அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)
(17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாயிலில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) அவர்களால் நிகழ்த்தப்பட்ட விஷேட உரையின் எழுத்து வடிவம் இது.)
அன்பார்ந்தவர்களே! உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
அல்லாஹ் தனது தூதரை இந்த உலகத்திற்கு அனுப்பியதன் நோக்கம் பற்றி கூறும் போது: “உம்மை நாம் உலகத்தாருக்கான அருளாக அன்றி வேறெதற்காகவும் அனுப்பவில்லை”(21:107) என்று தெரிவிக்கிறான்.
இன்னும் ஓரிடத்தில், “உம்மை நாம் அனைத்து மனிதர்களுக்குமாகவே அன்றி அனுப்பவில்லை” (34:28) என்றும் கூறுகிறான்.
எனவே, நபியவர்கள் இவ்வுலகில் முழு மனித சமூகத்திலும் பாசத்தை, இரக்கத்தை, அன்பை, ஏற்படுத்துவதற்காக மட்டுமே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இங்கு முஸ்லிம்களுக்கு என்று குறிப்பிடாமல் ‘முழு உலகத்திலும் உள்ள அனைவருக்கும் (ஆலமீன், அந்நாஸ்) என்றே அல்லாஹ் தெரிவிக்கிறான்.
இஸ்லாத்தின் அடிப்படையான இலட்சியம் மானுட சமுதாயத்தின் சுபீட்சமும் உலகை வளப்படுத்துவதுமாகும்.உலகத்தின் அபிவிருத்தி,மனித இனத்தின் நலன்கள் என்பன இஸ்லாத்தினது தூதினதும் அதன் தூதரதும் ஏக இலக்குகளாகும்.
ஆனால், இஸ்லாம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் வன்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பின்புலமாக இருப்பதாகவும் அது உலகத்திற்கு ஒரு பீடையாக இருப்பதாகவும் தற்காலத்தில் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். முஸ்லிம் பெயர் தாங்கிகளிற் சிலர் இஸ்லாத்தைப் பிழையாக விளங்கி அட்டூழியம் செய்வதாலும் இஸ்லாத்தின் எதிரிகள து தீய நோக்குடனான பிரசாரத்தாலும் இஸ்லாம் மீது இந்த சேறு பூசப்படுகிறது.
நபியவர்கள் அனுப்பப்பட்டிருப்பதே அருளாக என்றால் இக்குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது. அருளுக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை.
குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள்
அல்குர்ஆனையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் அன்னாரது வாழ்வு முறையையும் நாம் சரிவர ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மையை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
- முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான பணி நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதுமாகும். அந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே வெற்றியாளர்களாவர்.இந்தக் கருத்தை குர்ஆன் இரண்டு இடங்களில் (3:104,110) கூறுகிறது. ‘மஃரூபை’ ஸ்தாபிப்பதும் ‘முன்கரை’ தடுப்பதும் இஸ்லாத்தின் இலக்காக இருக்கிறது. ‘மஃரூப்’ என்றால் மனித சமுதாயத்தின் அனைத்து அனுகூலங்களையும் குறிக்கும். ‘முன்கர்’ என்றால் மானுட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும் அனைத்து பிரதிகூலங்களையும் குறிக்கும்.
