அஷ்ஷைக் பளீல்
பொதுவாக இலங்கையில் நடைபெறும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவ மாணவியர் தத்தமது அடையாள அட்டையில் உள்ள படி தமது ஆள் அடையாளத்தை பரீட்சை மண்டபத்தில் உள்ள பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு ஊர்ஜிதப் படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளனர். அந்த வகையில் தான் பரீட்சார்த்திகள் குறிப்பாக பெண் பரீட்சார்த்திகளது முகம் திறந்திருக்க வேண்டும் என சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகத்தை மூடி பரீட்சை எழுத எவரும் அனுமதித்கப்படமாட்டார்கள் என புதிய கல்வியமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், பரீட்சாத்தியின் இரு காதுகளும் திறந்திருக்க வேண்டும் என்ற சட்டமும் அண்மைக்காலத்தில் பரீட்சை திணைக்களத்தால் அமுல்நடத்தப்பட்டு வருகிறது.
மேற்படி சட்டம் வருவதற்கு காரணம் உள்ளது. கடந்த காலங்களில் முஸ்லிம் மாணவியரிற் சிலர் தமது தலையை மூடும் ஹிஜாபுக்குள் சில இலத்திரனியல் கருவிகளை மறைத்து வைத்திருந்து பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இந்தப் பரீட்சாத்திகள் ஹிஜாப் அணிவதற்கு தரப்பட்டிருக்கும் சலுகையை துஷ்பிரயோகம் செய்ததன் பின்னரே இப்படியான ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அனைவருக்கும் சேர்த்தே சட்டத்தை பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் மேற்படி சட்டத்தை நாம் இனவாதமாக பார்க்காமல் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் எந்தவொரு இலத்திரனியல் சாதனத்தையும் பரீட்சாத்தி மண்டபத்துக்குள் எடுத்துவரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்வதற்குமான சட்டமாகப் பார்ப்பதே நல்லது.
“நிர்பந்தமான சூழ்நிலைகளில் தடைசெய்யப்பட்டவையும் அனுமதிக்கப்பட்டவையாக மாறும்”
الضرورات تبيح المحضورات
என்ற இஸ்லாமிய விதியின் அடிப்படையில் ஒரு பெண் மறைக்க வேண்டிய காது போன்ற உடல் உறுப்புக்களை பிறருக்கு சாட்சியம் சொல்வது, சிகிச்சை பெறுவது போன்ற நோக்கங்களுக்காக (நீதிபதிக்கு/வைத்தியருக்கு) காட்ட முடியும் என்றிருப்பதனால் இதனையும் ஒரு நிர்ப்பந்தமான சூழலாகக் கவனத்திற் கொண்டு காதுகளை திறக்கும்படி அதிகாரிகள் கூறினால் திறந்து காட்டுவது பொருத்தமாக இருக்கும்.




