அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கருதிக் கொண்டு ரமழான் கால யாசகம் மற்றும் மதரஸா வசூல் ஆகிய இரண்டையும் நிறுத்துவது தொடர்பாக முஸ்லிம் சமூகம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
யாசகம் கேட்டல்
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பிச்சை எடுப்பதில் சம்பந்தப்பட்டிருந்தாலும் ரமலான் காலத்தில் வழக்கமாக பல மடங்காக அவர்களது தொகை அதிகரிக்கும். பள்ளிவாயல்களின் நுழைவாயில்கள் அருகே பலர் நிற்பார்கள். கடைகளில் பலர் ஏறி இறங்குவார்கள். முஸ்லிம் ஆண்கள் எப்படி போனாலும் பல பெண்கள் பாலருந்தும் கைக் குழந்தைகளைத் தூக்கிய வண்ணமும் குமரிப் பெண்களும்.தொப்பி அணிந்த தாடிவைத்த ஆண்களும் கெஞ்சிக் கொண்டு கடைகளுக்கு முன்னால் அலங்கோலமாக நின்று கொண்டிருப்பார்கள். முஸ்லிம்களது கடைகளைகளுக்குள் மட்டுமல்ல முஸ்லிமல்லாதவர்களது கடைகளுக்குள்ளும் தனியாகவும் கூட்டாகவும் நுழைந்து அவமானப்படுவார்கள்.பலபோது ஏச்சுப்பட்டுக் கொண்டு திரும்புவார்கள். உண்மையில் அது அவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட அவமானம் அல்ல.முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானமாகும்.
ஆனால், இவ்வருட ரமழானில் இவ்வாறு பிச்சைக்காக தெருக்களில் அலைவதும் பள்ளிவாயல்களுக்கு முன்னால் நிற்பதும் அதற்காக தூர இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாகவோ தனித்தனியாகவோ பஸ்களில் மூட்டை முடிச்சுக்களோடு பயணம் செய்வதும் பிற சமயத்தவர்களது கடைகளில், முஸ்லிம்களது கடைகளில் நுழைவதும் தற்போதைய சூழலில் மிக ஆபத்தானதாகும்.அவ்வாறு யாசகம் கேட்போர்:
- நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளால் கடும் சோதனைகளுக்கு உட்படலாம்.பொலீசில் அடைக்கப்படலாம்.
- துவேஷிகளால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் நையாண்டிகளுக்கும் உள்ளாக்கப்படலாம்.
- முஸ்லிம் சமூகத்தில் எஞ்சியுள்ள மானம் மரியாதையும் மீண்டும் குறைந்து போகலாம்.
எனவே, நடந்து முடிந்த சம்பவங்களை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்திலிருந்து யாசகத்தை ஒழிக்க இந்த ரமழானில் இருந்து கங்கணம் கட்டி செயல்படுவோமாக!.அதற்காக பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸகாத் கமிட்டி, தனவந்தர்கள், தன்னார்வ நிறுவனங்கள்,முஸ்லிம் சமூக சிவில் அமைப்புக்கள், அனைவரது ஒத்துழைப்புகளும் தேவை.
- குடும்ப அமைப்பை பலப்படுத்த வேண்டும். பிள்ளைகளால் கவனிக்கப்படாத தாய்,தகப்பன் பிச்சையெடுக்கிறார்கள்.தாய் தகப்பனால் கைவிடப்பட்ட பிள்ளைகள் பிச்சையெடுக்கிறார்கள். உறவு ஜனங்கள் உதவி செய்யாததனால் வறுமையில் வாடுவோர் யாசிக்கிறார்கள். எனவே, இது விடயமாக உலமாக்கள், கல்விமான்கள் பல முயற்சிகளை எடுத்தாக வேண்டும்.
