புனித ரமலான் காலத்தில் உலமாக்களது நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல்

அஷ்ஷைக் பளீல்

எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் புனித ரமலான் மாதம் அமல்கள் செய்வதற்கு மட்டுமன்றி இஸ்லாத்தை கற்றுக் கொள்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமான வளமான அருமையான சிறப்பான காலமாகும்.

மக்கள் உபன்னியாசங்களையும் வழிகாட்டல்களையும் மிகவும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் இது.

எனவே, காலத்தை பயனுள்ளதாக அவர்கள் கடத்துவதற்கு உலமாக்களும் மற்றோரும் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். குறிப்பாக உலமாக்கள் தமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் உச்ச அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பின்வரும் சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்படும் உபன்னியாசங்களை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி முழுமைப்படுத்தி அமைத்துக்கொண்டால் பயனுள்ளதாக அமையும்:-

1.குத்பாக்கள்

  1. லுஹர் பயான்கள்
  2. தராவீஹ் இற்குப் பின்னரான பயான்கள்
  3. இப்தார் நிகழ்ச்சிகளின் பொழுது நிகழ்த்தப்படும் பயான்கள்
  4. யூடியூப், ஸும்,வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் மூலமாக நிகழ்த்தப்படும் பயான்களும் கலந்துரையாடல்களும்

இவற்றின் ஊடாக

அ. அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையிலான உறவை ஆழமாக பலப்படுத்துவது

ஆ. நற்காரியங்களில் ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பது

இ. பாவ காரியங்களை வெறுத்தொதுக்கி, அவற்றிலிருந்து பூரணமாக தூரமாகி வாழ்வதற்கான மனப்பான்மையை வளர்ப்பது (தர்கீப்,தர்ஹீப்)

ஈ. சமூக உறவுகளின் பொழுது இஸ்லாம் கூறிய நல்லொழுக்கங்களையும் நெறிமுறைகளையும் சிறப்பாக கடைப்பிடிக்க வழிகாட்டுவது

உ. வீட்டு சூழலில் குடும்ப வாழ்வை அல்லாஹ்வும் ரசூலும் பொருந்திக் கொள்ளும் விதத்தில் நவீனகால சவால்களை எதிர்கொள்ளும் முறையில் அமைத்துக் கொள்வதற்கான ஊக்குவிப்பு

ஊ. சிறுபான்மை நாட்டில் வாழ்கிறோம் என்பதனால் ஏனைய சமூகங்களுடனான உறவை பலப்படுத்துவதற்கும் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புவதுவதற்கும் வழிகாட்டுவது

எ. தேச நிர்மாணப் பணியில் முஸ்லிம்கள் வகிக்க வேண்டிய பங்கை பொருத்தமான தலைப்புக்களில் வலியுறுத்துவது

இந்தவகையில் பின்வரும் தலைப்புக்கள் உலமாக்களால் தெரிவு செய்யப்படலாம்:-

  1. அல்லாஹ் இருக்கிறான்;அவன் எல்லையற்ற சக்திமிக்கவன்; அறிவாளி என்பதை காட்டும் அத்தாட்சிகளை குர்ஆனிலிருந்தும் இயற்கையிலிருந்தும் எடுத்துக்காட்டுவது.
  2. மறுமை நாளில் நல்லடியார்களுக்கு கிடைக்கவுள்ள கூலிகள், பாவிகளுக்கான தண்டனைகள் பற்றிய ஆதார பூர்வமான கருத்துக்களை முன்வைப்பது.
  3. இஸ்லாத்தின் அடிப்படையான ஒழுக்கங்களான பொறுமை, அன்பு, ஈகை, சுத்தம், ஐக்கியம், மன்னிக்கும் மனப்பாங்கு, வாய்மை போன்றவற்றை வலியுறுத்துவது
  4. உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட மிகப்பெரும் பாகங்களான (அம்ராளுல் குலூப்) பெருமை, பொறாமை, கஞ்சத்தனம், நயவஞ்சகம், துவேஷம் போன்றவற்றின் ஆபத்துக்களை விளக்குவதோடு இவற்றுக்கு மாறான அடக்கம், பெருந்தன்மை, தயாளத்தன்மை போன்றவற்றை வலியுறுத்துவது.
  5. நாவின் விபரீதங்களான பொய், புறம், கோள்,அபாண்டம், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றின் விபரீதங்களை எடுத்துக் கூறுவது
  6. அல்லாஹ்வை நெருங்க வைக்கும் காரியங்களான திருக்குர்ஆன் ஓதல், மனனமிடல், அவ்ராத்கள்,சந்தர்ப்ப துஆக்கள், சதாவும் அவன் பற்றி அச்சத்தோடும் பயத்தோடும் வாழ்வது போன்றவற்றை வலியுறுத்துவது
  7. உலகில் கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு கல்வி கற்றல், சொந்தக்காலில் நிற்றல், தொழில் செய்தல், ஏனைய சமூகங்களுடனான உறவுகளை பலப்படுத்தல் போன்றவற்றில் கூடிய அக்கறை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தல்.
  8. பாவமன்னிப்பு பற்றி விளக்கும்போது பாவங்களின் விபரீதங்கள், வகைகள், பாவமன்னிப்பு கேட்கும் விதம், குறிப்பாக அடியார்கள் சக அடியார்களுக்கு இழைக்கும் அநியாயங்களுக்கு பாவமன்னிப்பு கேட்கும் விதம் போன்றவற்றை அழுத்தமாக முன்வைக்க வேண்டும்.
  9. இளைஞர்களை வழிநடாத்துவது பற்றிய விழிப்புணர்வை பெற்றோருக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் வழங்குவதோடு தற்காலத்தில் இளைஞர்கள் வாழ வேண்டிய முறைகளையும் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய அம்சங்களையும் சுட்டிக் காட்டுவது.
  10. இன்னும் பல தலைப்புக்கள்…

