இனவாதத்தை எதிர்ப்போரின் அணியை திரட்டுவோம்!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்

முஸ்லிம் அல்லாத சமூகங்களில் இருக்கும் நடுநிலையாகவும் நியாயமாகவும் சிந்தித்து செயல்படும் மதகுருமார்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர் ஆகியோருடனான சந்திப்பொன்று மிக அவசரமாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

இதற்குப் பொருத்தமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நல்லதொரு நிகழ்ச்சி நிரல் ஊடாக திட்டங்கள் நகர்த்தப்பட வேண்டும்.

அவர்களுடனான சந்திப்பின் போது:-

1.இந்த இக்கட்டான சூழ்நிலை நாட்டில் உருவாகுவதற்கான -அவர்களது கண்ணோக்கிலான- காரணங்கள் யாவை என்ற வினாவுக்கான அவர்களது பதில்கள் யாவை?

  1. இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எவற்றை எதிர்பார்க்கிறார்கள்?
  2. இந்த சூழ்நிலையிலிருந்து நாடு விடுபடுவதற்கு எம்மோடு இணைந்தும் தனித்தும் அவர்களால் எத்தகைய பங்களிப்புகளைச் செய்ய முடியும்?
  3. இனவாதத்தை ஒழிக்க அரசாங்கம், ஊடகவியலாளர், மதத்தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த கருத்துப் பரிமாறல் நிகழ்வு மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதோடு அவர்கள் ஒவ்வொருவரும் வெளியிடும் கருத்துக்கள் தனித்தனியாகவும் நுணுக்கமாகவும் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், கடும்போக்காளர்களிடமிருந்து நடுநிலையானவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் அந்த நிகழ்ச்சி ஊடகங்களில் வரவேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை நாணயமாக இடம் பெற்றால் தான் அது சாத்தியப்படும்.

அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடுவதோடு சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் அவை பெயர்க்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நியாயமாக சிந்திக்கின்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், உயர் மத இடங்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் ஆயிரக்கணக்கானவர்கள்

முஸ்லிமல்லாதவர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர்.

அவர்கள் மிக நியாயமான கருத்துக்களை தம்மகத்தே கொண்டிருந்தும் கூட அவ்வப்போது சிலர் ஊடகங்களில் அவற்றை வெளிப்படுத்திய போதிலும் அவர்களை உரிய முறையில் ஒன்று திரட்டி ஒழுங்குபடுத்திய ஒரு திட்டத்தின் மூலம் அவர்களுடைய கருத்துக்ளை அறிந்து கொள்வதற்கான முயற்சிகள் இதுவரை இடம்பெறவில்லை என்பது எமது பணிவான கருத்தாகும்.

அவ்வப்போது சில முயற்சிகள் நடை பெற்றாலும் அவை போதிய அளவில் அமையவில்லை அல்லது இடைநிறுத்தப்பட்டு விட்டன என்பதை நாம் தற்போதைய சூழ்நிலையை அவதானிக்கின்ற பொழுது தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நீதிக்காக நியாயத்துக்காக நாட்டின் சுபீட்சத்தை கருத்தில் கொண்டு குரல் கொடுக்கின்றவர்கள் அல்லது குரல் கொடுப்பதற்கு முடியாவிட்டாலும் மனதளவில் கருத்துக்களை பதுக்கி வைத்திருக்கின்ற பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அபூதாலிபுகள் முத்இம் இப்னு அதீக்கள்.

இப்படிப்பட்ட இவர்களை ஒன்று திரட்டி பலமான ஒரு அணியை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

இந்த நாட்டில் அரசியலுக்காக,சுய லாபங்களுக்காக இனவாதத்தை தூண்டுகின்ற சக்திகள் பிழையானவை என்ற கருத்தை முழு நாட்டுக்கும் இந்த முயற்சியின் மூலம் கொடுக்க முடியும்.

அல்குர்ஆன்:-

جادلهم بالتي هي أحسن

“ஜாதில்ஹூம் பில்லதீ ஹிய அஹ்ஸன்”

“அவர்களோடு மிகவும் அழகான முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள்” என்றும்

“உங்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு பொதுவான உடன்பாட்டை அடைந்து கொள்வதற்காக வாருங்கள் உட்காருவோம்”

تعالوا الى كلمة سواء بيننا وبينكم

என்றும் அடுத்த தரப்பினரை இப்படித்தான் அழைத்தது.

எனவே, மிக அவசரமாக இந்த முயற்சியை எமது சமூகத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும். முஸ்லிம்களது தரப்பில் இருந்து உலமாக்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,தரமான ஊடகவியலாளர், சிந்தனையாளர், துறைசார் வல்லுனர்கள் போன்றோர் முன்வரவேண்டும்.

இந்தப் பணிக்காக முஸ்லிம் அல்லாத சமூகங்களில் இருந்து யார் யாரை இணைத்துக்கொள்ளலாம்,அந்த நிகழ்ச்சி நிரல் எப்படி அமைக்கப்பட வேண்டும், முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வர வேண்டிய தனி நபர்கள் யார் போன்ற அபிப்பிராயங்களை நீங்கள் முன்வைக்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top