- பல ஊர்களில் ஸகாத் கமிட்டிகள் இயங்கினாலும் அவற்றுக்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பு போதாமல் இருக்கிறது. எனவே,அவை பலப்படுத்தப்பட வேண்டும். அவை மேலும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
- உடனடி நடவடிக்கையாக எல்லா பள்ளிவாயில்களிலும் பின்வரும் அறிவித்தலானது அறிவித்தல் பலகையில் தொங்கவிடப்பட வேண்டும்:-
“ நாட்டின் பாதுகாப்பு நிலையை கவனத்தில் கொண்டு எமது ஊரைச் சேர்ந்த எவரும் பிச்சை எடுப்பதற்காக குறிப்பாக ரமழானில் எங்கும் செல்ல வேண்டாம் என நிர்வாகசபை சம்பந்தப்பட்டவர்களை பணிவாக வேண்டிக் கொள்கிறது. இந்தத் தடையை மீறி எவராவது சென்று பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.அதற்கு பள்ளி நிர்வாகமோ ஊராரோ பொறுப்பாக இருக்கமாட்டார்கள்”
— இப்படிக்கு நிர்வாகசபை
இம்முறை யாசகத்துக்காக சிலர் போகலாம் என கருதப்படும் ஊர்களில் உள்ள அனைவருக்கும் இந்த அறிவித்தல் கிட்டும் வகையில் மேலதிகமான ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்ய வேண்டும்.
இந்த அறிவுறுத்தலின் பின்னரும் எவராவது யாசகம் கேட்க வீடுகளுக்கோ பள்ளிவாயில்களுக்கு கடைகளுக்கோ வரும் பட்சத்தில் அவர்களோடு அன்பாக உரையாடுவதும் அவர்களது ஆள் அடையாள அட்டைகளை பரிசோதித்து அவர்களது ஊர்களை ஊர்ஜிதப்படுத்தி அந்த ஊர் மக்களோடு அல்லது நிர்வாக சபைகளோடு தொடர்பு கொள்ள முடியும். உங்கள் ஊரில் இவர்களுக்கான உதவிகளை நீங்கள் செய்து கொடுக்க வேண்டும். அப்படியான ஒரு சூழ்நிலை இல்லாதிருப்பதனால் தான் இவர்கள் இவ்வாறு வந்திருக்கிறார்கள் என்று ஞாபகமூட்டவேண்டும்.
இப்படி நாம் கூறும் போதும் உண்மையாகவே வறுமையில் வாடுகின்ற காரணத்தினால் பிச்சை எடுப்போர் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான். இப்படியான ஏற்பாடுகள் உண்மையான ஏழைகளைப் பாதிக்கும்.எனவே, இத்தகையவர்களுக்கு ஊர்களில் தொழில்வாய்ப்புக்களை செய்து கொடுக்கவும் தொழில் வழிகாட்டல்களை வழங்கவும் முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தரத்தை கூட்டவும் பிரதேச வாரியாகவும் தேசிய ரீதியாகவும் ஏற்பாடுகள் அவசியம்.
ரமலான் ஈகையின் மாதம். தர்மம் என்பது நோன்பாளிகளின் பிரதான பண்பு. எனவே, உண்மையாகவே கஷ்டத்தோடு இருப்பவர்கள் எம்மிடத்தில் வருகின்ற பொழுது நாம் துரத்தி விடக் கூடாது சரியாக அவர்களை இனம் கண்டு உதவி செய்ய முயற்சிப்போமாக.
வருடா வருடம் உம்ரா செல்வோரும்,
இஃப்தார்களுக்காகவும்
சஹர் உணவுகளுக்காகவும்
பெருநாள் உடுப்புக்களுக்காகவும்
பெரு நாளைக்குப் பின்னரான உல்லாசப் பயணங்களுக்கவும் அளவு கடந்து செலவு செய்வோரும்
ஏழைகளுக்கான ஸகாத்தையும் உபரியான சதகாவையும் எந்த அளவு கொடுத்திருக்கிறார்கள் என்று சிந்திப்பது அவசியமாகும்.
மத்ரஸா வசூல்
கிதாபு மத்ரஸாக்களுக்கு வசூல் சேகரிப்பது என்பது மற்றொரு பிரச்சினையான விவகாரமாகும்.