- நபியவர்கள் : “மனிதர்களிற் சிறந்தவர் மனிதர்களுக்கு அதிகம் பயன்மிக்கவராக இருப்பவராவார்.”(தபரானீ:அல்முஃஜமுல் அவ்ஸத், 6026 -அல்பானி-ஹஸன்) என்று ஒரு தடவையும் “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர் மக்களுக்கு அதிகம் பயனளிப்பவராவார்” (தபரானீ: அல்முஃஜமுல் அவ்ஸத்,6026- அல்பானி- ஸஹீஹ்) என்றும் கூறியிருக்கிறார்கள். பயனளிப்பது என்றால் அறிவு கற்பிப்பது,தான தர்மம் செய்வது, ஆலோசனை வழங்குவது, ஆட்சி அதிகாரத்தை மனித வர்க்கத்தின் உயர்ச்சிக்காகப் பயன்படுத்துவது, இடர்களைக் களைவது போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
- “ஒருவர் ஒரு பாதையில் நடந்து செல்கிறார். அங்கு முற்களைக் கொண்ட மரக்கிளையொன்று நடைபாதையில் இருக்கக் காண்கிறார். அதனை அவர் அப்புறப்படுத்தியதனால் அவருக்கு அல்லாஹ் நன்றி செலுத்தி அவரது பாவங்களை மன்னித்தான்” (புஹாரி-652, முஸ்லிம்-1914) என்று நபிகளார் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
பாதையில் கிடக்கும் முற்களைக் கொண்ட ஒரு கிளையை அகற்றுவதற்கே சர்வ வல்லமையும் கொண்ட படைப்பாளனின் நன்றியரிதலும், பாவங்களுக்கான மன்னிப்பும் இவ்வளவு பெரிய பாக்கியங்களும் கிடைக்கின்றன என்றால் உலகத்தில் இருந்து அட்டூழியத்தை, தீமைகளை, அக்கிரமத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய நன்மை கிடைக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாமல் இருக்கிறது.
- எனவே, இஸ்லாம் அன்பின் மார்க்கம். அது உலகிற்கான ஒரு பாக்கியம்.யாரிடத்தில் அன்பும் பரிவும் பாசமும் காணப்படுகிறதோ அவர் தன்னளவில் நற்காரியங்களில் ஈடுபடுவது மாத்திரமல்ல, யாரெல்லாம் நற்காரியங்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு அவர் உறுதுணையாகவும் இருப்பார்; அவர்களோடு கூட்டுச் சேருவார்; அவர்கள் யாராக இருந்தாலும் அதுபற்றி அவருக்குக் கவலை கிடையாது. அவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களது இரக்க சுபாவத்தின் காரணமாகவே அவர்களைச் சூழ தோழர்கள் அணிதிரண்டதாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின்(அருளின்) காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக”(3:159)
நபியவர்கள் இரக்கமானவராக இருந்ததால் தான் மென்மை, பிழைபொறுப்பது, கலந்தாலோசிப்பது போன்ற பண்புகள் அவர்களிடம் காணப்பட்டதை நாம் அறிகிறோம்.
- அல்குர்ஆனில் அல்லாஹ்: “நல்ல காரியங்களுக்காகவும் இறையச்சத்துக்காகவும் நீங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள்;பாவ காரியங்களுக்காகவும் அத்துமீறல்களுக்காகவும் நீங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்” (05:02) என்று கூறுகிறான்.
எனவே, நற்காரியங்களுக்காக பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்வது அன்பின் பாற்பட்ட விடயமாகும்.
- ரசூல்(ஸல்) அவர்களுக்கு 20 வயதாக இருந்த போது ’ஹில்புல் புளூல்’ எனப்படும் ஓரு சங்கத்தின் பணிகளில் சம்பந்தப்பட்டார்கள். அது பனூ ஹாஷிம், பனூ உமய்யா போன்ற குறைஷிக் கோத்திரத்திரங்களது தலைவர்கள் இணைந்து அநியாயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சங்கமாகும். அந்த சங்கம் யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை விட அது ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே முக்கியமானது என நபிகளார் கருதினார்கள். முஸ்லிம் அல்லாதவர்களால் இது போன்ற நன்நோக்கத்துடன் ஒர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அதில் தன்னை ஒரு முஸ்லிம் சம்பந்தப்படுத்திக் கொள்கின்ற பொழுது அது அன்பின் பாற்பட்டதாகவே இருக்கும்.
ஒரு முஸ்லிம் மனித சமுதாயத்தின் உயர்ச்சிக்காக, தேச நிர்மாணத்துகாகாக தனது பங்களிப்பை வழங்க வேண்டிய இடங்களிலெல்லாம் முன்வந்து வழங்குவான். காரணம் அவனிடத்தில் மனித சமுதாயத்தின் மீது இரக்கம்,அன்பு,பாசம் காணப்படுகிறது.
