அஷ்ஷைக் பளீல்
அல்லாஹ்வின் அருளால் புனித ரமழான் எம்மை வந்தடைந்து விட்டது. இந்த மாதத்தில் அவன் விரும்பும் நல்லமல்களில் ஈடுபட்டு அவனது திருப்தியை அடைந்த கூட்டத்தில் எம் அனைவரையும் இணைத்து கொள்வானாக!
சகோதரர்களே! இந்த ரமழானை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு நாம் அனைவரும் உயர்ந்தபட்சம் முயற்சி செய்ய வேண்டும். எம்மை ஆன்மீக ரீதியாக, அறிவு ரீதியாக, பண்பாட்டு ரீதியாக அதிகமதிகம் தயார்படுத்திக் கொள்வதற்கு கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
மலர்ந்திருக்கும் இந்த ரமழான் எம்மை ஒழுங்குபடுத்துவதற்கும் எம்மை தர்பியாவிற்கு உட்படுத்துவதற்கும் மிகப்பொருத்தமான காலமாகும்.
தற்போதைய இடர் மிக்க சூழலில் பொருத்தமான அணுகுமுறைகளைக் கையாண்டு ரமழானை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
மின்சாரம் இடைக்கிடை துண்டிக்கப்பட்டாலும் எமது வசதிக்கேற்ப எமது அமல்களது நேரங்களில் நாம் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
- இரவு வேளையில் குர்ஆனை பார்த்து ஓதுவது கஷ்டமாக இருக்கும் என்பதால் திலாவதுல் குர்ஆனையும் நூல்களை வாசிப்பதையும் பகலில் அமைத்துக் கொள்ளலாம்.
இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்பதைக் காரணம் காட்டி அரட்டை அடிப்பது போன்ற அனாவசியமான கருமங்களில் ஈடுபட்டாமலும் அந்த நேரத்தைத் தூக்கத்தில் கழித்து விடாமலும் முடிந்தவரை தொழுகையிலும் திக்ர் அவ்ராதுகளை சந்தர்ப துஆக்களை ஓதுவதிலும் கழிக்கலாம்.
ஏனைய காலங்களை விட ரமழானின் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு வினாடியும் பெறுமதி மதிக்க முடியாத அளவுக்கு மிகப் பெறுமதியான வை.
தனிப்பட்ட முறையில் இபாதத்களில் ஈடுபடும் அதேவேளை பிறருக்கு அவற்றை நாம் ஏவவும் வேண்டும். சமுதாயத்தின் உயர்ச்சிக்கான பணிகளிலும் முடிந்த வரை ஈடுபட வேண்டும்.
ஆனால் ரமழான் காலத்தில் பொதுப் பணிகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விட நம்மை நாமே உருவாக்கிக் கொள்வதற்கும் புடம் போடுவதற்கும் அதிக கரிசனை எடுக்க வேண்டும். எமது பலமும் பலவீனமும் எமக்கு மட்டுமே நன்கு தெரியும். அல்லாஹ்வை நெருங்குவதற்கான இபாதத்களில் ஈடுபட்டு அதிகமான நன்மைகளை ஈட்டிக் கொள்வது எமக்குரிய தனிப்பட்ட அமல்களாகும். அவற்றை வேறு யாரும் செய்து எமக்கு தர முடியாது என்ற வகையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியாக எம்மை நாமே உருவாக்கிக் கொள்வதையும் திருத்திக் கொள்வதையும் இந்த ரமழானில் நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். அதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
“ரமழான் மாதத்தை அடைந்தும் யாருக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கப்படட்டும்” என்று நபியவர்கள் கூறிய ஹதீஸ் எமது சிந்தனைக்குரியதாகும்.
மறுமையில் நோன்பும் அல்குர்ஆனும் எமக்காக சிபார்சு செய்ய இருக்கின்றன. எனவே, இஸ்திக்பார்,திலாவதுல் குர்ஆன், நோன்பு என்பன தனிப்பட்ட நல்லமல்களாகும்.
எனவே எம்மை நாம் உருவாக்குவதில் கூடிய கவனம் எடுப்போமாக!
- எம்மை நாம் உருவாக்குவதன் இரண்டாம் பகுதி எமது அறிவை, ஆற்றல்களை, திறமைகளை வளர்த்துக் கொள்வதாகும். இஸ்லாமிய மற்றும் பொது அறிவு நூல்களை வாசிப்பதற்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வீட்டில் இருக்கும் பெற்றோர் சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு ஒத்தாசையாக இருப்பதும்,வீட்டுச் சூழலை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் மிக முக்கியமான கடமைகளாகும்.
வல்லவன் அல்லாஹ் பாக்கியமுள்ள இம்மாதத்தில் நல்லமல்கள் புரியக்கூடிய அவகாசத்தையும் உடல் உள வலிமையையும் தந்து பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களது கூட்டத்தில் எம் அனைவரையும் சேர்ப்பானாக!




