ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்திருக்கும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களும் கருத்துக்களும் கட்டாயமாக விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களும் பகிரப்பட வேண்டும்.

எப்போதும் இல்லை இல்லை என்று சொல்லுகின்ற எதிர்மறையான மனப்பாங்கு தவிர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ஆதாரப்பூர்வமாக கூறப்பட்டு மக்களுடைய மனங்களில் இபாதத்துக்களின் பால் ஆர்வமூட்டப்பட வேண்டும்.

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. நபியவர்கள் இதில் அதிகம் நோன்பு நோற்றிருக்கிறார்கள். தான் நோன்பு நோற்ற நிலையில் தனது அமல்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள்.

எனவே நோன்பு நோற்பது, திலாவத்துல் குர்ஆன், ஸதகா போன்ற நற்கருமங்களுக்கான உந்துதல்கள், ஆர்வமூட்டல்கள் அதிகமாக இடம்பெற வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.அமல்கள் மங்கிப் போய் பாவங்கள் மலிந்து போயுள்ள இக்காலகட்டத்தில் ஆர்வமூட்டும் ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

நபி ஸல் அவர்கள் ஷஃபானில் செய்த விஷேட அமல்கள் எவை?

ஆயிஷா(ரலி) கூறினார்கள்:-

‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’

(ஸஹீஹ் புகாரி:1969 அத்தியாயம் : 30. நோன்பு)

மேலும் ஆயிஷா(ரலி) கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஃபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

(ஸஹீஹ் புகாரி:1970 அத்தியாயம் : 30. நோன்பு)

உஸாமா பின் ஸைத் (ரலி) கூறினார்கள்:- நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள்,

“அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.

இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள்.

وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ‏”‏ ‏.‏

இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்” எனக் கூறினார்கள்.

நூல் : நஸாஈ 2357, முஸ்னத் அஹ்மத் (5/201).

ஷஃபானுடைய காலத்தில் நோன்பும் இதர நல்லமல்களும் வலியுறுத்தப்பட்டமைக்கான காரணத்தைக் கூறவந்த இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலீ (ரஹ்)

وقال الإمام ابن رجب الحنبلى رحمه الله:

“قيل في صوم شعبان أن صيامه كالتمرين على صيام رمضان لئلا يدخل في صوم رمضان على مشقة وكلفة، بل يكون قد تمرن على الصيام واعتاده ووجد بصيام شعبان قبله حلاوة الصيام ولذته فيدخل في صيام رمضان بقوة ونشاط

அது ரமழான் நோன்புக்கான பயிற்சியாகும்.ஒருவர் ரமழானுக்குள் சிரமத்துடன் நுழையாமல் முன்கூட்டியே தன்னை தயார்படுத்த அது உதவும். ஷஃபானில் நோன்பு நோற்று பெற்றுக்கொண்ட சுவையுடன் ரமழானில் உற்சாகத்துடன் அவரால் பிரவேசிக்க முடியும்.

எனவே, ஷாபான் மாதத்தை நல் அமல்களில் அதிகம் கழித்து, அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டத்தில் அல்லாஹ் எம் அனைவரையும் சேர்ப்பானாக!

யா அல்லாஹ் ரமழானின் நல் அமல்களை செய்யும் பாக்கியத்தையும் தருவாயாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top