- யூஸுப்(அலை) அவர்கள் சிறையில் இருந்த போது எகிப்து நாடு அடுத்த ஏழு வருடங்களில் கடுமையான பஞ்சத்துக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என எதிர்வு கூறப்பட்டது. அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தன்னிடம் திட்டமொன்று இருப்பதை அந்நாட்டு அரசனுக்கு யூஸுப்(அலை) அவர்கள் கூறியதுடன் அதற்கு செயலுருவம் கொடுப்பதற்கு தன்னை அந்த தேசத்தின் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கும் படி அந்த அரசனை வேண்டிக் கொண்டார்கள். தன்னிடத்தில் இருந்த பொருளாதார நிபுணத்துவம், அறிவு, ஆற்றல் என்பவற்றை தேசத்துக்கு வழங்குவதற்கு யூசுப் (அலை) முன்வருகிறார்கள். அது முஸ்லிமல்லாதவர்கள் வாழ்ந்த ஒரு தேசம். அரசனும் முஸ்லிம் அல்லாதவராகவே இருந்தார். அப்படியிருந்தும் யூஸுப்(அலை) அவர்கள் தன்னை நிதி மந்திரியாக நியமிக்கும் படி கேட்டுக் கொண்டது மாத்திரமல்ல அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் தனது சேவையை இதயசுத்தியோடு,முழுமையாக வழங்கி அந்நாட்டுக்கு தனது பங்களிப்பை அவர்கள் வழங்கி நாட்டை பொருளாதார வளம்மிக்க நாடாக மாற்றினார்கள்.
எனவே, ஒரு முஸ்லிம் தான் வாழுகின்ற நாட்டை – அது எத்தகைய ஒரு நாடாயினும்- கட்டியெழுப்புவதற்கு தன்னாலான பங்களிப்பை செய்கிறான் என்றால் அது அவனது அன்பின், பாசத்தின், மனித சமுதாயத்தின் மீது கொண்ட பற்றின் வெளிப்பாடாகும்.
- ஃபிர்அவ்னின் கொடூரமான கரங்களில் சிக்கியிருந்த பனூ இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவதற்கு நபி மூஸா(அலை) அவர்கள் துணிச்சலாக முன்வருகிறார்கள்.
பிர்அவ்னின் அடக்குமுறை ஆட்சி பற்றி கூறும் போது அல்லாஹ்: “நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.”(28:04) என்றும் குறிப்பிடுகிறான்.
இவ்வாறான மிக நெருக்கடியான காலகட்டத்தில் மூஸா (அலை) அவர்களும் அவரது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களும் பிர்அவுனிடம் சென்று அந்தக் கூட்டத்தாரை விடுவிக்க வேண்டும் என அல்லாஹ் அவ்விருவரையும் பணித்தான்:-
“ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: ‘நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும், அவர்களை வேதனைபடுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக’ என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47)
மூஸா(அலை) அவர்கள் அந்த பனூ இஸ்ரவேலர்கள் மீது கொண்ட பற்றின், பாசத்தின் வெளிப்பாடாக இது அமைகிறது. அடக்குமுறையின் போது மூஸா(அலை) வாய்மூடி, தானும் தன் பாடும் என்று ஒதுங்கியிருக்கவில்லை.கொடுங்கோலன் ஃபிர்அவ்னுக்கு முன்னால் நின்று தனது கருத்தை தெளிவாகச் சொல்லுகின்ற நபி, சமூகத்தின் மீது கொண்ட பாசத்தை இவ்வாறு தான் வெளிப்படுத்துகிறார்.
