அஷ்ஷைக் பளீல் (நளீமி)
ரஸ்ஸாக் (உணவளிப்பவன்- அல்லாஹ்), மர்ஸூக் (அல்லாஹ்வின் உணவைப் பெற்று வாழுபவன்)
ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்பதை மட்டுமல்லாமல் மனித வாழ்வுக்குத் தேவையான சகல ‘ஜீவனோபாயங்கள்’ ஐயும் குறிக்கும்.
தற்காலத்தில் இந்த ரிஸ்க் பற்றிய இரண்டு துருவமான கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகின்றன.
ஒன்று ஆன்மீக கண்ணோட்டம்.
மற்றையது லெளகீக சடவாதக் கண்ணோட்டம்.
இவ்விரு கண்ணோட்டங்களையும் இணைத்த வகையிலேயே இஸ்லாம் ரிஸ்க் பற்றிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அது தான் மிகச் சரியான நிலைப்பாடாகும்.
அதன் விபரமாவது…
அல்லாஹ் தான் ரஸ்ஸாக் என்ற வகையில் அவன் எமக்கு ரிஸ்க் அளிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறான் என்று கூறிக் கொண்டு வெறுமனே துஆவிலும் உழைப்பின்றியும் சிலர் வாழுகின்றனர். இன்னும் சிலரோ ஆன்மீகத்திலிருந்து தூரமாகி தமது உழைப்பில் மாத்திரமே நம்பிக்கை வைத்து சடவாதக் கண்ணோட்டத்தோடு வாழ்கிறார்கள்.எனவே, இஸ்லாத்தின் சமநிலைக் கண்ணோட்டத்தை நாம் ஆராய வேண்டும்.
ரிஸ்க் பற்றிய இஸ்லாமிய ஆன்மீகக் கண்ணோட்டம்
- நமது ரிஸ்க் அல்லாஹ்வின் கையில் மட்டுமே உள்ளது என நம்புவது எமது ஈமானின் அடிப்படையான அம்சமாகும். இதில் இம்மியளவும் நாம் சந்தேகம் கொள்ளக் கூடாது. அல்லாஹ் சிலருக்கு ரிஸ்கை விஸ்தீரணமாக்கிக் கொடுக்கிறான்.வேறு சிலருக்கு குறைத்தும் கொடுக்கிறான். சிலபோது சிலரை பரம ஏழைகளாகவும் ஆக்குகின்றான் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இது எமது நம்பிக்கை.
- அல்லாஹ்வை அஞ்சி ,பாவங்களை விட்டு இஸ்திக்பார் செய்வதும் நற்கருமங்களில் மும்முரமாக ஈடுபடுவதும் ரிஸ்க் விஸ்தீரணத்துக்கு வழிவகுக்கும் என்பது ரிஸ்க் பற்றிய எமது அடுத்த பிரதானமான நம்பிக்கையாகும்.
இதற்கு மூன்று உதாரணங்கள்:
- “யார் அல்லாஹ்வை தக்வா செய்து வாழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவர் எதிர்பாராத புறத்திலிருந்து ரிஸ்க் அளிப்பான்” (குர்ஆன்)
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا {الطلاق:2-3}.
- நூஹ்(அலை) அவர்கள் தமது சமூகத்தைப் பார்த்து நீங்கள் இஸ்திக்பார் செய்தால் உங்களது ரிஸ்க்கை அல்லாஹ் உங்களுக்கு விஸ்தீரணப்படுத்துவான் என்று கூறியதாக குர்ஆனிலே அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
{فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا (10) يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا (11) وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا (12) } [ نوح]
3). நபிகளார் (ஸல்)அவர்கள்:- “யார் தனது வாழ்நாள் நீளமாக்கப்பட வேண்டும் என்றும் ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறாரோ அவர் தனது இனபந்துக்களது உறவை சேர்ந்து நடக்கட்டும்”
روى البخاري (2067) ومسلم (2557) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ ) .
என்று கூறியிருக்கிறார்கள். எனவே, ஒருவர் பாவங்களில் இருந்து தன்னைத் தூரமாக்கி இஸ்திக்பார் செய்வதும் இன்பத்துக்களது உறவைப் பேணுவது போன்ற நற்பணிகளில் ஈடுபடுவதும் செல்வபாக்கியத்தைப் பெறுவதற்கு அதாவது ரிஸ்க் விஸ்தீரணத்திற்கு வழிவகுக்கும் என்பது கவனிக்கத்தக்கது. பாவங்கள் செய்வதும் நற்காரியங்களை தவிர்ப்பதும் வறுமைக்கு இட்டுச்செல்லும்.
பெளதீக திட்டமிடல் – முயற்சி செய்வது
ஆனால் ரிஸ்க்கை பெற்றுக்கொள்வதற்கான மற்றொரு வழிமுறையாக பௌதீக காரணிகளை கருத்தில் எடுப்பதும் முயற்சி செய்வதும் அவசியம் என்பதை நாம் புரிய வேண்டும்.
இஸ்லாம் உழைப்பதை வலியுறுத்தியுள்ளது என்பதும் பிறரது தயவில் இருப்பதும் தங்கிவாழ்வதும் உழைக்க சக்தியிருந்தும் பிச்சை வாங்குவதும் பெரும் குற்றங்களாகும்.
