இழப்புக்கள் சகஜம்!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கக் கூடாது!

சவால்கள், எதிர்ப்புகள்,இழப்புக்கள் என்பன இல்லாமல் சத்தியம் உலகத்தில் நிலைக்கமாட்டாது என்ற பொது உண்மைக்கு இணங்க முஸ்லிம் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

உலகத்தில் தோன்றிய எல்லா நபிமார்களும் பலத்த சவால்களுக்கு மத்தியில் தான் தமது தூதை மேற்கொண்டார்கள்.நாடு கடத்தப்படல், சிறையில் போடப்படுதல், நெருப்பிலிடப்படல், கொலை செய்யப்பட ல் போன்ற இருள் சூழ்ந்த நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இறுதியில் அல்லாஹ்வின் வெற்றி அவர்களுக்கு கிடைத்தது. ஆனால் அவர்கள் நிராசையடையவில்லை.

நபி(ஸல்) அவர்களது காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் வந்த ஸஹாபாக்களது காலத்திலும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்கள் மிக அதிகம். நாம் அக்காலத்தில் இருந்திருந்தால் அதற்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்போம்.ஆனால் அல்லாஹ்வின் அருளால் எல்லா தடைகளையும் மீறி இஸ்லாம் வீறுநடை பயின்று இன்று எம்மிடம் இந்த அளவு வளர்ச்சிகண்டு வந்திருக்கிறது.

உஹது யுத்தத்தில் எழுபது பேர் கொல்லப்பட்ட போது இஸ்லாம் அன்றோடு முடிந்து விட்டது என்று எதிரிகள் யோசித்திருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் அருளால் அது மீண்டும் பலமடைந்தது.

நபியவர்களது வஃபாத்தோடு இஸ்லாம் முடிந்திருக்கலாம். ஆனால் அல்லாஹ் தனி மனிதனோடு இஸ்லாத்தின் வளர்ச்சியை தொடர்புபடுத்தவில்லை. நபியவர்களுக்கு பின்னர் வருபவர்களும் அந்த உயர்ந்த பாரம்பரியத்தை தமது தோள்களில் சுமப்பார்கள் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் கிலாபத்தை பொறுப்பெடுத்த பொழுது மதம் மாறியோர், ஸகாத் கொடுக்க மறுத்தோர், பொய் நபித்துவத்தை வாதித்து குழப்பம் விழைவித்தவர்கள் என்று பலரையும் பல்கோண சிக்கல்களை சந்தித்தார்கள். ஆனால் அவர்களை மிக சமார்த்தியமாக எதிர்கொண்டார்கள். இறுதியில் இஸ்லாத்திற்கு வெற்றி கிடைத்தது. அல்குர்ஆன் கூட அவர்களது காலத்தில் நியாயமான அளவு தொகுக்கப்பட்டது.

உமர் (ரலி) கொல்லப்பட்டாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை தொடர்ந்தும் பாதுகாத்தான். அதேபோன்று அதற்குப் பின்னால் வந்த இரண்டு கலீபாக்களும் சதிகாரர்களால் படுமோசமாகக் கொலை செய்யப்பட்டார்கள்

ஆனாலும் இஸ்லாம் உலகத்தில் அல்லாஹ்வால் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டது.

கி.பி 1099 சிலுவைப் போரின் போது குதுஸ் பகுதியில் 70,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் ஸலாஹுத்தீன் ஐயூபி குத்ஸை மீட்டெடுத்தார், தாத்தாரிய யுத்தங்கள், மங்கோலிய யுத்தங்கள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் முஸ்லிம் சமூகம் மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட பொழுது அல்லாஹ்வின் அருளால் அவ்வப்போது தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் சமூகம் மீண்டும் வலுவோடு நடைபயின்றது.

இஸ்லாத்தின் போராளிகளான ஸலாஹுத்தீன், நூருத்தீன் போன்ற காவலர்களது முயற்சியாலும் முஜஜ்தித்களது அளப்பரிய சிந்தனா ரீதியான பங்களிப்பினாலும் அது உயிரோட்டம் மிக்க சக்தியாக மாறியது.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பல்கோணங்களில் இருந்தும் மிகப் பயங்கரமான சவால்கள் தொடுக்கப்பட்ட போதிலும் இன்னொரு வகையில் பார்க்கின்ற பொழுது தற்காலத்தில் முஸ்லிம் சமூகம் எழுச்சியடைந்து வருகிறது என்ற உண்மையையும் அடிக்கடி நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்கள் தற்போது முன்னேபோதும் இல்லாத வகையில் விதவிதமாகவும், பல கோணங்களில் இருந்தும், திட்டமிடப்பட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது.