- ஷுஐப் (அலை) அவர்கள் தான் வாழ்ந்த நாட்டு மக்களது பிரதானமான பாவமான பொருளாதார சுரண்டலையும் அராஜகத்தையும் எதிர்த்தார்கள்.அந்த சமூகம் அளவை, நிறுவையில் மோசடி செய்தும் பூமியில் விஷமம் செய்தும் வாழ்ந்து வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் : “(என்) சமூகத்தவர்களே! அளவை, நிறுவை விடயமாக நீதியாக நடந்து அவற்றை நிரப்பமாகச் செய்யுங்கள்.(மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய உரிமைகளைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.”(11:85) என்று மிகவும் தைரியமாக அங்கு குரல் எழுப்பினார்கள்.
- நபி லூத்(அலை) அவர்கள் தனது சமூகத்தில் இருந்த ஒருபாலுறவு எனும் பயங்கரமான ஒழுக்கக் கேட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.“உலகத்தார்களில் நீங்கள் ஆண்களிடம் வருகின்றீர்களா? இன்னும்,உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.” (26:165,166) என்று கூறினார்கள்.
குடும்ப அமைப்புக்கு வேட்டு வைக்கும், சுகாதார ரீதியான பாதிப்புக்களுக்குக் காரணமாக அமையும் அக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் நபி லூத்(அலை) அவர்களது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகினார்கள்.
எனவே, ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடுகின்றது போது ஒரு முஸ்லிம் பார்வையாளனாக ஒரு போதும் இருக்கமாட்டான். அச்சமூகத்தின் மீது கொண்ட அன்பை அவன் தனது எதிர்ப்பின் மூலமாக வெளிப்படுத்தி சமூகத்தில் ஒழுக்க மேம்பாட்டை ஏற்படுத்த தன்னாலான சகலவற்றையும் செய்வான் என்பதை லூத்(அலை) அவர்களது நிலைப்பாட்டிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
- நபி சுலைமான் (அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த பல்கீஸ் அரசி பொதுவாக அரசர்களைப் பற்றி பின்வருமாறு கூறியதாக குர்ஆனிலே அல்லாஹ் சொல்கிறான். “அரசர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்தால் அதனை சீர்குலைப்பார்கள். அங்குள்ள கண்ணியமானவர்களை அவமானப்படுத்துவார்கள்” (27:34)
நபி(ஸல்) அவர்களுக்கும் அவரது தோழர்களுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்த நயவஞ்சகர்களில் ஒருவனது பண்பு பற்றி குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது:-
“அவன், அதிகாரப் பொறுப்பை எடுத்தால், பூமியில் சீர்குலைவை ஏற்படுத்தவும் பயிர்களையும் கால்நடைகளது கன்றுகளையும் அழிக்கவும் முயற்சிகளை எடுப்பான். அல்லாஹ் சீர்குலைப்பதை விரும்புவதில்லை.” (2:205)
எனவே, பொதுவாக சுயநலமிக்க ஆட்சியாளர்கள் உலகத்தில் விஷமம்-குழப்பம் செய்வதாகவும் மோசமான கருமங்களில் ஈடுபடுவதாகவும் அல்லாஹ் சொல்லுகிறான்.
அப்படியாயின் இஸ்லாம் விஷமத்தனத்தை, அக்கிரமத்தை, வன்முறையை விரும்பாத,அவற்றை நிராகரிக்கும் மார்க்கமாகும். மனித சமுதாயத்தின் மீது இரக்கம் கொண்ட வல்லவன் அல்லாஹ்வின் மார்க்கம் இப்படித்தான் இருக்கும். மோசமான ஆட்சியாளர்களின் பிடியிலிருந்தும் இழிநிலையில் இருந்தும் மனித சமுதாயத்தை விடுவிப்பது அதன் இலக்காகும். எனவே, பயங்கரவாதம், தீவிரவாதம், வன்செயல்கள் என்பன இஸ்லாத்திற்கு மிக மிக அன்னியமானவை.
