பீடிகை :
தற்போது அல்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகள் சுங்கத் திணைக்களத்தில் சிக்கியிருக்கும் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவை திருப்பி அனுப்பப்பட வேண்டும் என ஒருசாராரும், அவற்றுக்கு அடிக் குறிப்புகளை இட்டு விடுவிக்க வேண்டும் என மற்றொரு சாராரும், இல்லை எவ்வித நிபந்தனைகளும் இன்றி அவை விடுவிக்கப்பட வேண்டும் என வேறு சிலரும் கூறிவருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அல்குர்ஆனுக்கான மொழிபெயர்ப்புக்கள், அதற்கான, வியாக்கியானம், அடிக்குறிப்புக்கள் தொடர்பான சில விளக்கங்களை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.
மொழிபெயர்ப்பின் தேவை
அல்குர்ஆன் அரபு மொழியில் தான் இறக்கப்பட்டது. ஆனால்,அது அரபிகளுக்கு மட்டுமான தூது என்பது அதன் அர்த்தமல்ல. அது உலகின் அனைத்து பாகங்களிலும் இருக்கும் அனைத்து மனிதர்களுக்குமானது.
காரணம் அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ்:- அது
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ- القلم 51,52
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ- .التكوير ٢٧
“அது உலகத்தார் அனைவருக்குமான நினைவூட்டி மட்டுமேயாகும்”
﴿تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا﴾ الفرقان: 1.
“உலகத்தார் அனைவருக்குமான அச்சமூட்டி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது அடியார் மீது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கும் அதனை (அல்குர்ஆனை) இறக்கிய அல்லாஹுத்தஆலா பாக்கியமிக்கவனாவான்” என்றும்
நபி(ஸல்) அவர்களைப் பற்றி
﴿وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ﴾،الانبياء ١٠٧
“உம்மை நாம் உலகத்தாருக்கான அருட்கொடையாக அன்றி அனுப்பவில்லை”
﴿قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ : سورة الأعراف ، الآية : 158
﴿وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا﴾ .سبأ ٢٨
என்றும்,
குறிப்பிடுகின்றான்.
எனவே அல்குர்ஆன் அனைத்து மனித குலத்துக்குமான தூது என்பதும் அதனை சுமந்து வந்த தூதர் அனைவருக்குமானவர் என்பதனாலும் அரபு மொழியை தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு இந்த உலகப் பொதுமறை அல்குர்ஆனின் தூதை எத்திவைப்பது அவசியமாகும். அப்படியாயின் அந்த வேதத்தின் மொழியான அரபு மொழியைத் தெரியாத நிலையில் இருக்கும் அஜமிகள் எப்படி அத்தூதை அறிந்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமானதாகும். உலக சனத்தொகையில் ஐந்து வீதமானவர்கள் தான் அரபை தமது தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு தான் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பின் அவசியம் பலமாக உணரப்படுகிறது.
எனவே – அறிஞர் அலீ என்பார் கூறுவது போல- “எம் முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன.
- உலகில் உள்ள அனைத்து பாகங்களிலும் அரபு மொழியை வியாபிக்கச் செய்ய வேண்டும்.
- அல்லது குர்ஆனின் தூதை ஏனைய மொழிகளுக்கு நகர்த்த வேண்டும். இதற்கு உச்சகட்டமாக நாம் முயற்சிப்பது அவசியம்.
ஆனால், இதில் முதலாவது முயற்சி சாத்தியப்படாது. எனவே, உலகில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் ஆத்மீகத் தாகத்தை பூர்த்தி செய்ய நாம் முயற்சிக்க வேண்டுமாயின் அது ஏனைய மொழிகளுக்கு பெயர்க்கப்பட வேண்டும். தவ்ராத்தும் இஞ்ஜீலும் 1800 மொழிகளுக்கு பெயர்க்கப்பட்டுள்ளன. மார்க்கத்திலும் ஆத்மீக விடயங்களிலும் கவனம் செலுத்துவோர் வாசிப்பதற்காக இதேஅளவு எண்ணிக்கையிலான மொழிகளுக்கு குர்ஆனும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
ஆனால், அல்குர்ஆனை மொழிபெயர்க்கும் போது நூறு வீதம் மிகச் சரியாக மொழிமாற்றம் செய்வது சாத்தியப்படாது என்பதை மறுப்பதற்கில்லை. அது அரபு மொழிக்கு மட்டுமின்றி எனைய எல்லாம் மொழிகளுக்கும் பொருந்தும் விடயமாகும். ஆனால், அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தினதும் உயிரோட்டத்தை விளங்கி, இலக்கு மொழியில் அதன் நோக்கத்தை உரிய முறையில் புரியவைக்க தேவையான அணுகுமுறைகளை நாம் கையாள வேண்டும்.