நிரந்தர வருமானமூலங்கள் இல்லாமல் மாதாமாதம்,வருடா வருடம் சேகரிக்கப்படும் வசூலால் இயங்கும் மத்ரசாக்கள் இருப்பது பெரும் பிரச்சினையாகும். காணிகள், கடைகள், தோட்டங்கள், கட்டடங்கள் போன்ற நிரந்தர வருமான மூலங்கள் இல்லாமல் மத்ரசாக்கள் ஆரம்பிக்கப்படலாகாது.அந்த மதரஸாக்களுக்கு நிரந்தர வருமான மூலங்கள் இல்லை என முஸ்லிம் கலாசார திணைக்களம் கண்டால் அவற்றுக்கான அனுமதியை இரத்துச் செய்ய வேண்டும்.அப்படியான வசதிகள் இல்லாத,மத்ரசாக்கள் ஆரம்பிக்கபடுவதை நிறுத்த வேண்டும்.
இந்த ஒழுங்குபடுத்தல் தேவை. அதற்கான ஏற்பாடுகள் கட்டம் கட்டமாக நடைமுறைக்கு வரவேண்டும்.
தற்கால சூழலில் ஜுப்பா அணிந்து,தலைப்பாகை கட்டி,கைகளில் கலண்டர் பார்சலோடும் ரிஷீட் புத்தகங்களோடும் கடைத்தெருக்களிலும் வீடுகளுக்கு முன்னாலும் நின்று கொண்டிருக்கும் காட்சி சிக்கல்களை தோற்றுவிக்கும்.மத்ரசாக்களது பாடத்திட்டம் பற்றி நாட்டில் பெரும் புரளிகள் கிளப்ப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் இது பிரச்சினையை மேலும் அதிகரிக்க முடியும்.
இவற்றை மீறி வசூலிப்புக்காக எவரும் வரும் பட்சத்தில் அவ்வப் பிரதேச ஜம்மியத்துல் உலமாவுக்கு அல்லது முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு உடனுக்குடன் அதுபற்றி அறிவித்து ஏற்பாடுகளை செய்ய முடியும். எனவே,முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை முன்கூட்டியே மதரசாக்களுக்கு அனுப்புவதும் சமூகத்தை நெறிப்படுத்துவதும் அவசியமாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாசிப்பது பற்றிய மேலதிக விபரங்கள்:
யாசகம் பற்றிய இஸ்லாமியப் பார்வை
தற்காலத்தைப் பொருத்தவரையில் நோய், அங்கவீனம்,பெற்றோரை இழந்தமை, உறவினர்களால் கைவிடப்பட்டிருத்தல், தொழில் வாய்ப்பின்மை போன்றவற்றோடு ஸகாத், ஸதகா பகிரப்படாதிருப்பது போன்றன யாசகத்திற்கான காரணங்களாகும். தொழில் செய்ய விருப்பமில்லாமல் சோம்பலாக இருப்பது, பிச்சை எடுத்தே பழக்கப்பட்டிருப்பதனால் அதனை விட விருப்பமில்லாமல் இருப்பது என்பவற்றோடு நகர்புறங்களில் பிச்சை எடுப்பதற்கு பிச்சைக் காரர்கள் ஒரு சிலரால் அதற்காக திட்டமிடப்பட்டு அமர்த்தப்படுவது போன்றனவும் காரணங்களாகும். அதாவது, பிச்சைக்காரர்களை பிச்சை வாங்கும் இடங்களுக்கு அழைத்து வந்து மீண்டும் அழைத்துப் போகும் சிலர் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் சொல்லுகின்றன.
யாசகம் கேட்பதை பொதுவாக இஸ்லாம் வரவேற்பதில்லை. இருந்தாலும் மிகவும் நிர்ப்பந்தமான கட்டத்தில் யாசகம் கேட்பதற்கான அனுமதியை இஸ்லாம் வழங்கியிருக்கிறது.