Islam, with over two billion followers, is the second-largest religion globally and projected to outnumber Christians by 2050.

“இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இஸ்லாம், உலகளவில் இரண்டாவது பெரிய மதமாகும், மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

என World Population Review எனப்படும் வெப்தளம் கூறுகிறது.

இந்தோனேசியாவில் 24 கோடி, பாகிஸ்தானில் 24 கோடி, இந்தியாவில் 20 கோடி என்ற வகையில் 200 கோடி முஸ்லிம்கள் உலகில் வாழ்கிறார்கள்.

https://worldpopulationreview.com/…/muslim-population…

இஸ்லாமிய எழுச்சியின் வடிவங்களை நாம் பல நாடுகளிலும் தெட்டத் தெளிவாகக் கண்டு கொண்டிருக்கிறோம்.

இஸ்லாத்தை நோக்கி மில்லியன் கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வளவு சந்தேக வலைகளுக்கு மத்தியிலும் இஸ்லாம் பற்றிய தெளிவு உலகத்தில் ஏற்பட்டு வருகிறது. இஸ்லாமிய உலகத்தில் அல்குர்ஆனையும் சுன்னாவையும் நோக்கி மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற நற்செய்தியையும் நாம் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் மற்றோர் உண்மையை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த தீன் ரப்புல் ஆலமீனிடமிருந்து வந்தது என்ற காரணத்தினால் அது சவால்களை, சிக்கல்களை எதிர்நோக்கமாட்டாது என்று எவரும் சிந்திக்க கூடாது. இஸ்லாத்தின் வரலாறு சோதனைகளுக்குடன் இரண்டறக் கலந்தது. அதுதான் சுன்னத்துல்லாஹி எனப்படுகின்ற இறைநியதியாகும்.

حَتَّى إِذَا اسْتَيْئَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا جَاءَهُمْ نَصْرُنَا فَنُجِّيَ مَنْ نَشَاءُ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ ﴾ [يوسف: 110].

“(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.”

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟

“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

எனவே அல்லாஹ் எம்மிடமிருந்து ஈமானையும் தியாகத்தையும் முயற்சிகளையும் எதிர்பார்க்கின்றான். அவற்றின் ஊடாகவே வெற்றியை அவன் தருவான். இந்த இஸ்லாமிய பயணத்தில் யார் உறுதியான ஈமானோடு முயற்சியும் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சோதிப்பான். ஆனால் இறுதி வெற்றி இஸ்லாத்திற்கு கிடைக்கும்.

இந்த நம்பிக்கை எப்போதும் எம்மை விட்டு அகலக்கூடாது. நாம் நிராசை அடைந்து விடக்கூடாது .அல்லாஹ்வின் அருளில், அவனது வெற்றியில் ஆழமாக நம்பிக்கை வைக்க வேண்டும். இஸ்லாத்துக்கு எதிரான ஆயுத ரீதியான சிந்தனை ரீதியான போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது நாம் அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி அவனது உதவியை கேட்டு பிரார்த்திப்பதோடு எம்மாலான முயற்சிகளையும் செய்து இஸ்லாத்துக்கு எதிரான சவால்களை முறிய எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

உலகத்தில் நாஸ்திகம் சடவாதம் புலன் இன்ப வாதம் என்பனவற்றோடு நாடுகளும் சிந்தனையாளர்கள் முக்கியஸ்தர்கள் என்போரும் தோல்வி கண்டுவருவதும் போலிகள் தோலுரிக்கப்படுவதும் பெற்று தெளிவான உண்மையாகும்.

தற்போது அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் மாத்திரமே மனித வாழ்வுக்கான பற்றுக் கோடு என்ற கருத்து மேலோங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ் எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதியான ஈமானோடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு வாழ்வதற்கான பாக்கியத்தை எம் அனைவருக்கும் தருவானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top