவனை தடுப்பது மாத்திரமில்லை மாறாக அவரை நன்மையின் பால் வழிகாட்டவும் உதவி செய்ய வேண்டும். இதனைத்தான் இஸ்லாமும் வேண்டி நிற்கின்றது. இதனால்தான் அல்லாஹுத்தஆலா இந்த சமுதாயத்தை சிறந்த சமுதாயமாகக் கூறுகின்றான்.

ஆனால், தீமைகள் இடம்பெறும் போது அதாவது, பாவங்கள் நிகழும் போது அவற்றை நல்லவர்கள் பார்த்து மெளனமாக இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். அது ஈமானின் பலவீனத்தினதும் சுயநலத்தினதும் மற்றொரு வகையில் கூறுவதானால் கோழைத்தனத்தினதும் அடையாளமாகும்.

  1. பாவிகளுக்கு இறங்கும் தண்டனை தீமைகளை தடுக்காதிருப்பவர்களையும் பாதிக்கும்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ”அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்குமுரிய உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள் மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருப்பவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தனக்குள்) நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம். நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் இருப்பவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.” (ஆதாரம்: புஹாரி-2493)

“ما من نبيٍّ بعثَه الله في أمّةٍ قبلي إلاّ كان له مِن أمَّته حواريّون وأصحابٌ، يأخذون بسنَّته، ويقتَدون بأمره، ثم إنها تخلُف من بعدِهم خلوفٌ، يقولون ما لا يفعلون، ويفعَلون ما لا يؤمَرون، فمن جاهدهم بيده فهو مؤمن، ومَن جاهدهم بلسانه فهو مؤمن، ومَن جاهدهم بقلبه فهو مؤمِن، وليس وراءَ ذلك من الإيمان حبّةُ خردل”. أخرجه مسلم.

எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப் பின் சமூகங்கள்,… அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார், அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால் போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லை” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).

(وَاتَّقُوا فِتْنَةً لاَّ تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ العِقَابِ) [الأنفال:25].

8:25. நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top