எனவே தான் அல்குர்ஆனை மொழிபெயர்த்தவர்களான பிக்தால் ‘குர்ஆனின் கருத்துக்களது மொழிபெயர்ப்பு’ என்றும் ஆர்தஜ் உமரி என்பார் ‘கருத்துக்களை நகர்த்துதல்’ என்றும் தமது அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளுக்கு பெயர்கள் வைத்துள்ளனர்.” (எஸ்.ஐ.அலீ.தர்ஜமது மாலா யுதர்ஜம்,அந்நத்வதுல் ஆலமிய்யா லி தர்ஜமதி மஆனில் குர்ஆனில் கரீம்,இஸ்தன்பூல்,1986. பக்:82)
“அல்குர்ஆன் அரபிகளுக்கு மட்டுமானது அல்ல. எல்லா மனிதர்களுக்குமானது குர்ஆன் மொழிபெயர்க்கப்படக் கூடாது என்றால் ஏனைய சமூகத்தினருக்கு அது மூடப்பட்டு அரபிகளுக்கு மட்டும் திறந்திருக்கும். ஆனால் குர்ஆன் மக்கள் அனைவருக்குமானது என உறுதியாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.”என கலாநிதி அப்துல் கரீம் தபீபி கூறுகிறார்.(கலாநிதி அப்துல் கரீம் தபீபி, தப்ஸீருல் குர்ஆனில் கரீம் வ தர்ஜமதுஹூ, பக்:45)
டாக்டர் ஹமீதுல்லாஹ்வின் கருத்து பின்வருமாறு அமைந்துள்ளது. :-
“எமது காலத்தில் ‘தர்ஜமதுல் குர்ஆன்’ என்ற சொல்லை பாவிக்கலாகாது என சில எழுத்தாளர்கள் கூறுவர். இஸ்லாமிய வரலாற்றின் தொன்மைக் காலத்தில் இருந்து இஸ்லாமிய உலகின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் வாழ்ந்த முன்னோர்கள் எவ்வித எதிர்ப்புகளும் இன்றி இந்த சொல்லைப் பிரயோகித்திருக்கிறார்கள். அடிப்படையில் அரபு மொழியில் கூறப்படும் கருத்துக்களை நூறு வீதமாக இலக்கு மொழிக்கு பெயர்க்க முடியாது. ஆனால் எதனையாவது முழுமையாக அடைய முடியாவிட்டாலும் முடியுமான அளவு அடையலாம். எமக்கு முடிந்த அளவு நாம் ஈடுபட வேண்டும்.”
