அஷ்ஷைக் பளீல் (நளீமி)
தற்கால சூழலுக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் சம்பவங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன.
அங்கு கூறப்படும் சில தனிமனிதர்களதும் சமூகங்களதும் வரலாறுகளைப் பார்த்தால் தற்காலத்தில் உள்ள பலரது போக்குகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ளலாம்.
வலீத் இப்னு முகீரா:
நபியவர்களை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த வலீத் இப்னு முகீராவின் பண்புகளை அல்லாஹ் பின்வருமாறு சொல்கிறான்:-
“அவன் அதிகமாக சத்தியம் செய்யும் இழிந்தவனாகவும், பிறரை அதிகமாகக் குறை சொல்பவனாகவும், மக்கள் மத்தியில் குழப்பத்தை தூண்டும் பேச்சுக்களை பரப்புபவனாகவும், நற்காரியங்களை விட்டும் பிறரை அதிகம் தடுப்பவனாகவும், (பிறரது உரிமைகள் மீது) அத்துமீறுபவனாகவும், இறுக்கமான இயல்புடன் கூடிய கடின சித்தம் கொண்டவனாகவும் அதற்குமப்பால் அவன் இழிபிறப்பான். பண பலத்தையும் ஆண் பிள்ளைகளைகளையும் கொண்டவனாக இருந்ததனால் தான் அவன் இப்படி நடந்து கொண்டான். அப்படியானவனுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டாம்” (68:10-14)….
எனவே, அல்லாஹ் அவனைப் பற்றி மேலும் கூறும் போது: “இந்த செய்தியைப் பொய்யெனக் கூறுபவனையும் என்னையும் விட்டுவிடுங்கள்.(அவனை நான் கவனித்துக் கொள்கிறேன்) அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் நாம் கட்டம் கட்டமாகப் பிடிப்போம். அவர்களுக்கு நான் அவகாசம் வழங்குவேன். நிச்சயமாக எனது சூழ்ச்சி பலமானதாகும்.”(68:44-45)
இதே நபரைப் பற்றி சூரா அல்முத்ததிரில் அல்லாஹ் பின்வருமாறு சொல்லுகிறான்:-
“என்னையும் நான் யாரை தனியாக படைத்தேனோ அவனையும் விட்டுவிடுங்கள். (நான் அவனை கவனித்துக் கொள்கிறேன்). அவனுக்கு நாம் தொடர்ந்தும் வருமானம் தரும் சொத்துக்களையும் (அவன் போகும் இடமெல்லாம்) அவனுடன் எப்போதும் கூட இருக்கும் (அதிகாரமிக்க) ஆண் மக்களையும், சாதிப்பதற்கான எல்லாவகையான அதிகாரங்களையும் கொடுத்தேன். அப்படி இருந்தும் இன்னும் இன்னும் அதிகமாக நான் தர வேண்டும் என அவன் பேராசை கொள்கிறான். அவன் எதிர்பார்ப்பது நடக்காது அவன் எமது வசனங்களுக்கு எதிரானவனாகவே இருக்கிறான்.விரைவில் அவனை நாம் ஒரு கடினமான வேதனையில் ஆழ்த்திவிடுவோம்”(74:11-17)
உபை இப்னு கலஃப் என்பவன் பற்றிய பின்வரும் கருத்தை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்கிறான்:-
“குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். அத்தகையவன் செல்வத்தை சேகரித்து அதனை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை (உலகில்) நித்தியமாக நிலைத்திருக்கச் செய்யும் என்று அவன் எண்ணுகிறான்.(104:1-3)
ஃபிர்அவ்ன்
மூஸா(அலை) அவர்கள் அவனைப் பார்த்து:
“அல்லாஹ்வுக்கு எதிராக பெருமைடிக்க வேண்டாம்” (44:19) என்று கூறினார்கள். “இந்த கூட்டத்தார் குற்றவாளி சமூகம்”(22) என தனது இரட்சகனிடம் முறையிட்டார்கள்.
