குறிப்பாக பாலஸ்தீன மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகுவதும் பொதுவாக உலக அளவில் இஸ்லாத்திற்கெதிரான கெடுபிடிகளும் உண்மை விசுவாசிகளது மனங்களில் ஆழமான கவலைகளை தோற்றுவித்துள்ளன.
துன்பம் நீடிக்காது
ஆனால் துன்பமோ தொல்லைகளோ அடாவடித்தனங்களோ நீடிப்பதில்லை. கஷ்டத்தின் பின்னர் விடிவு கவலையின் பின்னர் சந்தோஷம் இது தான் அல்லாஹ்வின் நியதி.
ان مع العسر يسرا
“நிச்சயமாக கடினத்தின் பின்னர் இலகு இருக்கும்” என்பது அல்லாஹ் கூறும் அந்த நியதியாகும்.
முயற்சி முக்கியம்
அசத்தியத்தின் நர்த்தனத்தை கண்டு துவண்டு விடலாகாது. பொறுமையுடன் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து பலமாக முயற்சி செய்வதே எமது பொறுப்பாகும்.”எமக்காக தீவிர முயற்சி செய்தவர்களுக்கு நாம் எமது பாதைகளை கட்டாயமாக காட்டுவோம்” என அல்லாஹ் கூறியதில் இருந்து வெற்றிக்கு முயற்சியின் அவசியத்தை அல்லாஹ் வலியுறுத்தினான்.
தண்டணை உடனடியாக வராது
இது இப்படியிருக்க இஸ்லாத்தின் எதிரிகளான “அவர்களை நாம் படிப்படியாகப் பிடிப்போம்” என்று தான் கூறினானே தவிர ‘எடுத்த எடுப்பில் களை பிடுங்குவோம்’ என்று கூறவில்லை. மக்கா காலப்பிரிவில் நபியவர்களும் ஸஹாபாக்களும் சந்திக்காத தொல்லைகளா? நபி இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்படவில்லையா? பதைக்கப்பதைக்க கொல்லப்பட்ட ஹம்ஸா க்கள், யாஸிர்கள் ,சுமையாக்கள் வரலாற்றில் எத்தனையோ பேர்? எல்லா சோதனைகளுக்குள்ளாலும் இஸ்லாம் என்ற மகா வீரன் தலைதூக்கி மேற்கே பிரான்ஸின் எல்லை கிழக்கே ஆபிரிக்க கடற்கரை கிழக்கே சீனாவின் எல்லை வரை இஸ்லாமிய ராஜ்யம் வியாபித்து உலக நாகரீகம் ஒன்று கட்டியெழுப்பப்படவில்லையா?
இரத்தம், கண்ணீர், வியர்வை, பேனா மை ஆகிய நான்கு திரவங்கள் நீராகவும் பசளையாகவும் இடப்பட்டதனால் தான் இந்த மாபெரும் விருட்சம் முழு உலகுக்கும் நிழல் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்தது. சகல சமூகங்களதும் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலைக்கு வந்தது. தியாகம், அர்ப்பணிப்பு,முயற்சி என்பன பிரயோகிக்கப்படும் அளவுக்கு அந்த விருட்சம் பாரியதாகவும் ஆழமான வேர்களைக் கொண்டதாகவும் அமையும். அவை குறையும் அளவுக்கு விருட்சமும் சிறியதாகவும் பலவீனமாகவும் இருக்கும். ஒரு காலத்து இழப்புக்கள் பிற்காலத்தில் சாதனைகளாக மிளிரும்.
உலக அடிப்படையில் பார்த்தால் பாலஸ்தீன மக்களது இழப்புக்கள் தோல்வியாக தென்படலாம். அல்லாஹ்வின் பார்வையில் அது வெற்றிக்கான அடிப்படைகளும் முகவுரைகளுமாகும்.
இன்று பாலஸ்தீன மக்கள் தமது உயர்ந்த தியாகங்களால் உலக அபிப்பிராயத்தை வென்றுவிட்டார்கள்.இஸ்லாம் என்றால் அது மலைகளுக்கு நிகரான இப்படியான நெஞ்சுரம் கொண்டவர்களை உருவாக்கியுள்ளதா என கூறி நாஸ்திகர்களே மலைத்துப் போய் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிக்கிறார்கள்.
பாலஸ்தீன விவகாரம் முழு உலகிலும் ஒரு பாரிய அதிர்வை தோற்றுவித்துள்ளது. சடவாதம்,நாஸ்திகம் என்ற போலி வேஷங்களது தோல்கள் உரிக்கப்பட்டு உண்மை, யதார்த்தம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். அவனது மார்க்கம் பலவீனமடையும் ஆனால் இறந்து போகாது.
அண்மைக் காலத்தில் உலகில் பல நிகழ்வுகள் நம்பிக்கை கீற்றுக்களை தோற்றுவிக்கின்றன.