மேலும் கலாநிதி ஹமீதுல்லாஹ் எழுதும் போது “நபி(ஸல்) ஹுதைபியா உடன்படிக்கையை முடித்து மதீனா திரும்பியவுடன் ‘இக்ரஃ’ என்ற குர்ஆனின் கட்டளைக்கு இணங்க பைஸாந்திய (ஐரோப்பா கண்டம்) மன்னர் ஹிரகலுக்கும், மதாயின் (ஆசியா கண்டம்) பகுதியில் இருந்த கிஸ்ரா பாரசீக தளபதிக்கும், இஸ்கந்தரியா (ஆபிரிக்க கண்டம்) இருந்த முகவ்கஸுக்கும், ஹபஷாவிலிருந்த நஜ்ஜாஷிக்கும் பேனாவை பயன்படுத்தி சகல கண்டங்களிலும் இருந்த மக்களையும் இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அரபு மொழியில் தான் அவை இருந்தன.அவற்றில் குர்ஆன் வசனங்களும் இருந்தன. கிறிஸ்தவம், நெருப்பு வணக்கம் போன்ற கொள்கை கொண்ட அரசர்களுக்கு அவற்றை அனுப்பினார்கள். அவ்வரசர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பாளர்கள் அந்த கடிதங்களை அவர்களுக்கு மொழிபெயர்த்திருப்பார்கள் என்பது தெளிவான உண்மையாகும். எனவே, குர்ஆனின் சில பகுதிகளை முஸ்லிமல்லாதவர்களுக்கு அல்லது இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அனுப்புவது நபிகளாரின் சுன்னாவாக இருந்தது. அவை முஸ்லிம் அல்லாதவர்களால் மொழிபெயர்க்கப்பட்டும் வந்தன.
அதேபோல் வரலாற்றில் பல மொழிகளில் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. உமையா கலீஃபா அப்துல் மலிக்கின் காலத்தில் அல்குர்ஆன் சுரியானி மொழிக்கு பெயர்க்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.
தற்போது உருதுவில் 300, துருக்கி பாரசீக மொழிகளில் 100, ஆங்கிலத்தில் 146, ஜெர்மனில் 55, பாரசீகத்தில் 58, லத்தீனில் 53, ரஷ்யனில் 11 என்ற எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன” எனக்கூறினார்.
கலாநிதி ஹமீதுல்லாஹ் இந்தக் கருத்தை 1986ஆம் ஆண்டு எழுதும் போது இவ்வளவு எண்ணிக்கை இருந்திருந்தால் தற்போது எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்திருக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
இது எப்படியிருக்க அல்குர்ஆனை மொழிபெயர்க்கவே கூடாது என்றும் அதனால் ஏற்படும் பயன்களை விட பாதிப்புகள் தான் அதிகம் விளையும் என்றும் வாதிடுவோர் இஸ்லாமிய உலகத்தில் அன்றும் இன்றும் இருந்தார்கள்.
குறிப்பாக ஸயீத் ரமழான் பூதி(ரஹ்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனித்துவவாதிகளது சதியால் தான் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து முஸ்லிம் சமூகத்தில் வலுத்தது என்று குறிப்பிடுகிறார்.(தர்ஜமதுல் குர்ஆன், அப்துல் வகீல் அத்தரூலி,மக்தபது தாரில் இர்ஷாத், எகிப்து, பக்:- 08)
அடிக்குறிப்புக்கள் விவகாரம்!
சில குர்ஆன் வசனங்களை விளக்கவுரை அல்லது அடிக்குறிப்புகள் இன்றி மொழிபெயர்ப்பது நல்லதா?
திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அதிலுள்ள பல சொற்களும் மொழிநடைகளும் பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கியவை. ஒரு வசனம் பொதுவானதாக அதாவது- ‘ஆம்’ ஆக இருக்கலாம்; ஆனால், மற்றொரு வசனம் அதன் பொருளை ‘காஸ்’ ஆக்கி அதாவது வரையறுத்திருக்கலாம். இன்னொரு வசனம் முழுமையான ‘முத்லக்’ வடிவில் இருக்கலாம்; ஆனால் வேறொரு அல்குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் அதனை ‘முகையத்’ ஆக அதாவது நிபந்தனைப்படுத்தியிருக்கலாம்.
எனவே, குறிப்பாக சட்ட வசனங்களைப் பொருத்தவரையில் அவற்றை நேரடியாக வாசித்தவுடன் முடிவுக்கு வரக்கூடாது.
அதேபோல மற்றொரு விடயத்தையும் குர்ஆனை விளங்கும் போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஒரு வசனம் அருளப்படுவதற்கு காரணம் (ஸபபுன் நுஸூல்) இருக்கலாம்.எனவே, போர், சண்டை மற்றும் பிற சமூகங்களுடனான மோதல்கள் தொடர்பான குர்ஆன் வசனங்களை வெறும் மொழிபெயர்ப்பின் மூலம் மட்டும் புரிந்துகொள்ள முடியாது.
