குத்பா வழிகாட்டலாக ஒரு பகிர்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

  1. நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விரும்பத்தகாத சம்பவங்களைக் காணும் எவரும் விரக்தியடையலாகாது. முஸ்லிம் சமூகத்திற்கு சோதனைகள் புதியவை அல்ல.நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவரும் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈமானை பரிசோதிக்கவே அல்லாஹ் சோதனைகளைத் தருகிறான்.

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ

“நாங்கள் ஈமான்

கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?” ‏29:2 என அல்லாஹ் வினவுகிறான்.

உண்மையாகவே விசுவாசம் கொண்டு அதில் நிலைத்திருப்பவர்கள் யார் என்பதை பரிசோதிப்பதற்கு சோதனைகள் வரலாம் என்பதை அல்லாஹ்:-

وَلَقَدْ فَتَـنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَلَيَـعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ‏

29:3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.

  1. நாம் விரும்பாத சில நிகழ்வுகளுக்குப் பின்னால் அல்லாஹ் நலவுகளை வைத்திக்கலாம். எனவே, அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொண்டு பொறுமைகாப்போம்.

وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

2:216 நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.

  1. அல்லாஹ் நாடினாலே தவிர யாருக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்த முடியாது.அல்லாஹ் நாடுவது மட்டுமே நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை எமக்கு வேண்டும்.

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰنَا ‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

எனவே, நம்பிக்கையோடு துஆக்களில் . ஈடுபடுவோம்.அவனிடமே எமது காரியங்களைப் பொறுப்புக் கொடுப்போம்.

4.எம்பெருமானார் (ஸல்)அவர்களுக்கு மனதைப் பிழியும் சம்பவங்கள் நடந்துள்ளன.அப்போது அல்லாஹ் அவர்களை எப்படி ஆற்றுப்படுத்தினான் என்பதைப் பார்ப்போம்:-

وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَ‏

15:97. (நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ‏

15:98. நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ

15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!

இத்தகைய சூழ்நிலைகளில் தஸ்பீஹு,சுஜூது என்பவற்றில் ஈடுபடுவதோடு மரணம் வரும் வரை அவனை ஓயாமல் இபாத்த செய்ய வேண்டும் என அல்லாஹ் தனது தூதருக்குக் கட்டளையிட்டான்.இதில் எமக்கான வழிகாட்டல் உண்டு.

  1. இஸ்லாம் பற்றிய அறிவுத் தெளிவின்மை இஸ்லாத்தை சிலர் எதிர்ப்பதற்கான பிரதான காரணமாக அமைந்திருப்பதால் இந்த சூழ்நிலையில் ஊடகங்களைப் பயன்படுத்திய பிரசாரப் பணியிலும் ஸாலிஹான அமல்களிலும் ஈடுபட வேண்டும் .அல்லாஹ்வின் கட்டளை பின்வருமாறு அமைகிறது..

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

  1. வன்முறைகளை வன்முறைகளால் எதிர்கொள்வதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவற்றை பண்பாடாக எதிர்கொள்ளும் போது எதிரியும் உற்ற நண்பனாக மாறுவான் என்ற குர்ஆனுடைய கருத்தை ஞாபகப் படுத்திக் கொள்வோம்.

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَه عَدَاوَةٌ كَاَنَّه وَلِىٌّ حَمِيْمٌ‏

41:34. நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

وَمَا يُلَقّٰهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا‌ وَمَا يُلَقّٰهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏

41:35. பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடையமாட்டார்கள்.

  1. நாட்டின் இறைமை,சுயாதிபத்தியம் என்பவற்றிற்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த வழிமுறைகளிலும் எம்மவர்கள் சம்பந்தப்பட்டலாகாது. எம்மைச் சீண்டி விட்டு எமக்கு அழிவை உண்டு பண்ண முயலும் சக்திகளது நோக்கங்களை நாம் முறியடிக்க வேண்டும். நீதிமன்றம், பாராளுமன்றம் என்ற முறைமைகள் ஊடாகவே எமது உரிமைகளை பாதுகாக்க நாம் பழகிக் கொள்ளவேண்டும்.
  2. நையாண்டிகள்,புறக்கணிப்புகள் இடம் பெற்றுவருவதாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிடைக்கும் ‏தகவல்கள் கூறுகின்றன. இவற்றை சஹாபாக்களும் சந்தித்தார்கள் அது பற்றி அல்லாஹ்:-

اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ ‏

83:29. நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَ

83:30. அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.

وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَ

83:31. இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.

وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰؤُلَاۤءِ لَـضَالُّوْنَ‏

83:32. மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.

وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَ‏

83:33. (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!

فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَ

83:34. ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

عَلَى الْاَرَائك يَنْظُرُوْنَ

83:35. ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

83:36. காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)

  1. இஸ்லாத்துக்கெதிராக சர்வதேச ரீதியாக இருந்து வரும் மிகப்பெரிய சவால் இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாதக் குழுக்களாகும். இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வுகொண்ட சக்திகள் அந்தக் குழுக்களைப் போஷித்து வருகின்றன. இந்த உண்மையை விளங்கி எமது இளைஞர்கள் அந்த தீவிரவாத வலைகளில் சிக்கி விடாதிருக்க பெற்றோரும் ஆசான்களும் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் தம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
  2. நலிவுற்ற நிலையில் உள்ள சமூகத்தை தூக்கி நிறுத்த வேண்டுமாயின் சமூகத்திலுள்ள ஊடகவியலாளர்கள், நீதித் துறை சார்ந்தவர்கள், உலமாக்கள், மருத்துவத் துறையில் இருப்பவர்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் போன்ற அனைவரும் தமது சொந்த நலன்கள் பற்றி மட்டும் கவனிக்காமல் அல்லாஹ் அவர்களுக்குத் தந்துள்ள சந்தர்ப்பங்களையும் ஆற்றல்களையும் அதிகாரங்களையும் இந்த தேசத்தின் சுபீட்சத்துக்காகவும் சமூக நலனுக்காகவும் பயன்படுத்த முன்வர வேண்டும். இல்லாத போது அல்லாஹ்வால் அவர்கள் கடுமையாக விசாரிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் தத்தமது சக்திக்கேற்ப பங்களிப்புச் செய்ய வேண்டும்.

ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمئذ عَنِ النَّعِيْمِ

102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

  1. எமது வியாபாரத் தலங்களை அவர்களிற் சிலர் பகிஷ்கரிக்கிறார்கள் அல்லது பகிஷ்கரிக்கச் சொல்கிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களது வியாபாரத் தலங்களை பகிஷ்கரிக்க முயற்சிக்கலாகாது. அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியாக ஏட்டிக்குப் போட்டியாக நாம் நடந்து கொண்டால் அதிகமாக நாம் தான் பாதிக்கப்படுவோம். விட்டுக் கொடுப்பதால் அல்லாஹ் எமக்கு உதவியாக இருப்பான்.

12.பெருநாள் தினத்திலும் அதற்குப் பின்னரும் எமது அயல்வீட்டார், உறவினர்கள், நண்பர்கள், பிறசமயத்தவர்கள் போன்றோரை எமது வீடுகளுக்கு அழைத்து விருந்துகளை சிறிய அளவில் ஏற்பாடு செய்து நல்லுறவை வளர்க்கலாம். அல்லது முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள கோயில்களது குருமார், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரி மற்றும் முக்கியஸ்தர்கள் போன்றோரை பள்ளிவாயலுக்கோ பாடசாலைக்கோ அழைத்து சுமூகமான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யலாம். பெருநாள் தினத்தின் பின்னர் காரியாலயங்களுக்கு செல்லும் முஸ்லிம் ஊழியர்கள் தம்முடன் அளவில் சிறியதாயினும் பெறுமதியில் குறைந்த தாயினும் பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரமழானின் பலன்களை பூரணமாக அடைந்தவர்களது கூட்டத்தில் எம் அனைவரையும் சேர்ப்பதோடு நமது தாய் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவானாக!

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top