நபிகளார் (ஸல்)அவர்கள் யார் யாசகம் கேட்கலாம் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்:-
إن المسألة لا تحل لأحد إلا لثلاثة : رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك ، ورجل أصابته جائحة اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قواماً من عيش ، ورجل أصابته فاقة فقال ثلاثة من ذوي الحجى من قومه لقد أصابت فلاناً فاقة ، فحلت له المسألة حتى يصيب قواماً من عيش ثم قال صلى الله عليه وسلم : ما سواهن من المسألة يا قبيصة سحت يأكله صاحبه سحتاً
رواه الإمام أحمد في ( مسند البصريين ) حديث قبيصة بن مخارق برقم( 20078) ، ومسلم في ( الزكاة ) باب من تحل له المسألة برقم (1044
கபீசா என்பவரைப் பார்த்து நபியவர்கள்:- கபீசா !மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு.
1.ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர்.அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரைக்கும் யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2.மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் ‘வாழ்கையின் அடிப்படையை’ அல்லது ‘வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம்.
3.இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம் ) கூறுகின்றனர் என்றால், அவர் ‘வாழ்கையின் அடிப்படையை’ அல்லது ‘வாழ்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும், கபீசா! இவையன்றி மற்றைய யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இந்த மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செயப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.”
அறிவிப்பாளர் : கபீசா பின் முகாரிக் அல்ஹிலாலி (ரலி) நூல் முஸ்லிம் 1887
இந்த மூன்று சாராரை தவிர வேறு யாரும் யாசிக்க அனுமதி இல்லை.யார் இந்த மூன்று சாராரில் இல்லையோ அல்லது அந்த நிலையிலிருந்து மீண்டு விட்டாரோ அவர்கள் மறுமை நாளை அஞ்சி யாசகம் கேட்காமல் சுய மரியாதையோடு வாழ முயற்சிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்வதை மட்டும் மக்களிடம் சொல்லவில்லை. அதோடு, சுயமரியாதை பேணுதல், யாசகம் கேட்காதிருத்தல் போன்றவற்றையும் நன்கு வலியுறுத்தி கூறியுள்ளார்கள் என்பதை நாம் நன்கு கவனிக்கவேண்டும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ :
” إِنَّ نَاسًا مِنْ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ :
( مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنْ الصَّبْرِ)
رواه البخاري (1469) ، ومسلم (1053)
“அன்ஸாரீன்களிற் சிலர் நபி (ஸல்)அவர்களிடம் யாசித்தார்கள். நபியவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி (ஸல்)அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் “என்னிடமுள்ள செல்வத்தை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவேமாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவராக இருக்கிறாரோ அல்லாஹ் அவரைத் தேவையற்றவராக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளராக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச்சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்றார்கள். (புகாரி-1469)
மேலும் அவர்கள் : “என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி (கட்டி) அதைத் தம் முதுகில் சுமந்து (விற்று)சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதை விடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.”என்றார்கள். (புகாரி-1470)
மேலும் அவர்கள் “தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…”என்றும் கூறினார்கள். (புகாரி-1474)
மேலும் அவர்கள் கூறினார்கள் :
”அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்பு கங்கையே யாசிக்கிறான் ; அவன் குறைவாக யாசிக்கட்டும் அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.”
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம் – 1883
சுய மரியாதையப் பேணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெட்கத்தினால் பிறரிடம் சென்று தமது வறுமையை முறையிடாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களை இனம் கண்டு நாம் உதவி செய்ய வேண்டும்.
அவர்களைப் பற்றி அல்லாஹ்:-
“பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குரான் 2:273)
எனவே, பிச்சை கேட்டு வருபவர்கள் மட்டும் தான் வறுமையில் இருப்பதாக நாம் நினைத்து விடக்கூடாது.
ஏழைகளது தேவைகளை நன்கு விளங்கி தான தர்மங்கள் செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றவர்களது கூட்டத்தில் அல்லாஹ் எம்மையும் சேர்ப்பானாக!




