(இது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆக்கம்)
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்
நாம் ஓர் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இடைநடுவே ஜும்ஆவின் நேரம் வந்தது. ஓர் ஊரில் வாகனத்தை நிறுத்தினோம். இமாம் 12.10க்கு மிம்பரில் ஏறினார். அவரது குத்பா 1.10 வரை சரியாக ஒரு மணிநேரம் இடம்பெற்றது. அரைவாசிப்பேருக்கு மேல் உறங்கிவிட்டனர். குத்பாவில் பலதையும் பத்தையும் பேசியதால் தலைப்பைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகவே இருந்தது. ”நான் எதனையோ பேசவந்து எதனையோ பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறியதிலிருந்து இதனைப் புரிந்திருப்பீர்கள். பெரும்பாலும் ஹஜ்ஜின் சிறப்பக்களைப் பற்றி அதிகமாகப் பேசினார் என்று கூறமுடியும்.
வாரத்துக்கு ஒரு தடவை இடம்பெறும் ஜும்ஆப் பிரசங்கம் சமூகத்திற்கான ஒரு செய்தியை முன்வைப்பதற்கான அரிய வாய்ப்பாகும். ஆனால், இந்த வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாயல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது கவலையைத் தருகிறது. மேற்படி குத்பாவைப் பற்றிய மதிப்பிட்டைச் செய்தால் பின்வரும் முடிவுகளைப் பெறலாம்:
- குறிப்பிட ஒரு தலைப்பில் பேசாமல் பல்வேறு விடயங்களைக் கலந்தமையால் கேட்போரின் சிந்தனை சிதறடிக்கப்பட்டமை,
- நாம் ஜும்ஆ தொழுத அந்தப் பள்ளி முஸ்லிம் வியாபாரத்தலங்கள், அரச தனியார் காரியாலயங்கள் என்பவற்றுக்கு மத்தியில் இருந்தமையாலும் பிரதான பாதையின் ஓரத்தில் அமைந்திருந்தமையாலும் ஒரு மணிநேர உபந்நியாசம் வியாபாரிகள், அரச ஊழியர்கள், ஜும்ஆவுக்கென வந்திருந்த எம்போன்ற பிரயாணிகளுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியமை,
- கதீபின் மொழியும் கவர்ச்சியுமற்ற முன்வைப்பும் மக்களில் பலரை நித்திரையில் ஆழ்த்தியமை,
- குத்பா இடம்பெற்ற 7.10.2011 அன்று ஹஜ்ஜின் சிறப்புக்களைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான காலமல்ல. காரணம் ஆறாம் திகதியே முதலாம் ஹஜ் விமானம் பறந்துவிட்டது. நிய்யத்து வைத்தவர்கள் பிரயாண ஏற்பாடுகளை முடித்துவிட்டனர். எனவே காலம் கடந்த சொற்பொழிவாக அது அமையலாம்.
இப்படியான சில விமர்சனங்களோடு மேலும் சிறு சிறு குறிப்புக்களையும் கூற முடியும். விரிவஞ்சி தவிர்க்கிறோம். இவற்றை கூறக் காரணம், வெள்ளி மேடைகளை கனகச்சிதமாகப் பயன்படுத்துவதற்கு எம் உலமாக்கள் இனிவரும் காலங்களிலாவது திட்டமிட வேண்டும். என்ற நோக்கமாகும். இதனை எழுதும் என்னிடமும் இது விடயமாக தவறுகள் இருந்தால் சுட்டிக்ககாட்டுவது எவரதும் கடமையாகும்.
ஜுமுஆ தொழுகையானது பர்ளு ஐன் எனப்படும் ஒவ்வொருவர் மீதான தனிப்பட்ட கடமையாகும் என்பது இஸ்லாமிய அறிஞர்களது ஏகோபித்த முடிவாகும். பெண்கள், சிறுவர்கள் ஜும்ஆவுக்கு சமுகம்தர முடியாத நோயாளிகள், பிரயாணிகள் போன்ற ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அனைவரும் கட்டாயமாக ஜும்ஆவுக்காக வர வேண்டும். அப்படி வராதபோது அது பெரும் பாவமாகக் கருதப்படும்.
எனவே, இஸ்லாம் ஜும்ஆவுக்காக அனைவரும் பள்ளிவாயலுக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவர்கள் பிரசங்கத்தை செவிமடுக்கட்டும் என்பதும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். அப்படியான குத்பா எதிர்பார்க்கப்படும் நல்ல பயன்களைத் தருவதற்குப் பதிலாக வெறுப்பையும் விமர்சனங்களையுமே தோற்றுவிக்குமாயின் அது பெரிய அநியாயமாகும்.