யத்தங்கள் பற்றி கூறும் வசனங்கள் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலைகளில் அருளப்பட்டவை. அவை பெரும்பாலும் எதிரிகளின் தாக்குதல்கள், உடன்படிக்கை மீறல், முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தல் அல்லது நடைபெற்று வந்த ஆயுத மோதல்களுக்கு பதிலாக அருளப்பட்டன. இந்தப் பின்னணியை அறியாமல் அவற்றைப் படிக்கும் ஒருவர், குர்ஆன் முஸ்லிம் அல்லாத எல்லோருடனும் எப்போதும் போரிடுமாறு கட்டளையிடுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் அது எல்லா மாற்று மதத்தவர்கள் தொடர்பான குர்ஆனின் பொதுவான நிலைப்பாடு அல்ல.போர் தொடர்பான பல வசனங்களின் பொருளை, குர்ஆனிலுள்ள பிற வசனங்களை வைத்தே விளக்க வேண்டும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஆயுத ரீதியாக எதிர்கொள்ளும் முஸ்லிம் அல்லாதவர்கள் பற்றி அல்குர்ஆன் பொருத்தமான நிலைப்பாடுகளை எடுக்கின்றது: அவற்றின் சுருக்கம்:
அவை:
தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக மட்டுமே போரிட அனுமதிக்கின்றன.
உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் மதிக்குமாறு கட்டளையிடுகின்றன.
எதிரிகளிடத்திலும் நீதியை நிலைநிறுத்துமாறு வலியுறுத்துகின்றன.
போரின் போது எல்லை மீறுவதைத் தடை செய்கின்றன.
எதிரிகள் போரை நிறுத்தினாலோ அல்லது சமாதானத்தை நாடினாலோ போரை நிறுத்துமாறு கட்டளையிடுகின்றன.
எனவே, மரபுவழி மற்றும் சமகால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும், போர் தொடர்பான வசனங்களை அவை
அருளப்பட்ட காரணங்கள் (அஸ்பாபுன் நுஸூல்),
அவற்றின் முன்–பின் வசனங்கள்,
நபி ﷺ அவர்களின் நடைமுறை (சுன்னா)
இஸ்லாமிய சட்டத்தின் மொத்த நோக்கங்கள்
ஆகியவற்றின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆகையால், போர் தொடர்பான குர்ஆன் வசனங்களை விளக்கவுரை இன்றி மொழிபெயர்ப்பது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இஸ்லாம் போர், சமாதானம்,இணைந்து வாழ்தல் மற்றும் பிற மதத்தவர்களுடனான உறவுகள் குறித்து என்ன போதிக்கிறது என்பதைக் குறித்து கடுமையான தவறான கருத்துகள் நிலவுகின்றன. எனவே அல்குர்ஆனை முழுமையாக படித்ததன் பின்னரே ஹதீஸ்கள் மற்றும் இமாம்களது கருத்துக்களது வெளிச்சத்திலேயே இறுதியான முடிவுகளைப் பெற முடியும். இதனால் தான் அல்குர்ஆனுக்கு விளக்கவுரை தேவை என்ற கருத்து அனைவராலும் முன் வைக்கப்படுகிறது.
எனவே சில வசனங்களை எந்தவித விளக்கமும் இன்றி மொழிபெயர்த்து வெளியிடுவது சில சந்தர்ப்பங்களில்:
- தவறான புரிதலை ஏற்படுத்தலாம்.
- வசனங்களை அவற்றின் சூழலிலிருந்து பிரித்து விளங்கச் செய்யலாம்.
- அல்லாஹ் நாடாத பொருளில் அவற்றை ஆதாரமாகப் பயன்படுத்த வழிவகுக்கலாம்.
