அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல்
1.பொதுமக்கள் ஷரீஆ சட்டங்கள் பற்றி அறிவு குறைந்தவர்கள். பொதுவாக அவர்கள் அதிகமாக உணர்ச்சிகளால் தூண்டப்படுவார்கள். இது இப்படியிருக்க அவர்களிடத்தில் சென்று திருமண மற்றும் மண முறிவுடன் தொடர்பான சர்ச்சைகள் குறிப்பாக MMDA பற்றி பேசுவது நல்ல விளைவுகளைத் தரமாட்டாது. அதுவும் மாற்றுக் கருத்துடையோர் இஸ்லாத்துக்கு விரோதமான கருத்துகளையே கொண்டுள்ளார்கள் என்று மொட்டையாகப் பேசும்போது அது உணர்வுகளை தட்டியெழுப்பி வன்முறைக்கு வழிவகுக்கும். கைகலப்பை ஏற்படுத்தும்.
பாகிஸ்தானில் இடம்பெறும் குண்டு வெடிப்புக்களில் அதிகமானவைக்குப் பின்னணியில் பொது மக்கள் மன்றத்தில் பேசப்படக் கூடாத அல்லது அடக்கி வாசிக்கப்பட வேண்டிய விடயங்கள் பகிரப்பட்டு வருவதும் ஒரு காரணமாகும். பொதுமக்கள் தூண்டப்படுவது நல்லதல்ல என்பதை மறக்கலாது. பொதுமக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சாதிக்க நினைப்பது மிகப்பெரிய தவறாகும்.
அறிவாளிகளது மன்றத்தில் மட்டுமே பேசப்பட வேண்டிய அம்சங்களை பாமர மக்களிடம் நகர்த்துவது ஆபத்தானதாகும்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்
” مَا أَنْتَ بِمُحَدِّثٍ قَوْمًا حَدِيثًا لا تَبْلُغُهُ عُقُولُهُمْ ؛ إِلا كَانَ لِبَعْضِهِمْ فِتْنَةٌ “
“நீங்கள் ஒரு சமுதாயத்திடம் பேசும் விடயங்களை அந்த சமுதாயத்தின் மூளைகளால் புரிய முடியாதிருப்பின் அவர்களிற் சிலருக்கு அது (ஃபித்னா) சோதனையாகவே அமையும்” என்றார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1/21)
இமாம் புகாரி அவர்கள்,
“باب مَنْ تَرَكَ بَعْضَ الِاخْتِيَارِ مَخَافَةَ أَنْ يَقْصُرَ فَهْمُ بَعْضِ النَّاسِ عَنْهُ فَيَقَعُوا فِي أَشَدَّ مِنْهُ”
“ஒருவர் தான் தெரிவுசெய்த ஒர் அம்சத்தை குறிப்பிட்ட ஒரு சாரார் தவறாகப் புரிந்து கொண்டு அதனைவிட மோசமான ஒரு நிலைக்குப் போய்விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக, அதனை அவர்களுக்குக் கூறாமல் விட்டுவிடுவது” என ஒரு தலைப்பை இட்டிருக்கிறார்கள்.
மீண்டும் இமாம் புஹாரி அவர்கள்:-
“باب من خص بالعلم قوما دون قوم كراهية أن لا يفهموا”
“ஒரு சிலர் புரிந்து கொள்ள மாட்டார்களோ என்று நினைத்து அவர்க்ளுக்கு ஒரு குறிப்பிட்ட அறிவைப் போதிக்காமல் மற்றும் சிலரை மட்டும் தெரிவு செய்து அதனைப் போதிப்பது” என்று இன்னுமொரு தலைப்பை இட்டிருக்கிறார்கள்:
ஆகவே, MMDA ஐ பொதுமக்களது சபைகளில் பேசி கைகலப்பை தோற்றுவிக்காமல் ஆலிம்களும் துறைசார்ந்தவர்களும் அறிவுடனும் தெளிவோடும் அல்லாஹ்வுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற பலமான அச்சத்தோடும் ‘ஈகோ’ களை மூட்டைக்கட்டி ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு மனம் திறந்து உரையாட வேண்டும்.
- படித்தவர்கள் என்று அறியப்பட்டவர்களும் மற்றொரு தவறைச் செய்வது அவதானிக்கப்பட்டு வருகிறது.முஸ்லிம் அல்லாதவர்களால் அதிகமாக வாசிக்கப்படும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் அமைந்துள்ள சமூக வலைத்தலங்களிலும் மற்றும் இதர மீடியாக்களிலும் உள்வீட்டில் அதாவது முஸ்லிம் சமூகத்துக்குள் மட்டும் பேசப்பட வேண்டிய விடயங்களைப் பகிர்கிறார்கள். மட்டுமல்ல.எம்மில் சில முக்கியஸ்தர்களும் சில முக்கிய நிறுவனங்களும் செய்த தவறுகளை அம்பலப்படுத்துகிறார்கள். இது எம்மை விமர்சிக்க தருணம் பார்த்திருக்கும் துவேஷிகளுக்கு வாய்க்கு அவல் கிடைத்த கதையாக மாறிவிட்டது.
வட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் கீறிக்கிழிப்பவர்கள் தாம் செய்யும் தவறுகள் பற்றி சிந்திப்பது அவசியமாகும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல இதில் குளிர்காய துவேஷிகளும் நாத்திகர்களும் ஏன் அரசியல்வாதிகளும் தருணம் பார்த்திருக்கிறார்கள்.
தூரநோக்கோடு நடந்து கொள்வோமாக!
அல்லாஹ் பாதுகாப்பானக!