பிற மதத்தலங்களில் இடம்பெறும் உற்சவங்கள், வைபவங்களுக்கு அந்த அந்த மதங்களைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையினரே வருவதாகவும் அதுவும் வயோதிபர்கள் தான் அதிகம் வருகிறார்கள் என எம்மில் பலர் கூறுகிறார்கள். இளைஞர்களையும் யுவதிகளையும் கவர அலங்காரப் பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், தெருவோரக் கடைகள், காணிவெல் என்பன பயன்படுத்தப்படுகின்றன என்றும் எம்மில் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜும்ஆவுக்கு வயது வித்தியாசமின்றி, வெப்பம், கடுமையான பசி நேரத்தில் வியாபாரத் தலங்களை இழுத்து மூடிவிட்டு வருகை தருகிறார்கள். பள்ளிவாசலுக்குள் இடம் போதபோது ஹவுளின் ஓரங்களில், படிகளில் ஏன் நெற்றியில் கற்கள் தைத்தாலும் சுடும் பாறையில் தொழுகின்றவர்களை அதிகம் பார்க்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்;!
அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஏதோ நல்ல வார்த்தைகளைக் கேட்டுத் திருந்துவோமே என்ற எண்ணத்தில் பயபக்தியோடு மக்கள் மஸ்ஜிதுகளுக்கு வருகிறார்கள்; எதிர்பார்க்கைகள் எந்தளவு பூர்த்தியாகின்றன?
அண்மைக் காலங்களில் கதீப்மார்களது குத்பாக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்னும் முயற்சித்தால் சமூகத்தின் போக்கை மாற்றியமைக்க அல்லாஹ்வின் அருளால் குத்பாக்களை முதன்தரமான ஊடகங்களாகப் பயன்படுத்த முடியும்.
அல்குர்ஆனும் அல் ஹதீஸிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ள அம்சங்களுக்கு மாத்திரமே கதீப்கள் முக்கியத்தவம் கொடுக்க வேண்டும். அற்பமான அம்சங்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பது, கருத்து முரண்பாடான அம்சங்களில் தனது கருத்து மாத்திரமே சரியானது என அக்கருத்தை திணிக்க முயற்சிப்பது என்பன தவிர்க்கப்பட வேண்டும். காலம், நேரம், நபர்கள் வயது வித்தியாசங்கள், அறிவுத்தர வேறுபாடுகள் என்பன பயான்களின்போது கவனிக்கப்பட வேண்டும்.
நேர முகாமைத்துவம் மிகவுமே பிரதானமானதாகும். குத்பாக்களுக்கு வருவோரில் காரியாலயங்களிலிருந்து குறுகிய லீவில் வருவோர், வுழுவை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாத நோயாளிகள், நீண்ட நேரம் ஒரே இருப்பில் அமர்ந்திருக்க முடியாதவர்கள், வியாபாரத் தலங்களை மூடிவிட்டு வரும் வியாபாரிகள், நீண்ட பயணங்களை மேற்கொண்டுவிட்டு இடைநடுவே ஜும்ஆவில் கலந்துகொள்ள வந்தவர்கள், பரீட்சைகளுக்கு சமுகம் தரவேண்டிய மாணவர்கள் என பல தரப்பட்ட இடர்பாடுகள் கொண்டவர்களுமே இருப்பார்கள். அவர்களது நிலைகள் பற்றி கதீப்மார் சிந்திக்காத போது குத்பாக்களது நோக்கங்கள் பிழைத்துவிட வாய்ப்புண்டு.
குத்பாக்களை உரிய முறை பயன்தரும் விதத்தில் அமைத்துக்கொள்வதில் கதீப் மார்களுக்கு மட்டுமன்றி அவர்களை உருவாக்கிய மத்ரஸாக்கள், பள்ளி நிருவாகிகள் ஆகியோருக்கும் கூட்டுப் பொறுப்பிருக்கின்றது.
கதீப் மார்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்பட வேண்டும். பொருத்தமானவர்கள் குத்பாக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படல் அவசியமாகும். குத்பாவை முடித்துக்கொண்ட பின்னர் நிருவாகிகளும் பொது மக்களும் குத்பாவைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்களைக் கருத்திற்கொள்வதும் கதீப்மார்களது கடமையாகும்.
