ஊடகப் பயங்கரவாதம் ஆயுதப் பயங்கரவாதத்தை விட மோசமானது

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்

பொலிவூட் சினிமாவை Islamophobia வுக்கு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை இன்று அனுபவத்தின் வாயிலாக புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

இன்று (30.10.2019)கொழும்பிலிருந்து தூர இடமொன்றுக்குப் போகும் பஸ் ஒன்றில் பயணிக்க வேண்டி வந்த போது ஹிந்திப் படமொன்றை அதில் அதி உச்ச தொனியில் ஓட விட்டிருந்தார்கள்.

பயணிகள் எல்லோரும் போல மிகுந்த அக்கறையோடு அதனைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. படத்தில் பயங்கரவாதிகளாக நடித்தவர்கள் பிரயோகித்த

جنة الفردوس ، أن شاء الله ، نصر من الله وفتح قريب، السلام عليكم

போன்ற சொற்பிரயோகங்கள் அடிக்கடி அங்கு வந்து போயின.

பொலிஸாரிடம் பயங்கரவாதிகள் பிடிபடும் போதும் உயிர் பிரியும் தறுவாய்களிலும்

لا إله إلا الله محمد رسول الله

என்று உச்சரிப்பதைக் காட்டும் காட்சிகள் ஏராளம் இருந்தன.நீண்ட தாடியுடனும் தலைப்பாகையுடனும் கூடிய ஒருவர் எப்படி மிகவுமே சூட்சுமமாக ஒரு வாலிபனை குண்டுத் தாக்குதலுக்காக தூண்டுகிறார் என்பது அடிக்கடி அங்கு காட்டப்பட்டது.

படத்தில் முக்கால் வாசி பகுதி துப்பாக்கி பிரயோகங்களும் குண்டு வெடிப்புக்களுமாகவே இருந்தது. முழு பஸ்ஸும் அதிர்ந்து கொண்டிருந்தது. அதிலும் விசேடம் என்னவென்றால் படம் Sinhala Sub title உடன் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியாயின் அப்படத்தை சிங்கள மொழி தெரிந்தவர்கள் பார்க்கட்டும் என்ற நோக்கமும் சிலருக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவான உண்மையாகும்.

சில கேள்விகள் உதிக்கின்றன:-

இப்படியான திரைப்படங்கள் ஏன் தயாரிக்கப்படுகின்றன?

ஏன் இவற்றை பஸ்களில் ஓடவிடுகிறார்கள்?

பார்க்கின்ற முஸ்லிம் அல்லாதவர்களது மனங்களில் இப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவை?

இஸ்லாத்தைப் பற்றியே தெரியாதவர்கள் எப்படியான முடிவுகளுக்கு வருவார்கள்?

சினிமா என்ற ஊடகம் மாத்திரம் இப்படியெல்லாம் நச்சுக் கருத்துக்களை விதைக்கப் பயன்படுத்தப்பட்டால் ஏனைய ஊடகங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படும்!

இஸ்லாத்தை பற்றிய சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானிய வசனங்கள்’ , தஸ்லிமா நஸ்ரினின் “லஜ்ஜா” என்பன நாவல் உலகில் ஏற்படுத்திய அதிர்வுகள் பாரியவை. சாமுவேல் ஹன்டிங்டனின் The Clash of Civilizations என்ற நூல், டென்மார்க்கில் நபியவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட கேலிச்சித்திரங்கள் என்று பெரும் பட்டியல் ஒன்று Islamophobia வுக்காகப் பயன்படுத்தப்படன.

பொலிவூட் மட்டுமல்ல ஹொலிவூடும் போட்டி போட்டு Islamophobia வை வளர்க்கும் சினிமாக்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றது. இதற்காக கோடான கோடி பணம் வாரி இறைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் கூட நாம் அறிந்த வகையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மோசமாக சித்தரிக்க சுமார் 30 க்கும் மேற்பட்ட சிங்கள மொழியிலான நூல்கள் எழுதப்பட்டன. இலங்கையில் மாற்று மதத்தைச் சேர்ந்த சகோதர இனத்தவர்களது மனப்பாங்கில் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம்.

அவற்றின் வெளிப்பாடுகள் தான் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளாக வெளிப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்ள முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்திருக்கிறோம்?

தற்போது உலகத்தில் சிந்தனா ரீதியான யுத்தங்கள் தான் அதிகம் இடம்பெறுகின்றன.

ஆயுத யுத்தத்திற்கு கூட சிந்தனா ரீதியான யுத்தம் தான் வழிகோலுகிறது. சிந்தனையைத் தூண்டி விட்டால், ஆக்ரோஷத்தை ஏற்படுத்திவிட்டால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கவே செய்யும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அதற்கும் வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. குர்ஆனில் யுத்தம் செய்யும் படி ஏவப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் யுத்தம் செய்வதற்கென்று இறுக்கமான வரையறைகள் போடப்பட்டிருக்கின்றன. அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிராக மட்டுமே ஆயுதப் பிரயோகம் இடம் பெற்றுள்ளது. ஆனால் அப்பாவிகளை கொலை செய்வதற்கும் சுமுகமான சூழ்நிலையை குழப்புவதற்கு எந்த வகையான அனுமதியும் இஸ்லாத்தில் வழங்கப்படவில்லை.

மேற்படி திரைப்படத்தில் சாதாரண பொதுமக்களைக் கூட கொன்றுவிட்டு கலிமா சொல்லுகின்ற, அரபு வாசகங்களை உச்சரிக்கின்ற பயங்கரவாதிகளது ஆக்ரோஷமான காட்சிகள் காட்டப்பட்டன. நிச்சயமாக இத்தகைய பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இப்படியான சிந்தனை கொண்ட சர்வதேச ரீதியாக இயங்குகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிய பயங்கரவாதிகள் இல்லாமலும் இல்லை. அவர்களை வைத்து முஸ்லிம் சமூகத்தை எடை போடுவதும் சித்தரிப்பதும் மிகப்பெரிய தவறுகளாகும்.

சிந்தனையை சிந்தனையால் வெல்லவேண்டும். ஆனால், இஸ்லாத்திற்க்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு நாம் ஆக்ரோஷமான வார்த்தைகளை பிரயோகிக்கவோ வன்முறைகளில் ஈடுபடவோ முடியாது. அதற்கான அனுமதி இஸ்லாத்தில் இல்லை.

அறிவோடும் சிந்தனையோடும் உரையாடவும் ஊடகத்தைப் பயன்படுத்தவும் நாமும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

சினிமா,நாவல்,சிறுகதை,மேடை நாடகங்கள் போன்றனவற்றை சமாதான சகவாழ்வை அடைவதற்கும் நீதி நியாயத்தை வெல்ல வைக்கவும் பயன்படுத்துவோமாக.

ஊடகத்தின் பங்கை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

எல்லா இனங்களைச் சேர்ந்த ஊடக மற்றும் ஆயுதப் பயங்கரவாதிகளிடமிருந்தும் உலகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top