எல்லா நபிமார்களும் சுயதொழில் செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.
“அதன் (பூமியின்) பல பாகங்களுக்கும் பரந்து சென்று அவனது ரிஸ்கை சாப்பிடுங்கள்”
: هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًا فَٱمْشُواْ فِى مَنَاكِبِهَا وَكُلُواْ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ (سورة الملك)
என்றும் “(ஜுமுஆ) தொழுகை முடிவடைந்து விட்டதால் பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்”
فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُواْ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُواْ ٱللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
என்றும் கூறியுள்ளான்.
லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனைப் பார்த்து “ஹலாலான உணவைத் தேடுவதன் மூலம் உதவி பெற்றுக்கொள். ஒருவருக்கு வறுமை வந்துவிட்டால் அவரது மார்க்க உணர்வு பலவீனப்பட்டு விடும். புத்தி மழுங்கி விடும். மனிதத்தன்மையை இழந்துவிடுவார். இதைவிட மோசமான இன்னொரு நிலையும் ஏற்படும். அதாவது மக்கள் அவரை மதிக்கமாட்டார்கள்” என்றார்கள்.
அபூ சுலைமான் அத்தாரானி (ரஹ்)அவர்கள் கூறினார்கள்:- “உனக்காக ஒரு சிலர் கஷ்ட்டப்பட்டு உழைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நீ (பள்ளிவாசலுக்கு) வந்து ஸப்பில் நிற்பது எமது கணிப்பீட்டில் ‘இபாதத்’அல்ல. மாறாக, உனது இரு ரொட்டிகளையும் முதலில் தேடி எடுத்துக் கொண்டு அவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பின்னர் இபாதத் செய்வீராக” என்றார்கள்.(மின்ஹாஜுல் காஸிதீன், இப்னு குதாமா:189,190)
நபி (ஸல்) அவர்கள்: ‘ நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தால் ஒரு பறவைக்கு உணவளிப்பது போல் அவன் உங்களுக்கு உணவளிப்பான். அது காலையில் வெறும் வயிற்றோடு சென்று வயிறு நிரம்பிய நிலையில் மாலையில் திரும்பி வருகிறது.’
– لو أنكم تتوكلون على الله حقَّ توكُّله ؛ لرزقكم كما يرزق الطيرَ : تغدوا خماصًا وتروح بطانًا .
أخرجه الترمذي (2344)، وابن ماجه (4164)، وأحمد (205) واللفظ له
என்றார்கள்.
இந்த ஹதீஸை நாம் அவதானித்தால், அந்தப் பறவை தனது கூட்டுக்குள் முடங்கி இருந்த போது அதற்கு அல்லாஹ் உணவளித்ததாகக் கூறவில்லை. மாறாக அது உணவைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்திருக்கிறது. தனது கூட்டில் இருந்து வெளியேறி மாலை வரை வெளியே இருந்திருக்கின்றது. அது தான் உண்மையான ‘தவக்குல்’ ஆகும். அதாவது முயற்சிக்குப் பின்னரான அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை. அந்த வகையில், ரிஸ்கைப் பெற்றுக் கொள்வதற்கான உயர்ந்த பட்ச ஏற்பாடுகளையும் நாம் செய்யவேண்டும்.
எனவே ரிஸ்க் எம்மை வந்தடைய நாம் செய்ய வேண்டியவை:-
✓ அல்லாஹ் நாடுவது அன்றி வேறு எதுவும் நடக்காது என்று நம்புவது.
✓ களா கத்ரை தவறாகப் புரியாமல் நாம் உச்சகட்டமாக முயற்சிகளில் இறங்குவது.
✓ பாவங்களைத் தவிர்த்து நற்கருமங்களில் அதிகம் ஈடுபடுவது.
✓ உழைப்பு முயற்சிகளில் ஈடுபடும் போது அல்லாஹ்வை மறந்து விடலாமல் இருப்பது.
✓ வறுமையிலிருந்து பாதுகாக்கும் படியும் ரிஸ்க் மென்மேலும் கிடைக்க வேண்டும் என்றும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்பது.
✓ உழைப்பை ஹலாலாக அமைத்துக்கொள்வது
✓ இபாதத்களை விட்டுவிடும் அளவுக்கு அல்லது அவற்றில் பொடுபோக்காக இருக்கும் அளவுக்கு உழைப்பில் மூழ்கி வந்துவிடாதிருப்பது.
✓ சொத்துக்களில் கடமையான ஸகாத்தை நிறைவேற்றுவது.
இதுதான் ரிஸ்க் பற்றிய சமநிலை பார்வையாகும்.
எனவே, உழைக்க வேண்டும். அதேநேரம் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்க வேண்டும். எமது முயற்சியும் அல்லாஹ்வின் நாட்டமும் இணைந்தாலே ரிஸ்க் கிடைக்கும்.
ரஸ்ஸாக்குடன் இறுக்கமான தொடர்பை ஏற்படுத்தி உழைப்பில் ஈடுபடும் உண்மையான மர்ஸூக்குகளாக இருப்போம். இன்ஷாஅல்லாஹ் நாடுவதே நடக்கும். அவன் தரும் ரிஸ்க் இன் அளவை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வோம்.