- ஆரம்பத்தில் இரண்டு வல்லரசுகளது அதிகாரப் பசிக்கு பலியாகி மில்லியன் கணக்கான உயிர்களை இழந்த ஆப்கானிஸ்தானில் ஒப்பீட்டளவில் தற்போது ஓரளவு ஸ்திரமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் தமது கடும் போக்கை சற்று தளர்த்தினால் நல்லது.அவர்களுடன் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஓரளவு தொடர்பு இருப்பதால் நிலைமைகள் நடுநிலைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
- பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் மனதுக்கு ஓரளவு நிம்மதி தருகிறது.கடந்த காலத்து அடக்கு முறையுடன் ஒப்பிடும் போது மக்கள் நிம்மதியாக ஜனநாயக வழிநோக்கி பயணித்திருப்பதாக காணமுடிகிறது.
- சிரியாவின் அண்மைக் கால ஆட்சி மாற்றம் நடுநிலை இஸ்லாமிய வாதிகளால் வரவேற்கப்படுகிறது. மாற்றத்தின் பின்னணியில் மேற்குலக சக்திகள் இருப்பதாகவும் ஆட்சியைக் கைப்பற்றிய குழுவினர் கடந்த காலங்களில் தீவிரவாதிகளாக இருந்ததனால் ஆட்சி கடும் போக்காக அமையும் என்றும் சில சந்தேகங்களும் உள்ளன. எது எப்படிப் போனாலும் கடந்த காலத்தில் தகப்பனும் மகனும் நடாத்திய காட்டு தர்பாரில் இருந்து நாட்டை தற்போதைய ஆட்சியாளர்கள் விடுவித்திருப்பதை சிரிய மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு கொண்டாடுகிறார்கள்.யாரோ கூறியது போல் புதிய ஆட்சி எப்படியாக இருந்தாலும் பரவாயில்லை. வதைச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்தது மாத்திரம் போதும்.வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த இலட்சக் கணக்கான மக்கள் பெரும் ஆரவாரத்தோடு நாடு திரும்பும் காட்சி பல கவலைகளோடு இருக்கும் உலக முஸ்லிம்களது உள்ளங்களில் நிச்சயமாக சந்தோஷத்தை தருகிறது.கடந்த காலத்தில் இஸ்லாத்திற்கு முழுக்க விரோதமான போக்கில் இருந்த ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டு இஸ்லாத்தை கொள்கையாகக் கொண்டவர்கள் வந்திருப்பது நல்லது.ஆனால் கடும் போக்குகள் தவிர்க்கப்பட்டு மிதவாதமாக யாவரையும் அணைத்துக் கொண்டு ஆட்சி நடந்தால் மிகவுமே நல்லது.
அமெரிக்கத் தீ
இது இப்படியிருக்க அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் புரியும் அட்டுழியங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கான அல்லாஹ்வின் தண்டனை என்று பலர் நம்புகிறார்கள். அதற்காக பலமாக சந்தோஷப்படுவோரும் உள்ளனர்.அது தண்டனை தான் என் திட்டவட்டமாகக் கூறக் கூடாது என்று சிலர் கூறுவர். இயற்கை அனர்த்தங்கள் தண்டனையாகவும் இருக்கலாம் சோதனையாகவும் இருக்கலாம் என்றும் தண்டனை தான் என்று கூறுவதாயின் துருக்கி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு என்ன காரணம் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் முஸ்லிம்களும் இஸ்லாமிய நிறுவனங்களும் இருப்பதனை மறக்க முடியாது என்றும் கூறுவர்.
எனவே இந்த விடயத்தை நிதானமாகத் தான் பார்க்க வேண்டும் என யார் தான் கூறினாலும் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரவேலை கைப்பாவையாக வைத்து அமெரிக்கா புரிந்து வரும் அட்டூழியங்களுக்கான தண்டனையாக இருக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.
இஸ்லாமிய உலகின் பிரபல கதீபாக இருக்கும் அஷ்ஷைக் மஹ்மூத் ஹஸனாத் அவர்கள் அநியாயத்துக்குட்பட்ட மக்களது பிரார்த்தனைகளை அல்லாஹ் காலம் தாமதமாகியேனும் அங்கீகரித்து அநியாயக்காரர்களை தண்டிப்பான் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
அல்லாஹ்வின் படைகள் நெருப்பாக, தண்ணீராக, காற்றாக அல்லது மற்றொன்றாக இருக்கலாம். அவன் கிருபை உள்ளவன் மட்டுமல்ல அநியாயக்காரர்களை கடுமையாக தண்டிப்பவனும் கூட.
அல்லாஹ்வின் மீதான ஆழமான நம்பிக்கை, உளத்தூய்மை, இஸ்லாம் பற்றிய தெளிந்த பரந்துபட்ட அறிவு,சதிகள் பற்றிய விழிப்புணர்வு விடாமுற்சி, தியாகம் என்பன அல்லாஹ்வின் மார்க்கத்தின் வெற்றிக்கான சில நிபந்தனைகளாகும்.
வல்லவன் அல்லாஹ் நீதி, நியாயம்,மனித வாழ்வின் சுபிட்சம் என்பன உலகில் நிலவுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றியை கொடுப்பானாக.
அநியாயக்காரர்கள் பிடிவாதக்காரர்களாக, திருந்தும் நோக்கமற்றவர்களாக இருந்தால் அவர்களைத் தண்டிப்பானாக!
அல்லாஹ் எம் அனைவரையும் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்பானாக!




