Children and old people

சிறார்களும் முதியோரும் துன்புறுத்தப்படும் வீடியோக்கள்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்

அண்மைக்காலத்தில் முகநூலில் சிறுவர்கள் குறிப்பாக பச்சிளம் பாலகர்கள் தத்தமது பெற்றோரால் அல்லது உறவினர்களால் துன்புறுத்தப்படுவது பற்றிய வீடியோக்களும் தம்மைப் பெற்றெடுத்த பெற்றார்களை அவர்களது பிள்ளைகளே கால்களால் உதைகின்ற தள்ளிவிடுகின்ற வீடியோக்களும் பகிரப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவற்றைப் பகிருபவர்கள் நல்ல நோக்குடன் அவ்வாறு செய்வதாக இருக்கலாம்.இவ்வாறான செயல்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் அந்த சிறார்களை அல்லது வயோதிபர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை உணர்த்தி அவற்றிலிருந்து யாரும் தவிர்த்து கொள்ளட்டும் என்பது பகிருபவர்களது நோக்கமாக இருக்கலாம். ஆனால் இதன் சாதகங்களை விட பாதகங்களே அதிகமாகும்.

காரணம் இவற்றைப் பார்க்கின்றவர்கள் பெரியவர்களாக அல்லது சிறியவர்களாக இருந்தாலும் அவர்களது மனதில் ஆழமான வடுக்களையும் சலனங்களையும் அவை நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. பார்த்தவுடன் சிறிது நேரத்திற்கு மனது ஸ்தம்பிதமடையும். செய்வதறியாது திகைக்கும். அது எப்போதோ யாருக்கோ நடந்ததாயினும் அதன் தாக்கம் பலமாக இருக்கும்.

பார்ப்பவரது உளச் சமநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.எனக்கு அப்படி ஏற்பட்டதுண்டு.எனவே அவ்வாறு பதிவிட்ட ஒரு நபருடன் உடனடியாக தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு உடனடியாக அதனை அவரது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கும் படி பணிவாக வேண்டிக் கொண்டேன்.

அது மட்டுமல்ல அவ்வாறு தாக்குதல் நடத்தும் அல்லது துன்புறுத்தும் நபரை உடனடியாக கண்டுபிடித்து நாமும் கடுமையாக அவரைத் தாக்க வேண்டும் என்ற உணர்வு சிலருக்கு உடனடியாக ஏற்படும். இது நியாயமானது தான். ஆனால் அது சாத்தியமானது அல்ல.

சிறார்களும் முதியவர்களும் எமது அன்புக்கும் அரவணைப்புக்கும் அதிகம் உட்படவேண்டியவர்கள். காரணம் அவர்கள் உடல் மற்றும் உளரீதியாக பலவீனமானவர்கள். பெரும்பாலும் பிறரில் தங்கிவாழுபவர்கள். ஒருவர் ஆற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டு கரைசேர முயற்சிக்கையில் அவர் மீது நாம் கல்லொன்றை வீசி எறிந்தால் அவரது உள்ளம் என்ன பாடுபடும்?

இஸ்லாத்தில் சிறுவர்களுக்கான முதியவர்களுக்கான உரிமைகள் மாஷா அல்லாஹ் தாராளமாக இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் முதலாக அன்பை அரவணைப்பை பாசத்தை அவர்கள் மீது நாம் பொழிய வேண்டும். புன்முறுவல்,அணைப்பு என்பன அவசியம். இவை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும். கண்ணியமான வார்த்தைகளால் அவர்களை அழைக்க வேண்டும். இப்ராஹீம் (அலை), லுக்மான்(அலை) ஆகியோர் தத்தமது பிள்ளைகளை ‘யா புனைய'(எனது அருமை மகனே)என்றும் மகன்மார் தமது தகப்பன்மாரை ‘யா அபதி'(எனது அருமைத் தகப்பனே) என்றும் விழிப்பதைக் காண முடியும்.

நபிகளார்(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது ஹஸன் ஹுஸைன் பேரப்பிள்ளைகள் முதுகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் இறங்கும் வரை காருண்ய நபி சுஜூதை நீடித்தார்கள்.பேரப்பிள்ளைகள் தமது தேவையை நிறைவு செய்ய முன்னர் அவசரப்படுத்தி முதுகிலிருந்து இறக்க விரும்பவில்லை என்று காரணம் காட்டினார்கள்.

மற்றொரு தடவை தனது மகள் ஸைனபின் மகள் உமாமாவை சுமந்த வண்ணம் தொழுதார்கள்.

ثبت في الصحيحين وغيرهما من حديث أبي قتادة أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم فإذا سجد وضعها وإذا قام حملها .

وفي رواية : رأيت رسول الله صلى الله عليه وسلم يؤم الناس وأمامه بنت أبي العاص على عاتقه فإذا ركع وضعها وإذا رفع من السجود أعادها .