குத்பாக்கள் நிகழ்த்தப்படும் கால அளவு நீளமாக இருக்க வேண்டுமே என சிந்திப்பதை விட அவை குறுகிய நேரத்தில் முடிக்கப்பட்டாலும் சொல்லப்படும் விடயங்கள் மனதில் ஆழப்பதிவதை உறுதிப்படுத்தவது முக்கியமாகும். தலைப்பு வரையறுக்கப்பட்டதாக அமைவது, குர்ஆனிய, வசனங்களையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுவது, ஆதாரபூர்வமான கூற்றுக்களையும் சம்பவங்களையும் உதாரணங்களையும் துணையாகக் கொள்வது, இனிமையான இங்கிதமான சொற்பிரயோகங்கள், இலகுவான மொழிநடை, வந்திருப்போருக்குப் பொருத்தமான சமூகத்தின் கட்டுக்கோப்பைப் பலப்படுத்தும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைப்புக்களைத் தெரிவுசெய்வது போன்றன பற்றி கதீப்மார் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
குத்பாக்களினூடாக கருத்துத் திணிப்பு இடம்பெறலாகாது. மாறாக பொதுமக்களை மென்மேலும் சிந்திக்கத் தூண்டுபவையாக செயலூக்கத்தை வளர்ப்பவையாக குத்பாக்கள் அமைய வேண்டும்.
பல கதீப்கள் பற்றிய குறைபாடுகளில் ஒன்றாக அமைவது: இவர்கள் அரைத் மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கிறார்கள் என்பதாகும். பேசவும் பகிரவும் ஆயிரக்கணக்கான தலைப்புக்கள் இருக்க ஓரிரு அம்சங்களை மாத்திரம் தொடர்ந்தும் பேசுவது அலுப்புத் தட்டச் செய்கிறது.
வெள்ளிக்கிழமை குத்பாக்கள் மட்டுமல்ல பள்ளிவாயல்களிலும் பொது மேடைகளிலும் இடம்பெறும் உபந்நியாசங்களைப் பொறுத்தவரையிலும் அவை நன்கு திட்டமிடப்படல் வேண்டும். சமுதாயம் கதீப்களின் வழிகாட்டல்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறது. அன்றாடம் சுற்றுச் சூழலில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகவும் சமூக உறவுகள், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாடுகளை அறிய ஆவலாக இருக்கிறது. மார்க்கத்தைப் படித்தவர்கள் மீது பொது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை அதிகமாகும். எனவே கதீப்மார் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்க்க வேண்டும்.
ஜும்ஆவுக்கு சமூகம் தந்துவிட்டு பள்ளியிலிருந்து வெளியேறும்போது பொது மக்களது சிந்தனைப் பாங்கில் ஒரு திருப்பமும் அதிர்வும் ஏற்பட வேண்டும். குத்பாக்கள் மக்களை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவதோடு அல்லாஹ்வுடனான தொடர்பையும் அடியார்களுடனான தொடர்பையும் வலுப்படுத்த வேண்டும்.
எதனைப் பேசுவது?
மக்களால் புரியமுடியாத அவர்களுக்கு அந்நியமான அம்சங்களை கதீப்மார்கள் முற்று முழுதாகத் தவிர்ப்பது அவசியமாகும். ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமையும், தெளிவுக்குப் பதிலாக கருத்துச் சிக்கலும், மன நிறைவுக்குப் பதிலாக மனக் குளப்பமும் ஏற்படும் வகையில் பல குத்பாக்கள் அமைவதுண்டு. சாண் எறி முளம் சறுக்கும் நிலை உருவாகிறது.
அலி(ரழி) அவர்கள்:
عن علي – رضي الله عنه – أنه قال:
“حدِّثوا الناس بما يعرفون؛ أتحبون أن يكذب الله ورسوله؟“ رواه البخاري 127
‘மக்களுக்குப் பரிட்சயமான (யஃரிபூன்) வற்றைப் பேசுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் பொய்ப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டார்கள். (புஹாரி:124)
இங்கு வந்துள்ள ‘யஃரிபூன்’ என்பது அவர்களால் விழங்க முடியுமானவற்றையே குறிக்கும் என இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) குறிப்பிடுகிறார்.
‘அவர்கள் மறுப்பவற்றை விட்டுவிடுங்கள்’ (அபூநயிம்) என அலி(ரழி) மற்றொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்கள்.
இந்தக் கூற்றை இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள்;
‘ஓர் அம்சத்தைக் குறிப்பிட்ட ஒரு சாரார் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற பயத்தின் காரணமாக அதனை அவர்களுக்குக் கூறாமல் வேறு சிலருக்கு மட்டும் கூறும் பாடம்’ எனும் தலைப்பின் கீழ் போட்டிருக்கிறார்கள்.