மொழிபெயர்ப்புச் செய்தல்
அதேநேரத்தில், விளக்கவுரை இல்லாத ஒவ்வொரு குர்ஆன் மொழிபெயர்ப்பும் ஆபத்தானது அல்லது அனுமதிக்கப்படாதது என்று கூறுவதும் சரியல்ல. தகுதியுள்ள அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட, நம்பகமான மொழிபெயர்ப்புகள், அரபு மொழியை அறியாதவர்கள் குர்ஆனின் பொருளை அணுகுவதற்காகவே உருவாக்கப்பட்டவை. மொழிபெயர்ப்பு மட்டுமே குர்ஆன் அல்ல. மேலும், மூல அரபு வசனத்தின் அனைத்து அர்த்தங்களையும் அது முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அது வேறொரு மொழியில் குர்ஆனின் பொருளை விளக்கும் ஒரு முயற்சியாகும்.
எனவே, சரியான அணுகுமுறை:
- தகுதியுள்ள அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட நம்பகமான மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
- தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வாய்ப்புள்ள அல்லது விளக்கம் அவசியமான வசனங்களுக்கு சுருக்கமான விளக்கக் குறிப்பை இணைப்பது சிறந்தது.
- குர்ஆனை ஆழமாகப் படிப்பதிலும், மார்க்கச் சட்டங்களைப் பெறுவதிலும், மொழிபெயர்ப்பை மட்டும் நம்பி இருக்கக் கூடாது.
எனவே, சில குர்ஆன் வசனங்களை விளக்கவுரை இன்றி மொழிபெயர்ப்பது சில சூழ்நிலைகளில் ஆபத்தாக இருக்கலாம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.
ஆனால் விளக்கமில்லாத மொழிபெயர்ப்புகள் ஆபத்தானவை என்று பொதுவாகக் கூறுவதும் சரியல்ல. ஏனெனில் அது எந்த வசனம், மொழிபெயர்ப்பின் தரம், மற்றும் வாசகரின் அறிவுப் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
மன்ஸூக் வசனங்கள்:-
அதேபோல் அல்குர்ஆனில் தற்போதும் உள்ள சில வசனங்கள் உள்ளன. அவை ‘மன்ஸூக்’ ஆனவை எனப்படும். நபியவர்களது காலத்திலேயே அந்த வசனங்கள் மாற்றப்பட்டு புதிய வசனங்கள் அல்குர்ஆனில் வந்துள்ளன. சில பல நோக்கங்களுக்காக மாற்றப்பட்ட வசனங்களும் அல்குர்ஆனில் உள்ளன.
உதாரணமாக “நீங்கள் போதையோடு இருக்கின்ற பொழுது தொழுகையை நெருங்க வேண்டாம்” என்ற வசனத்தை இங்கு குறிப்பிட முடியும். ஆனால், இந்த வசனம் சொல்லுகின்ற கருத்து தற்போது நடைமுறையில் இல்லை. அதற்கு பின்னர் இறக்கப்பட்ட, மதுவை பூரணமாக தடை செய்யும் வசனம் தான் தற்போது அமுலில் உள்ளது. எனவே தொழுகைக்கு நெருங்க வேண்டாம் என்ற வசனத்தை வைத்து அது அல்குர்ஆனில் இருந்தாலும் நாம் செயல்படுத்தமாட்டோம். சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும். ஆனால் அல்குர்ஆனில் அவை காணப்படும். இதற்காக அந்த வசனத்தை அல்குர்ஆனில் இருந்து நீக்க வேண்டும் என்றோ அதனை மொழிபெயர்க்கக் கூடாது என்றோ யாரும் கூற முடியாது.அதனை அல்குர்ஆனில் அல்லாஹ் அப்படியே வைத்திருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை நாம் விளங்கி இருப்போம் அல்லது உறங்காமல் இருப்போம்.
அல்குர்ஆன் தற்போது இருக்கும் முழுமையானது ஓர் எழுத்தை கூட யாரும் மாற்ற முடியாது . ஜிப்ரஈல் (அலை) அவர்கள் இறுதியாக ரமழானில் நபியவர்களுக்கு அல்குர்ஆனை ஓதிக் காட்டி இந்த அமைப்பை அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் முழுமையாக அங்கீகரித்தார்கள். எனவே இப்போது இருக்கின்ற வேதத்தில் எந்த ஒரு கூடுதல் குறைவையும் யாரும் ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு அதிகாரமும் கிடையாது.