- நபிகளார் (ஸல்) அவர்கள்: “முஃமின் (விசுவாசி, பாதுகாப்பு வழங்குபவர்) யார் என்று நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று தனது தோழர்களைக் கேட்டு விட்டு,“முஃமின் என்றால், மக்கள் தமது சொத்துக்கள் உயிர்கள் விடயத்தில் அவனது தீங்குகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள். முஸ்லிம் (விடுதலை கொடுப்பவன்) என்றால் அவனது நாவினதும் கைகளதும் தீங்குகளில் இருந்தும் மக்கள் விடுபட்டிருப்பார்கள்” (தஹ்ரீஜ் ஷரஹிஸ் ஸுன்னா-ஷுஐபுல் அர்னாஊத்:14) என்று கூறினார்கள்.
எனவே, உண்மையான ஒரு முஸ்லிம் பிறரது சொத்துகளிலோ உயிர்களிலோ கை வைக்கமாட்டான். அவனது நாவையும் கையையும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்யப் பயன்படுத்தமாட்டான். ஒரு முஸ்லிமிடமிருந்து வன்செயல்களோ, தீவிரவாதமோ வெளிப்படமாட்டாது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்கிறோம். அச்சு, இலத்திரனியல், சமுகவியல் ஊடக சாதனங்கள் முஸ்லிமால் ஆக்க வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இது தான் அன்பின் வெளிப்பாடு.
- “இரக்கம் காட்டுபவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுவான். பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கமாக நடந்துகொள்ளுங்கள். வானத்தில் உள்ளவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான்” (அபூதாவூத்-4941,திர்மிதீ-1924) என்றும் “யார் மக்கள் மீது இரக்கம் காட்டவில்லையோ அவர்கள் மீது இரக்கம் காட்டப்படமாட்டாது” (ஸஹீஹுல் புஹாரி-6013) என்றும் நபியவர்கள் கூறினார்கள்.
எனவே, இரக்கமுள்ள மனிதன் மனித சமுதாயத்தின் மீது அக்கறையோடு இருப்பான். மனித சமுதாயத்தின் உயர்வை தனது உயர்வாகவும் அதன் வீழ்ச்சியை தனது வீழ்ச்சியாகவும் கருதுவான்.
மவ்லானா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் “முஸ்லிம்களது வீழ்ச்சியினால் உலகம் அடைந்த நஷ்டம் என்ன?”(மாதா கஸிரல் ஆலமு பின்ஹிதாதில் முஸ்லிமீன்) என்று ஒரு நூலை எழுதினார்கள். முஸ்லீம்கள் இவ்வுலகில் ஆட்சி அதிகாரத்தோடும், அறிவுத் தலைமையைப் பெற்றும்,பொருளாதார ரீதியான சுபீட்சத்தோடும், இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டும் வாழ்ந்த காலப் பிரிவில் முழு உலகமும் அவர்களது சேவையை பெற்றது; பயனடைந்தது; உயர்வடைந்தது. ஆனால், முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்த பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலகத்துக்கே நஷ்டம் ஏற்பட்டது என்ற கருத்தை அவர்கள் அந்நூலில் ஆதாரங்களுடன் தெளிவாக விளக்குகிறார்கள்.
இலங்கைத் தேச நிர்மாணத்தில் முஸ்லிம்கள்
இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்த நாட்டின் மீதும் அதன் குடிமக்கள் மீதும் பாசம் வைத்திருந்ததால்- இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருந்ததனால்- இந்தநாட்டுக்கு தம்மாலான சகல பங்களிப்புகளையும் செய்திருக்கிறார்கள். இந்த நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கும் தமது உச்சகட்ட பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.
- போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இந்த நாட்டு மக்களை பிரித்து, சொத்துக்களையும் நாட்டின் வளங்களையும் சூறையாடிக் கொண்டிருந்த போது, இலங்கையின் மன்னர்களுக்கு முஸ்லிம்கள் விசுவாசமாக நடந்தார்கள்; பொருளாதாரத்தை வளர்த்தார்கள்.
