குறிப்பிட்ட ஒரு மத்ரஸாவில் அல்லது ஜாமிஆவில் கற்ற ஆலிம் பிழையாக நடந்து கொள்ளுகின்ற பொழுது அவர் கல்வி கற்ற மதரஸாவின்/ ஜாமிஆவின் குற்றமாக அது பார்க்கப்பட முடியுமா என்பது ஒரு கேள்வியாகும்? அதற்கான தூண்டுதலை அந்த மதரசா/ஜாமிஆ தான் கொடுத்தது என்று கூற முடியுமா?
நபி(ஸல்) அவர்களது காலத்தில் அபுஜஹ்ல், அபூலஹப் மட்டுமல்ல இன்னும் பல காபிர்களும் இருந்தார்கள். நபியவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், எத்தனையோ அணுகுமுறைகளை கையாண்டும் கூட அவர்கள் திருந்தவில்லை; இஸ்லாத்துக்கு வரவில்லை. ஆனால், அது இஸ்லாத்தில் உள்ள அல்லது இஸ்லாமிய பிரச்சாரத்தில் உள்ள பிழை என்பதல்ல. மாறாக அந்த அந்த பிரசாரத்திற்கு உட்பட்டவர் (மத்ஊ)வின் பிழையும் மனநிலையும் தான் அதற்கு காரணமாகும். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்கவில்லை என்பதுதான் சுருக்கமாகும்.
மதீனாவில் நபியவர்களது சபைக்கு வந்து இஸ்லாத்தை கற்று இஸ்லாத்துக்கு வராமல் இருந்தது மட்டுமல்ல இஸ்லாத்துக்கு எதிராக தொடர்ந்தும் பல சதிகளை செய்து கொண்டிருந்தவர்கள் தான் முனாஃபிக்குகள். ஆனால் அவர்கள் அப்படி இருந்தமைக்கு இஸ்லாத்தில் இருந்த குறைபாடோ நபியவர்களது பிரசார உத்தியில் இருந்த பிழையோ காரணமல்ல. அல்லாஹ் அந்த முனாபிக்குகளுக்கு ஹிதாயத்தை கொடுக்கவில்லை என்பது தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மதீனாவின் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் கூட குற்றமிழைத்தவர்கள் இருந்தார்கள். அந்த சமூக அமைப்பில் விபசாரம் செய்தவர்கள்(மாஇஸ்), சமூகத்தை காட்டி கொடுத்தவர்கள்(ஹாதிப்), யுத்தத்திற்கு போகாமல் இருந்தவர்கள்(கஃப்), யுத்தம் நடக்கின்ற பொழுதே கனீமத்து பொருட்களை திரட்டுவதில் கவனமாக இருந்தவர்கள் (உஹது சம்பவம்) போன்றோரைக் காண முடியும். எனவே அதனை வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமிய தூதரையும் குறை காண்பது தவறாகும்.
மத்ரஸாக்களில்/ ஜாமிஆக்களில் இருந்து வெளியேறுபவர்கள் மலக்குகள் அல்லர். அவர்களும் மனிதர்கள் தான்; தவறு செய்யக் கூடியவர்கள் தான் என்ற உண்மையை எவரும் மறந்துவிடக்கூடாது. இது தவறு செய்கின்ற ஆலிம்களுக்கு சுண்ணா பூசுவதற்கான முயற்சியோ அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று கூறுவதற்கான நியாயப்படுத்தலோ அல்ல. பிழை பிழை தான். தவறு தவறுதான். அது யார் செய்தாலும் அப்படியே.
இஸ்லாத்தை ஆழமாக படித்துவிட்டு தவறு செய்பவர்கள் சாதாரண பொது மக்களை விடவும் பாரதூரமானவர்கள். “ஆலிமின் சறுகுதல் ஆலமின் (உலகத்தின்) சறுக்குதலாகும்” என்று சொல்லப்பட்டதன் ஆழத்தை புரிந்திருக்க வேண்டும்.
‘காஞ்சி போன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடைய முடியும். நதியே காய்ந்து போனால் யாரை பார்த்து ஆறுதல் அடைய முடியும்’ என்ற ஒரு கவிஞனின் கூற்றும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை ஆலிம்களில் சிலர் சிலபோது மதம் மாறலாம். பாரிய குற்றங்களை இழைக்கலாம். சில போது பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். அதற்காக அவர்களது நடவடிக்கைகளை வைத்து அவர்களது கலா நிலையங்களை சாட முடியாது. மாறாக கலாநிலையத்தை நடத்துபவர்களோடு இது சம்பந்தமாகப் பேச வேண்டும். அவர்கள் தமது கல்வித் திட்டங்களையும் பயிற்சி நெறிகளை பற்றி சிந்திக்கும் படியும் மீள் பரிசீலனை செய்யும் படியும் அமைதியாக கௌரவமாக அவர்களுக்கு சொல்ல வேண்டும். அதுதான் ஹிக்மத்தும் இஸ்லாமிய வழிமுறையுமாகும்.
அதுவல்லாமல் குறிப்பிட்ட ஒரு ஆலிமின் தவறை நேரடியாக அவருக்கு கூறுவதையும் அந்த கலா நிலையத்தில் பொறுப்பான இருப்பவர்களோடு கலந்து உறவாடுவதையும் விடுத்து அவரை அம்பலப்படுத்துவதும் அவரை தாறுமாறான சொற்களால் விமர்சிப்பதும் சிலபோது அவருக்கு மட்டும் அல்ல அவர் சார்ந்துள்ள நிறுவனத்துக்கும் இஸ்லாத்துக்கும் கெட்ட பெயரையும் இஸ்லாத்திற்கு இருக்கும் மரியாதையையும் இல்லாமல் செய்யக்கூடும்.
அதேபோல ஒரு கலா நிலையத்திலிருந்து வெளியேறிய ஒருவர் தான் ஒரு மனிதர் அல்ல என்பதையும் தான் ஒரு நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்றும், தான் விடுகின்ற தவறுகள் அந்த நிறுவனத்தையும் அதன் கொள்கையையும் பாதிக்கும் என்றும் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அவர் தனது நிறுவனத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்கும் அதனது கொள்கையை வளர்ப்பதற்கும் பாடுபட வேண்டும்.
இது எப்படி போனாலும் அல்லாஹ்வின் கலாமை கற்ற, ஷரீஆ துறையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் இகலாசுடனும் ஆழமான அறிவுடனும் சமூக உணர்வுடனும் பொறுப்புணர்ச்சியோடும் அக்கம் பக்கம் பார்த்தும் நடந்து கொள்ள வேண்டும். இது எம் அனைவருக்கும் மிகப் பொருத்தமான உண்மையாகும்.
அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாத்து அவனது திருப்பொருத்தத்தை அடைந்த கூட்டத்தில் சேர்ப்பானாக!