الر ۚ كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِن لَّدُنْ حَكِيمٍ خَبِيرٍ
“அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.” (ஹூத்:01)
எந்த வசனத்தை வைக்க வேண்டும் எதனை நீக்க வேண்டும் எந்த சொல்லை எந்த இடத்தில் பிரயோகிக்க வேண்டும் என்ற அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் தான் இடம்பெற்றிருக்கின்றன என்பது எமது ஆழமான விசுவாசமாகும்.
சூழ்நிலைகளைக் கவனதில் எடுப்பது:-
மேலும் அல்குர்ஆனில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து விளங்க வேண்டிய- அமுலாக்க வேண்டிய பல வசனங்கள் இருக்கின்றன.
உதாரணமாக “களவெடுத்த ஆணினதும் களவெடுத்த பெண்ணினதும் கைகளை வெட்டுங்கள்” என்ற குர்ஆன் வசனம் அல்குர்ஆனில் உள்ளது.ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அதன் சட்டத்தை நாம் அமலாக்குவதில்லை. சந்தர்ப்பம், சூழல், இஸ்லாமிய அரசு என்பன அதனை அமுலாக்குவதற்குத் தேவை.
பஞ்சம் நிலவிய காலத்தில் உமர்(ரலி)அவர்கள் களவெடுத்தால் கை வெட்டும் சட்டத்தை அமுலாக்கவில்லை. பஞ்சத்தை நீக்குவதற்கான ஏற்பாட்பாடுகளைச் செய்யாமல் இந்த குற்றவியல் சட்டத்தை அமுலாக்க முடியாது என்பது அவரது கருத்தாக அமைந்தது.
அதேபோன்று தான் “அவர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள்” என்ற வசனமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளோடு முழுக்கவும் சம்பந்தப்பட்டது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து, அதனை ஒழித்துக் கட்டுவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்த குறைஷியரைத் தான் அவ்வாறு அணுகும் படி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதேபோன்று அதே தன்மையோடு எக்காலப் பிரிவில் யார் வாழ்ந்தாலும் அவர்களுக்கும் அது அமுலாகும்.
ஆனால், முஸ்லிம்களோடு சமாதான சகவாழ்வை மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு பிற மதத்தவரையும் இந்த வசனங்களில் கூறப்படுவது போன்று கடுமையாக நடத்த முடியாது. இலங்கை சூழலுக்கு இதுதான் பொருத்தமானதாகும்.
மாறாக, அல்குர்ஆனில் வரும் சூரா மும்தஹனானாவின் “மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.” (60:08) என்ற வசனத்தின் படி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நாம் உதவி ஒத்தாசை செய்வதும் அவர்களுடன் நீதியாக நடப்பதும் தான் கடமையாகும்.
எனவே,
- மாற்றப்பட்ட வசனங்கள்
- சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப புரிந்து அமலாக்கப்பட வேண்டிய வசனங்கள்
எல்லாம் அல்குர்ஆனில் இருப்பதனால் அவை பற்றிய விளக்கம் அல்குர்ஆனை ஓதுபவருக்கு இருப்பது அவசியமாகும்.
ஆனால், இவ்வாறான வசனங்கள் ஒப்பீட்டளவில் அல்குர்ஆனில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலைகளோடு சம்பந்தப்பட்ட வசனங்கள், மாற்றப்பட்ட வசனங்கள் மிக மிகக் குறைவாகும்.
பல பொருள்கள்: அல்குர்ஆனில் உள்ள சில சொற்கள் பல பொருள்களை அல்லது கருத்துக்களைத் தருபவையாக உள்ளன.பொதுவாக மொழிபெயர்ப்பின் போது அவற்றிலிருந்து ஒரு கருத்தை மட்டுமே மொழிபெயர்ப்பாளர் தருவதுண்டு.