மாறாக அவை,

அ. சமூகத்தை பிளவுபடுத்துபவையாக,

ஆ. அதைரியப்படுத்துவையாக

இ. நேரத்தைவீணடிப்பவையாக

ஈ. ஆதாரமற்ற கதைகளைக் கொண்டவையாக

உ. அரைத்த மாவை அரைப்பவையாக

ஊ. உப்புச் சப்பற்றவையாக

எ. இருக்கும் சிக்கல்களை இன்னும் அதிகரிப்பவையாக இல்லாமல்,

அவை,

ஈமானை, பண்பாடுகளை வளர்ப்பவையாக, அமல்களைத் தூண்டுபவையாக,

ஆக்கபூர்வமானவகையாக,

அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவையாக,

நன்கு திட்டமிடப்பட்டவையாக

அமைய வேண்டும்.

இவ்வாறு நாம் கூறுவதற்கான காரணம் அல்குர்ஆனுடைய வாழ்வு முறையை ரமலானுடைய காலத்தில் எமது வாழ்வு முறையாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அல்குர்ஆனில் அல்லாஹ்,

رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ) البقرة/ 185،

“ரமழான் மாதத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது. அது மக்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியை தெளிவாக்கக் கூடியதாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கிறது” என்று கூறுகிறான்.

அப்படியாயின் அந்த அல்குர்ஆனில் அல்லாஹ் உள்ளடக்கியுள்ள வழிகாட்டல்களை ரமழான் காலத்தில் படிப்பதும், போதிப்பதும், பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வதும், அதன் போதனைகளை பரப்புவதும் எல்லா வகையிலும் பொருத்தமும் கடமையுமாகும்.

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَجْوَدِ النَّاسِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ، حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ يُدَارِسُهُ الْقُرْآنَ، فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، أَجْوَدَ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ” رواه أحمد

என்று ஹதீஸில் வருகிறது. அதாவது,

நபி(ஸல்) அவர்களை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானின் ஒவ்வோர் இரவிலும் சந்தித்து அல்குர்ஆனை கற்பித்தார்கள். அதனை இருவரும் பரஸ்பரம் படித்துக்கொண்டார்கள். ரமழான் காலத்தில் நபியவர்கள் மிக அதிகமாக கொடைகொடுப்பவர்களாக இருந்தார்கள் என அந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள். அதாவது ஜிப்ரயீல் (அலை) அவர்களது சகவாசமும் அல்குர்ஆனை படித்ததனால் ஏற்பட்ட தூண்டுதலும் தான் மிக அதிகமாக தர்மம் கொடுப்பதற்கு நபிகளாரைத் தூண்டியிருக்கிறது.

எனவே, குர்ஆனை பொருள் விளங்கி படிப்பதனால் அது செயல் வடிவம் பெறும் என்பதை நாம் இங்கு புரிகிறோம்.

நபியவர்களது காலத்தில் நபியவர்களும் ஸஹாபாக்களும் ரமழான் காலத்தில் அல்குர்ஆனை அதிகமதிகம் தனிப்பட்ட முறையிலும் தொழுகையிலும் ஓதினார்கள். அதன்பொழுது அவர்கள் குர்ஆனின் கருத்துக்களை, போதனைகளை மிகத் தெளிவாக கிரகித்தார்கள்.அவர்களது மொழியாக அரபு இருந்தது.

எனவே, தற்காலத்தைப் போன்று அவர்களுக்கு நீண்ட பயான்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஆனால், எமது காலத்தில் இருக்கின்ற பெரும்பாலான முஸ்லிம்களுக்கு அரபு மொழி தெரியாமல் இருப்பதனால் அந்தக் குறையை ஈடுசெய்யும் வகையில் மேலதிகமான பயான்களும் விளக்கவுரைகளும் தேவைப்படுகின்றன. எனவே, அல்குர்ஆனின் போதனைகளையும் நபியவர்களது கட்டளைகளையும் நாம் அறிந்து அவறின் நிழலில் வாழுவதற்கு நவீன காலத்து உத்திகளையும் ஊடகங்களையும் நாம் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.

வல்லவன் அல்லாஹ் புனித ரமழான் காலத்தை உரிய விதத்தில் பயன்படுத்திய கூட்டத்தாரில் எம்மையும் சேர்ப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top