அஷ்ஷைக் பளீல் நளீமி
மாஷா அல்லாஹ் இன்று (வியாழக்கிழமை) உலகத்தின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற் கொண்டும் பின்வரும் ஹதீஸில் வந்துள்ள சிறப்புக்களை அடைந்து கொள்ளவும் பலரும் நோன்பிருந்திருக்கிறார்கள்:-
تُعرض الأعمال يوم الاثنين والخميس ، فأحب أن يعرض عملي وأنا صائم ) رواه الترمذي (747)
“(ஒவ்வொரு) வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காண்பிக்கப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் எடுத்துக் காண்பிக்கப்படுவதை விரும்புகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
அல்லாஹ் அவர்களது நோன்பை ஏற்று பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக!
ஆனால், பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ள விவகாரத்தை சற்று நுணுக்கமாக நோக்குவோம்:-
تُفتَحُأبوابُ الجنَّةِ يومَ الاثنينِ و الخميسِ، فيغفرُ اللهُ عزَّ وجلَّ لِكلِّ عبدٍ لا يُشرِكُ باللهِ شيئًا، إلَّا رجلًا كانَ بينَه وبينَ أخيهِ شحناء، فيقول: أنظروا هذينِ حتَّى يصطلحا، أنظِروا هذينِ حتَّى يصطلِحا ،أنظِروا هذينِ حتَّى يصطلِحا -أخرجه مسلم (2565)
“(ஒவ்வொரு) திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. அப்போது அல்லாஹ்விற்கு எதனையுமே இணை வைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவான். ஆனால், ஓர் அடியானைத் தவிர அவனுக்கும் அவனது சகோதரனுக்கும் இடையில் பகைமை இருக்கும். எனவே, அல்லாஹ் (மலக்குகளிடம்) ‘அவர்கள் இருவரும் இணக்கப்பாட்டுக்கு வரும் வரையில் அவர்கள் இருவரையும் விட்டு வையுங்கள்’, ‘அவர்கள் இருவரும் இணக்கப்பாட்டுக்கு வரும் வரையில் அவர்கள் இருவரையும் விட்டுவிடுங்கள் ஒன்று சேரும் வரை விட்டு வையுங்கள்’ என்று (இரண்டு தடவை) கூறுவான்”. (முஸ்லிம் 2565)
அதாவது நோன்பு நோற்றிருந்தாலும் பகைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த நோன்பின் கூலி கிடைக்கமாட்டாது என்பதோடு பாவமன்னிப்பும் கிட்டமாட்டாது என்பது இந்த ஹதீஸ் சொல்லுகின்ற தெளிவான கருத்தாகும் .
எனவே, இந்த கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பலருடைய உயிரை காவு கொண்டிருக்கின்ற இந்த இக்கட்டான நிலையிலும் கூட வாழ்க்கை என்பது நிச்சயமற்றது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் எவரோடாவது பகைத்துக்கொண்டிருந்தால் உடனடியாக சமாதானம் செய்து கொள்வதும் பகையை மறந்து பேசிக் கொள்வதும் அவசியமாகும்.
வியாபாரப் பகை, காணிக்கான பகை, அரசியலுக்கான பகை என்று பகைகள் பலவகைப்படும். அது எந்த வகையாக இருந்தாலும் அவருடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது தான் தெளிவான உண்மையாகும்.
உடனடியாக சமாதானம் செய்து கொள்வதற்கும் பகைமையை நீக்கிக் கொள்வதற்கும் இந்த அபாயகரமான கால சூழலை அருமையான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
நிச்சயமற்ற வாழ்க்கையில் பகைமையும் குரோதமும் எதற்கு? எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுப்போம்.மீட்ட வேண்டிய உரிமைகளை மீட்டி மனங்களை வென்று கொள்வோமாக.
தொலைபேசி அழைப்புகளை எடுத்தாவது மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உறவு முறைகளைப் பலப்படுத்திக் கொள்வோம்.
ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் எவரையும் பகைத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதனால் தான் திங்களுக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட அந்த அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்வோமாக!
لا يحل لرجل أن يهجر أخاه المسلم فوق ثلاث ، يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام ) رواه البخاري ( 5727 ) ومسلم ( 2560 )
“ஒருவர் தனது சகோதர முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் புறக்கணித்திருப்பது கூடாது.இருவரும் சந்தித்து அவருக்கு இவர் முகம் கொடுக்கட்டும். இவர் அவருக்கு முகம் கொடுக்கட்டும். முதலில் சலாத்தை ஆரம்பிப்பவர் தான் அவர்கள் இருவரின் சிறந்தவர் ஆவார்(புகாரி, முஸ்லிம்)