அல்லாஹ்வின் கலாம் : அல்குர்ஆன் உலகில் இருக்கும் இலக்கியங்களுள் தனித்துவமானத்தாகும். அதற்கு நிகர் கிடையாது. காரணம் அது அல்லாஹ்வின் கலாமாகும். எனவே அதன் மொழிநடையும் உள்ளடக்கமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு விசேடமானவையாக இருப்பதால் மனிதர்கள் அதனை மொழிமாற்றம் செய்யும் போது அந்த மொழிபெயர்ப்புக்கள் பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. இயன்ற வரை ஓரளவே அப்பணி வெற்றியாக அமையும்.
சுருக்கமான விளக்கக் குறிப்புக்கள்
எனவே, பிழையாக விளங்கப்படலாம் எனக் கருதப்படும் வசனங்களுக்கு சுருக்கமான விளக்கக் குறிப்போ அல்லது நம்பகமான வியாக்கியானக் குறிப்புக்களோ இணைக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இறுதியாக ஒரு விடயத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.
அதாவது, இலங்கையைப் பொறுத்தவரையில் அல்குர்ஆனுக்கான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிபெயர்ப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும். இஸ்லாமிய தஃவாவுக்கான மற்றும் இஸ்லாத்தைப் பற்றி பிறர் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அது அமையும். ஆனால், அந்த மொழிபெயர்ப்புக்கள் சமூகத்துக்குச் சென்றடைவதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றோ அவை தவறாகப் புரியப்பட்டு பிரச்சினைகள் உருவாகும் என்றோ துறைசார்ந்தவர்கள் கருதினால் அத்தகைய வசனங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட தனியான நூல்களை இயற்றி மொழிபெயர்ப்புகளோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே உள்ள தர்ஜமாக்களில் அடிகுறிப்புகளை கட்டாயமாக இடவேண்டும் என்று சொல்லுவது பொருத்தமானதல்ல. இதற்குப் பிறகு வெளியிடப்படவுள்ள தர்ஜமாக்களில் அவ்வாறு செய்வதனை பற்றி யோசிக்கலாம்.
இலங்கையில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் தமது மார்க்கத்தில் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களைக் கொலை செய்யவுமில்லை. களவுகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களில் கைகள் வெட்டப்படப்படவுமில்லை.
யார் கூறினாலும் கூறவிட்டாலும் புத்தகங்களையோ கையேடுகளையோ வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அந்த வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன என்பதை எமது முஸ்லிம்கள் புரிந்து வைத்திருந்தார்கள். அதனால் இதுகால வரை அவர்கள் சமயோசிதமாகவே நடந்து கொண்டார்கள்.
ஆனால் முஸ்லிம்களது பெயரை வைத்துக் கொண்டு சிலர் செய்த அட்டூழியங்கள் அதாவது ஈஸ்டர் தாக்குதல்கள் இந்த அல்குர்ஆன் வசனங்களை படித்து உணர்ச்சி வசப்பட்டதனால் தான் நடந்ததன என்று சொல்வது அபத்தமாகும். அதற்கு வேறு காரணங்கள் காணப்படுகின்றன என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.
தற்போது இத்தகைய வசனங்கள் தவறாக புரியப்படும் என்றிருந்தால் அவற்றை விளக்குவதற்கு தனியான நூல்களும் விரிவுரைகளும் மற்றும் வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் அதற்காக அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் வரக்கூடாது என்ற முடிவை எடுப்பது பொருத்தமானதல்ல.
எனவே அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புகளையும் அந்த அல்குர்ஆனுக்கு விளக்கமாக இருக்கின்ற வியாக்கியான நூல்களையும் வேறு கையேடுகளையும் அதிகமாக வெளியிட்டு அல்குர்ஆனை சமூகத்திற்கு சேர்ப்பிக்கும் பணியில் ஈடுபடுவோமாக.
அல்லாஹ் அவனது அருள் மறைக்கு சேவகம் செய்த, இஸ்லாமிய தஃவாப் பணியை சூழலுக்கு ஏற்ப மேற்கொள்கின்ற கூட்டத்தில் எம் அனைவரையும் ஆக்குவானாக!
எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே!