எனவே, பொய்ப்பித்து அடம்பிடித்த ஃபிர்அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அல்லாஹ் தண்டித்த விதம் பற்றி கூறும் போது:-
“அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் நீரூற்றுக்களையும் பயிர் நிலங்களையும் உயர்தரமான இடங்களையும் தாம் சந்தோசமாக அனுபவித்து வந்த வாழ்க்கை வசதிகளையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். அவ்வாறு அவற்றை நாம் வேறு ஒரு கூட்டத்தாருக்கு அனந்தரச் சொத்துக்களாக ஆக்கினோம். அவர்களுக்காக வானமோ பூமியோ அழவில்லை. அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவுமில்லை” (29)
ஸமூத் கூட்டம்
ஸாலிஹ் (அலை) அவர்களது ஸமூத் கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ்:
“தோட்டங்கள், நீரூற்றுக்கள், பயிர் நிலங்கள்,குலைகள் பழுத்துத் தொங்கும் ஈத்தம்பழ மரங்களைக் கொண்ட தோட்டங்கள் என்பவற்றில் (அவற்றைத் தொடர்ந்தும் அனுபவிப்பதற்கு) அப்படியே பாதுகாப்பாக நீங்கள் விட்டு விடப்படுவீர்களா? மிக சாமர்த்தியமாக மலைகளளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள். எனவே, அல்லாஹ்வைப் பயந்து எனக்குக் கட்டுப்படுங்கள்.வரம்புமீறிச் செல்பவர்களுக்கு கட்டுப்படாதீர்கள். அவர்கள் பூமியில் விஷமம் செய்கிறார்கள். சீர்திருத்தம் செய்வதில்லை.(26:146-152)
ஆத் கூட்டம்
ஹுத்(அலை) அவர்கள் தான் அனுப்பப்பட்ட ஆத் கூட்டத்தாரைப் பார்த்து:-
“நீங்கள் ஒவ்வொரு உயரமான இடங்களிலும்,பாதை ஒரங்களிலும் எவ்வித பயனும் தராத வெறுமனே பகட்டுக்காக வீணான நினைவுச் சின்னங்களை நிர்மாணிக்கிறீர்களா? என்றென்றும் நிரந்தரமாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் பெரும் மாளிகைகளை அமைக்கிறீர்களா? நீங்கள் யாரையும் தண்டித்தால் மிகக் கொடூரமாக அடக்கியாளுபவர்களாகத் தண்டிக்கிறீர்களே. எனவே, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்…..(26:128-131)
ஐக்கா வாசிகள்
ஷுஐப்(அலை) அவர்கள் அனுப்பப்பட்ட ஐக்கா வாசிகள் பற்றி அல்லாஹ்:-
“(வியாபாரத்தில்) அளக்கும் போது நிறைவாக அளந்து கொடுங்கள். (கொடுக்க வேண்டிய அளவை விட) குறைத்துக் கொடுப்பவர்களாக இருக்காதீர்கள். நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். மக்களுக்குக்குரிய பொருட்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்.பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்.உங்களையும் உங்களுக்கு முன்பிருந்த தலைமுறையையும் படைத்தவனைப் பயந்து கொள்ளுங்கள். என்று கூறினார்…..ஆனால் அவரை அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே, மேகத்ததுடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அது மகத்தான ஒரு நாளின் வேதனையாக இருந்தது. இதில் அத்தாட்சி இருக்கிறது அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை. நிச்சயமாக உமது இரட்சகன் தான் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இணையில்லா கிருபை உள்ளவனாகவும் இருக்கிறான்.” (26:181-191)
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களிலிருந்து பின்வரும் உண்மைகளை புரிய முடியும் :-
- வரலாறு நெடுகிலும் அதிகார வெறி பிடித்த அநியாயக்கார ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். தமது அவர்கள் தமது அதிகாரங்களையும் பண மற்றும் படைபலத்தையும் வைத்து தாம் நிரந்தரமாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார்கள்.
- அடிப்படையில் அதிகாரமும் சொத்து செல்வங்களும் பிள்ளைச் செல்வங்களும் அல்லாஹ் தரும் பாக்கியங்களாகும்.அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவற்றை கொடுக்கிறான். ஆனால் அவற்றை துஷ்பிரயோகம் செய்வது தான் குற்றம். அதிகாரத்தோடு சேர்ந்து இறைபக்தி பொறுப்புணர்வு, அடக்கம், பணிவு, சமூக நீதி, பொதுநலன் என்பன இருக்க வேண்டும் மாறாக அதிகார வெறி, பிறரை அடக்கி ஒடுக்கி அவர்களது இரத்தத்தை பிழிந்து வாழ வேண்டும் என்ற மமதை என்பன அல்லாஹ்வினால் ஒருபொழுதும் மன்னிக்கப்பட முடியாத குற்றங்களாகும்.
- அல்லாஹ் இத்தகைய விஷமக் காரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவான். தன்னைப் பயந்து வாழும்படி கட்டளையிடுவான். ஆனால் கட்டளைகள் உதாசீனம் செய்யப்படும் போது அவன் மிகக் கடுமையாக தண்டிப்பான்.
11.05.2022




