அஷ்ஷெய்க் பளீல்
அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை அடுத்து ஐவேளைத் தொழுகையில் குனூத் ஓதும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
எதிரிகளது சூழ்ச்சிகள் போன்ற துயரங்களின் போது குனூதுன் நாஸிலாவை நபிகளார்(ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள் என்ற வகையில் இது வரவேற்கத்தக்கது.மேலும்
எமது பிரச்சினைகளை அல்லாஹ்விடத்திலே முறைப்பட வேண்டும், அவனது உதவியை எதிர்பார்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த வேண்டுகோளை உலமாக்கள் விடுத்திருந்தார்கள்.
தற்போதும் பிரச்சினைகள் இல்லை என்று யாரும் சொல்வதற்கில்லை. இருந்தாலும் தொடர்ந்தும் குனூத்தை ஓதி வருவது தொடர்பாக சில அபிப்பிராயங்கள் இங்கு சொல்லப்பட வேண்டும்.
ஐவேளை ஜமாஅத் தொழுகைக்கு வயோதிபர்கள், நோயாளிகள்,பல்வேறு வேலைப்பளுக்களோடு இருப்பவர்கள் சமூகம் தருவார்கள்.
இது இப்படி இருக்க சூரத்துல் பாத்திஹாவுக்குப் பின்னரான சூராவை நீளமாக ஓதுவது ஒருபுறமிருக்க ஐவேளைத் தொழுகையிலும் குனூத்தை நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து ஓதி வருவது பற்றிய சில அவதானங்கள் இருக்கின்றன.
தொடர்ந்தும் குனூத் ஓதும் போது மக்களை நாம் பய மனப்பாங்கோடு வைத்திருக்கப் பார்க்கிறோம்.இது Fear phyco ஆகலாம்.
பள்ளிவாயலில் இருக்கின்ற இமாம்களை பொறுத்தவரையில் அவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர். பள்ளிவாயலில் எவ்வளவு நேரத்தை கடத்தினாலும் அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால் பள்ளிக்கு தொழுகைக்காக வருபவர்கள் போன்று மிகுந்த வேலைப் பளுக்களோடு வருகிறார்கள்.அவர்களை அதிகம் தாமதிக்கச் செய்வது நல்லதல்ல.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் நடந்த சம்பவம் வருமாறு:-
أن معاذ بن جبل -رضي الله تعالى عنه- كان يصلي مع النبي صلى الله عليه وسلم، ثم يأتي قومه فيصلي بهم الصلاة، فقرأ بهم البقرة، قال: فتجوز رجل فصلى صلاة خفيفة، فبلغ ذلك معاذا، فقال: إنه منافق، فبلغ ذلك الرجل، فأتى النبي -صلى الله عليه وسلم- فقال: يا رسول الله، إنا قوم نعمل بأيدينا ونسقي بنواضحنا، وإن معاذا صلى بنا البارحة فقرأ البقرة، فتجوزت، فزعم أني منافق، فقال النبي صلى الله عليه وسلم: يا معاذ أفتّان أنت، ثلاثا، اقرأ: والشمس وضحاها، وسبح اسم ربك الأعلى، ونحوها. أخرجه الشيخان
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு – நபி (ஸல்) அவர்களுடன் தொழுதஅதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம்.
(ஒருமுறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒருமனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது (விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று)விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், அவர் ஒரு நயவஞ்சகர்(முனாஃபிக்) என்று சொன்னார்கள்.
அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப்பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகரா’வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம் என்று கூறினார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், முஆதே! (நீரென்ன)குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், (நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹாபோன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!என்றும் சொன்னார்கள். (புஹாரி 6106)
வேறு ஓர் அறிவிப்பில்:-
“…ஏனெனில் உமக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் தொழுகின்றனர்” என்றும் சொன்னார்கள்.
பாடசாலைக்கு செல்லுகின்ற ஆசிரியர்கள், மாணவர்கள்,கடையில் வியாபாரம் செய்து கொண்டு இடைநடுவே ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள வருகின்ற வியாபாரிகள் , நோயாளிகள், வயோதிபர்கள் பல்வேறு வேலைப்பளுடன் இருப்பவர்கள், தொழில் நிலையங்களில் பிற சமயத்தவர்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் போன்ற பலரும் ஜமாஅத் தொழுகைக்காக வரக்கூடும் அவர்களது சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு தான் இமாம் ஜமாஅத் தொழுகையை நடாத்த வேண்டும்.இல்லாதபோது சிலர் ஜமாஅத் தொழுகைக்கு வர மாட்டார்கள் அல்லது வந்தாலும் இமாம் அவர்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கமாட்டார்கள்.
மற்றுமொரு ஹதீஸிலே நபியவர்கள் சிலருடைய பிரார்த்தனைகள் அவர்களுடைய தலைக்கு மேலால் உயர்த்தப்பட மாட்டாது என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓர் இமாம். அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் அவர் பற்றிய வெறுப்புடன் தான் இருப்பார்கள்.
عن ابن عباس رضي الله عنهما :
عن ابن عباس رضي الله عنهما ، عن رسول الله صلى الله عليه وسلم قال : ثلاثة لا ترتفع صلاتهم فوق رءوسهم شبرا : رجل أم قوما وهم له كارهون . وامرأة باتت وزوجها عليها ساخط . وأخوان متصارمان.
رواه ابن ماجة (971) ، وابن حبان في صحيحه (1757) ، والطبراني في الكبير (12275) .
قال النووي في المجموع (4/274)
தற்காலத்திலும் கூட நீண்ட சூராக்களை ஓதி தொழுகையை மிக நீளமாக அமைத்துக் கொள்கின்ற வழங்கம் சில பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.
ஆகவே இந்த விவகாரத்தை நடுநிலையோடும் நிதானத்தோடும் அணுகிக் கொள்ளும்படி நாம் இமாம்களுக்கு சொல்ல விரும்புகிறோம்.
عن أَبِي هريرة النَّبيّ ﷺ قَالَ: إِنَّ الدِّينَ يُسْرٌ، ولنْ يشادَّ الدِّينُ إلاَّ غَلَبه فسدِّدُوا وقَارِبُوا وَأَبْشِرُوا، واسْتعِينُوا بِالْغدْوةِ والرَّوْحةِ وشَيْءٍ مِن الدُّلْجة
رواه البخاري.
“மார்க்கம் என்பது இலகுவானது. அதனை யார் கடுமையாக கடைப்பிடிக்கிறார் அது அவரை மிகைத்து விடும்” என்றும் நபிகளார்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, பின்னால் தொழக்கூடியவர்களது சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு தொழுவிக்கும் படி இமாம்களுக்கு நாம் சொல்ல விரும்புகிறோம்.
ஊருக்கு ஊர் பிரதேசத்துக்கு பிரதேசம் தொழுகையை நீட்டுவது அல்லது குறுக்குவது வித்தியாசப்படலாம்.
அல்லாஹ் எம் அனைவரையும் அங்கீகரிப்பானாக.