- யாப்பஹுவ அரசன் முதலாம் புவனேகபாகு (1272-1284) அபூ உதுமான் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு தூதுக் குழுவை எகிப்திய சுல்தானிடம் அனுப்பி வைத்தான். அத்தூதுவர் ‘இலங்கையின் இளவரசர்’ (Prince of Ceylon) என வர்ணிக்கப்பட்டிருந்தார். பொலனறுவைக் காலத்தில், 1154ல் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக சபையில் நான்கு முஸ்லிம் ஆலோசகர்கள் இருந்ததாக அரபுப் புவியியலாளர் இத்ரீஸீ கூறும் கருத்து பிழையாக இருக்க முடியாது என இலங்கையின் தொல்பொருளியலாளர் எஸ். பரணவிதாரண குறிப்பிடுகிறார்.
- 13ம் நூற்றாண்டைத் தொடர்ந்து நாட்டில் ஸ்திரமற்ற நிலை உருவாகி, தலைநகர் இடத்துக்கிடம் நகர்ந்து கொண்டிருந்தது. உட்பூசல்களும் மற்றும் எதிரிகளது நெருக்குதல்களும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை நலிவுறச் செய்தன. குறிப்பாக, விவசாயம் பாதிக்கப்படட்ட போது கைகொடுக்கும் துறையாக வர்த்தகமே அமைந்திருந்தது. உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் முஸ்லிம்கள் தான் கால் பதித்திருந்தனர். எனவே, இந்த இக்கட்டான கட்டத்தில் முஸ்லிம்களது பணி குறிப்பிடத்தக்கதாகும்.
- முஸ்லிம்கள் இந்த நாட்டின் வர்த்தகத்துக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பாக ‘தவளம’ முறை காணப்பட்டது. மன்னர்களது காலத்தில் நாட்டின் உட்பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தற்போதிருப்பது போன்ற பாதையமைப்பு இருக்கவில்லை. எனவே, அங்கு காணப்பட்ட அடிப்பாதைகளில் மாடுகளின் முதுகுகளில் பொருட்களை ஏற்றி முஸ்லிம்கள் அவற்றை இடத்துக்கிடம் நகர்த்தினார்கள். இது ‘தவளம்’ முறை எனப்பட்டது.
- முஸ்லிம்கள் அரண்மனையின் ‘முல்தங்கே’ எனப்படும் அரச சமையலறை வேலைகளைக் கவனிக்கும் திணைக்களத்தில் பணிபுரிந்தார்கள். அரசனின் பாதுகாப்பையும், உயிருக்கும் உடல்நலனுக்குமான உத்தரவாதத்தையும் அதிகபட்சம் நிர்ணயிக்கும் இடமான சமையலறைப் பகுதியில் முஸ்லிம்கள் பணிபுரிந்தமை சிங்கள முஸ்லிம் உறவானது பரஸ்பர நம்பகத் தன்மை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்தமையை விளக்குகிறது.
- ஹகீம்கள் எனப்பட்ட முஸ்லிம் வைத்தியர்கள் இலங்கையிலுள்ள சகல மக்களுக்கும் தமது வைத்திய சேவையை பாரபட்சமற்ற விதத்தில் வழங்கினார்கள்.
- 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் பிரபலமான முஸ்லிம் கட்டடக் கலைஞர்களது கைவண்ணத்தால் பல முக்கியமான கட்டடங்கள் குறிப்பாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டன. கட்டட நிர்மாணப் பணிகளில் வாப்புச்சி மரைக்காயருடன் இணைந்து அவரது மகன் W.M. அப்துர் ரஹ்மானும் வழங்கிய பங்களிப்புக்கள் இன்றும் எமது கண்முன்னே தென்படுகின்றன. இலங்கையின் தேசிய கண் வைத்தியசாலை, மருதானை புகையிரத நிலையம், அரும்பொருட் காட்சிச்சாலை (Museum), கோல் ஃபேஸ் ஹோட்டல், பழைய பிரதான தபாலகம்(G.P.O) பழைய நகர மண்டபம் போன்றன அவர்களது கைவண்ணத்தால் உருவான கட்டடங்கள்.