அதற்கு முன்னால் அவர்கள் :
باب من ترك بعض الاختيار مخافة أن يقصر فهم بعض الناس فيقعوا في أشد منه (الامام البخاري)
’ஒரு விடயத்தை மக்கள் அரைகுறையாகப் புரிந்து, இருப்பதை விட மோசமான நிலைக்குச் சென்றுவிடுவர் எனப் பயந்து சில விடயங்களை விட்டுவிடும் பாடம்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள்:-
. وعن عبد الله بن مسعود – رضي الله عنه – قال: “ما أنت بمحدِّثٍ قوماً حديثاً لا تبلغه عقولهم إلا كان لبعضهم فتنة“ رواه مسلم في مقدمة الصحيح
”நீங்கள் ஒரு சமுதாயத்திடம் பேசும் விடயங்களை அந்த சமுதாயத்தின் மூளைகளால் புரிய முடியாதிருப்பின் அவர்களில் சிலருக்கு (பித்னா) சோதனையாகவே அது அமையும். (முஸ்லிம்- பா-01, ப-21) என்றார்கள்.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மக்களில் சிலர் தூற்றுவதற்கும் மறுப்பதற்கும் பிரசாரகர்கள் பிரயோகிக்கும் சொற்களோ, அணுகுமுறைகளோ, முன்வைக்கும் பாணியோ காரணமாக அமையலாம் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
அனைவரையும் கவனத்திற் கொள்வது:
குத்பாக்களுக்குப் பலதரப்பட்டவர்கள் வருவார்கள். படித்தவர்-பாமரர், விவேகிகள்- விவேகமற்றவர்கள், மார்க்கத்தில் அதிக பற்றும் பிடிப்புமுள்ளவர்கள்-மார்க்கத்தைப் பற்றிய அதிகமான சந்தேகங்களோடு குப்ருக்கு அருகிலிருப்பவர்கள், கடினமான சொற்பிரயோகங்களுக்கு பரீட்சயமற்ற தமிழ் மொழி அல்லாத மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்றெல்லாம் அவர்கள் பலவகைப்படுவார்கள். இவர்கள் அனைவரையும் கருத்திலெடுத்து குத்பா நிகழ்த்துவதென்பது கயிற்றில் நடப்பதற்கு ஒப்பானதாகும்.
எல்லோருக்கும் எல்லாம் விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும் வந்திருக்கும் பெரும்பாலானோர் அதிகபட்சம் பயனடைய வேண்டும் என்பதற்காக குத்பாக்கள் அமைக்கப்படுவது அவசியமாகும்.
இதன் அர்த்தம் சத்தியத்தை மறைப்பது என்பதல்ல, சத்தியத்தை மறைப்பவனுக்கு அல்லாஹ்வின் தண்டனை இருக்கிறது. சத்தியத்தை கூறவேண்டிய முறையில் கூறாதபோது எதிர்பார்க்கப்படும் நலன்களை விட ஏற்படும் பாதக விளைவுகள் அதிகமாகும். கட்டம் கட்டமாகப் போதிப்பது, நபர்கள், காலநேரம், சூழல் அறிந்து போதிப்பது என்பதெல்லாம் நபிகளார் (ஸல்) அவர்கள் கடைப்பிடித்த ஒழுங்கு விதிகளாகும்.
இயக்க முரண்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகள்:-
குத்பாக்கள் ஊடாக பரந்துபட்ட கருத்துக்கள் சமூகத்துக்குச் சென்றடைவதற்கு இயக்க ரீதியான பிடிவாதங்களும் ஒருவகையில் தடையாகவுள்ளன. குறித்த சில இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சில பள்ளிகளில்சந்தர்ப்பமளிக்கப்படுவதால்,பொதுமக்களிடம் குறுகிய மனப்பாங்கும், குறிப்பிட்ட ஓர் இயக்கம் பற்றிய நல்லபிப்பிராயம் மட்டுமே உருவாக இடமிருக்கிறது. குத்பாக்களுக்கு சுன்னத் வல்ஜமாஅத்தினைச் சேர்ந்தவர்கள் என இனம் காணப்பட்ட அனைத்து இயக்கத்தவர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும்.
சுருங்கக் கூறின், குத்பா மேடைகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் அல்லாஹ்வின் கிருபையால் மிக குறுகிய காலத்துக்குள் பாரிய மாற்றங்களைக் காணமுடியும்.