وروى النسائي (1141) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ عَنْ أَبِيهِ قَالَ : خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِحْدَى صَلاتَيْ الْعِشَاءِ وَهُوَ حَامِلٌ حَسَنًا أَوْ حُسَيْنًا ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَهُ ثُمَّ كَبَّرَ لِلصَّلاةِ ، فَصَلَّى فَسَجَدَ بَيْنَ ظَهْرَانَيْ صَلاتِهِ [أي في أثناء صلاته] سَجْدَةً أَطَالَهَا ، قَالَ أَبِي : فَرَفَعْتُ رَأْسِي وَإِذَا الصَّبِيُّ عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ سَاجِدٌ ، فَرَجَعْتُ إِلَى سُجُودِي ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلاةَ قَالَ النَّاسُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّكَ سَجَدْتَ بَيْنَ ظَهْرَانَيْ صَلاتِكَ سَجْدَةً أَطَلْتَهَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ قَدْ حَدَثَ أَمْرٌ ، أَوْ أَنَّهُ يُوحَى إِلَيْكَ ، قَالَ : كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ . وَلَكِنَّ ابْنِي ارْتَحَلَنِي [أي ركب على ظهري] فَكَرِهْتُ أَنْ أُعَجِّلَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ . صحيح النسائي (1093) .

இஸ்லாத்தில் ஒரு பிள்ளைக்கு பின்வரும் அடிப்படை உரிமைகளை பெற்றார் கொடுத்தாக வேண்டும்:-

1.அன்பும் பாசமும்

2.உணவு

3.உடை

4.உறையுள்

5.கல்வி

6.சுகாதாரமும் மருத்துவமும்

7.ஒழுக்கப் பண்பாட்டுப் பயிற்சி

8.பாதுகாப்பு

قَالَ رسول الله صلى الله عليه وسلم“مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، ويَعْرِفْ حَقَ كَبِيرِنَا؛ فَليْسَ مِنَّا“(رواه البخاري في الأدب المفرد وأبو داود، وصححه الألباني).

“எமது சிறார்கள் மீது இரக்கம் காட்டாத எமது பெரியவர்களது உரிமைகளை அறியாதவர் எம்மைச் சேர்ந்தவர் அல்ல” என நபிகளார் (ஸல்) கூறினார்கள்.

நாம் வயோதிபர்களாக மாறியதன் பின்னர் எமக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என நாம் விரும்பினால் நாம் சிறுவர்ளுக்கும்-அவர்கள் எமது பிள்ளைகளாகவோ மற்றவர்களது பிள்ளைகளாகவோ இருக்கலாம்- முதியவர்களுக்கும்-அவர்கள் எமது பெற்றாராகவோ அல்லது இல்லாமலும் இருக்கலாம் உயர்ந்த பட்ச உரிமைகளை வழங்க வேண்டும்.

قال رسول الله ﷺ:

ما أكرم شاب شيخاً لسنه إلا قيّض الله له من يكرمه عند سنه .رواه الترمذي

“ஒரு வாலிபர் ஒரு வயோதிபரை அவரது முதுமையின் காரணமாக கண்ணியப்படுத்தினால் அந்த வாலிபர் வயோதிபராக மாறியதற்கு பின்னால் அவரை கண்ணியப்படுத்த கூடிய ஒருவரை அல்லாஹ் ஏற்பாடு செய்வான்” என நபிகளார் (ஸல்)கூறினார்கள்.

எது எப்படிப் போனாலும் முதியோரை மதிப்பதும் அரவணைப்பும் சிறார்களுக்கான உரிமைகளை வழங்குவதும் மிகப்பெரிய நன்மைகளை அல்லாஹ்விடம் பெற்றுத்தரும். அவர்களிடமிருந்து எந்தவொரு புகழ்ச்சியோ பிரதிஉபகாரமோ கிடைக்காத போதிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து நாம் செய்ய வேண்டும்.

நாஸ்திக, உலோகாயத, சுயநல சிந்தனைகள் வேரூன்றிப் போயுள்ள தற்கால சமூக அமைப்பில் மனசாட்சி, ஈவிரக்கம், மனிதாபிமானம் என்பன காணப்படுவதில்லை. வற்றி வரண்ட, இறுகிய உள்ளங்கள் இருப்பது ஆச்சரியமாக இல்லை.

வாழ்வுக்கென்று உன்னதமான இலட்சியமும் மறுமையில் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயமும் ஆழமாக இருக்கும் உள்ளங்களைக் கொண்ட மனிதர்கள் வாழும் சமூக அமைப்பில் சிறார்களும் முதியோரும் மிகுந்த சந்தோஷத்தோடு பாதுகாப்பாக வாழுவார்கள்.

அல்லாஹ்வைப் பயந்த ஈரளிப்பான பசுமையான உள்ளங்களை எமக்கு அல்லாஹ் தந்து எமது முதியோர் மற்றும் சிறார்களுக்கான உச்சகட்ட உரிமைகளை வழங்கும் பாக்கியத்தைப் தருவானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top