- நம் தேசத்துக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க ரீ.பீ. ஜாயா போன்ற முஸ்லிம் தலைவர்கள் வழங்கிய பங்களிப்பை எவரும் மறக்க முடியாது.
இது போன்ற பல உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
சுதேச ஆட்சியாளர்களது நன்மதிப்பை முஸ்லிம்கள் பெற்றிருந்தனர். ஆட்சியாளர்களும் அவர்களுக்குக் கடமைப்பட்டிருந்தனர்.
எனவே, இலங்கைக்கு முஸ்லிம்களது பங்களிப்பு வரலாறு நெடுகிலும் கிடைத்து வந்திருக்கிறது. முஸ்லிம்களிடத்தில் இரக்கம்,பாசம் என்பவற்றின் அடியாகப் பிறந்த நாட்டுப் பற்று இருந்தனால் அவர்கள் இவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள்.
ஒரு உண்மையான முஸ்லிம் தனது சேவையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோருக்கும் வழங்க முன்வருவான். பிறரது வளர்ச்சியே தனது வளர்ச்சி என்று நினைப்பான். அவன் ஒரு பொதுநலமி. சுயநலமியல்ல.பிறர் கஷ்டப்படுகிற பொழுது அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கும்.
நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது “உங்களிடத்தில் உங்களுக்கு மத்தியிலிருந்தே ஒரு தூதுவர் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டப்படும் போது அவரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. உங்கள் விடயமாக அவர் மிகவும் கரிசனையோடு இருக்கிறார்”(9:128) என்கிறான்.
எமது சேவை வேண்டப்படுகின்ற போதெல்லாம் நாம் அந்த சேவையை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். எங்களுக்கு அல்லாஹ் திறமைகளை, ஆற்றல்களை, அனுபவங்களை, அறிவுகளை, அதிகாரங்களை தந்திருந்தால் அவற்றை இவ்வுலகின் மலர்ச்சிக்காக, எழுச்சிக்காக நாம் பயன்படுத்தவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள்: “நன்மையின் திறப்புகளை (Keys) யாருடைய கையில் அல்லாஹ் கொடுத்து வைத்திருக்கின்றானோ அவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும். தீமையின் திறவுகோல்களை யாருடைய கையில் அல்லாஹ் கொடுத்து வைத்திருக்கிறானோ அவருக்கு கேடு உண்டாகட்டும்!” (இப்னு மாஜா:237,ஸஹீஹ் அல்பானீ:2223) என்று சொன்னார்கள்.
எனவே, பிறரது உயர்ச்சிக்காக உழைப்பது ஒரு முஸ்லிமின் அடிப்படையான பண்பு. அது தான் அன்பு, கருணை. பிறரை தனது நாவினால் கைகளினால் துன்புறுத்துவது என்பது அவனுக்கு அன்னியமான பண்பு.
ஆனால், முஸ்லிம்களிற் சிலரது மோசமான நடவடிக்கைகளை வைத்து இஸ்லாத்தின் தூதை விமர்சிப்பது எவ்வகையிலும் முறையானதல்ல. ஆகவே, இஸ்லாத்தின் போதனைகளைப் பார்த்து விட்டுத் தான் முஸ்லிம்கள் பற்றிய தீர்மானத்துக்கு வரவேண்டும்.
எனவே, ரஹ்மத் எனும் அன்பின் வெளிப்பாடுகள் இரண்டாகும். மனித சமுதாயத்தின் உயர்ச்சிக்காக எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்வது. மனித சமுதாயத்தில் இருக்கின்ற சகல தீமைகளையும் அதன் முன்னேற்றத்துக்கான சகல தடைகளையும் அகற்றுவது.
மீண்டும் அல்குர்ஆனுடைய வசனத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.”நபியே உம்மை நாம் உலகத்துக்கான அருளாக அன்றி வேறு எதற்காகவும் அனுப்பவில்லை.”




