“இல்லத்தில் இறைசிந்தனை” நிகழ்ச்சித் திட்டம்

அஷ்ஷெய்க் பளீல்

இது மார்க்கத்தின் போதனைகளை இல்லங்களில் இருந்தவாறே குடும்பஸ்தர்கள் மிகவும் எளிமையாக தினமும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும்.

குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் மார்க்கத்தோடு தொடர்பான விவகாரங்களை தமக்கு மத்தியில் பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கான ஒழுங்கு தான் இது. மஃரிப் தொழுகைக்குப் பின்னரான நேரம் இதற்கு மிகப் பொருத்தமானதாகும்.

தினமும் ஒரு சிந்தனை, தினமும் ஒரு கருத்து என்ற வகையில் குர்ஆனின் ஒரு வசனம் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது ஒரு தலைப்போடு தொடர்பான விவகாரம் கலந்துரையாடப்படும்.

இங்கு உலமாக்களால் தயாரிக்கப்பட்ட ஆக்கங்கள் அல்லது வீடியோக்கள் பகிரப்படலாம். அவற்றை வீட்டிலுள்ள தாய் அல்லது தகப்பன் நன்கு செவிமடுத்து கிரகித்துவிட்டு பின்னர் அதனை வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வீடுகளில் இப்படியான ஒரு அமலில் ஈடுபடலாம் என்பதற்கும் அதனால் இம்மை மறுமைப் பாக்கியங்கள்- பயன்கள் கிடைக்கும் என்பதற்கும் குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அல்லாஹ் குர்ஆனில், யாரெல்லாம் ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்களில் ஈடுபடுவதுடன் சத்தியத்தை பரஸ்பரம் உபதேசித்து பொறுமை பற்றியும் பரஸ்பரம் உபதேசித்துக் கொள்கிறார்களோ அவர்களைத் தவிர ஏனையோர் வாழ்க்கையில் தோல்வி கண்டவர்கள் என்ற கருத்தை சூரத்துல் அஸ்ரில் கூறுகிறான். அங்கு வந்துள்ள

وتواصوا بالحق وتواصوا بالصبر

என்பது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சத்தியத்தைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உபதேசிப்பதாகும். அதாவது ஒருவர் தான் சரியானது என்று கருதுவதை பிறருக்கு கற்பிப்பதையும் பிறரிடமிருந்து நல்ல அம்சங்களை கற்பதையும், செவிமடுப்பதையும் இது குறிக்கும்.

அல்லாஹ் மற்றோரிடத்தில்:-

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوْاْ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْاْ بِٱلْمَرْحَمَ

வலப்பாரிசத்தில்(அஸ்ஹாபுல் மைமனா) உள்ளவர்கள் பற்றி கூறுகின்ற போது “அவர்கள் பரஸ்பரம் பொறுமையைக் கொண்டும் இரக்கத்தைச் பற்றியும் உபதேசித்துக் கொள்வார்கள்” என்று சொல்லுகிறான்.

இங்கும் பரஸ்பரம் உபதேசிப்பது என்பதன் மூலம் கற்பிப்பதையும் பிறரிடமிருந்து கற்பதையும் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

முஹம்மத் (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:-

وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ

“உங்களது வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும் ஞானத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்”

நபி(ஸல்) கூறினார்கள்:-

«ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا حفتهم الملائكة وتغشتهم الرحمة وتنزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده» (صحيح مسلم: 2700).

“எந்த ஒரு கூட்டத்தாராவது அல்லாஹ்வின் வீடுகளில் ஒன்றில் ஒன்றுகூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி,அதனை தமக்கு மத்தியில் பரஸ்பரம் படித்துக் கொள்வார்களாயின் அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். (அல்லாஹ்வின்)அருள் அவர்களை அரவணைத்துக் கொள்ளும். (அவனது) சாந்தி அவர்கள் மீது இறங்கும்.தன்னிடத்தில் இருக்கின்றவர்களிடத்தில் (மலக்குகளிடத்தில்) இக்கூட்டத்தை பற்றி அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிப்பான்” (ஸஹீஹ் முஸ்லிம்)

தற்போது கோரோனா காலமாக இருப்பதனால் சகல பிள்ளைகளும் பெற்றோரும் வீட்டிலேயே அதிகமான நேரத்தை கழிக்கிறார்கள். தொலைக்காட்சிக்கு சீரியல்களுக்கு அடிமையாகி திரைப்படங்களை பார்த்துக்கொண்டு கையடக்க தொலைபேசிகளுக்குள் சங்கமமாகி இருப்போர் மிக அதிகம்.பெரும்பாலும் தூக்கத்திலும் அனாவசியமான கதையாடல்களிலும் சிலபோது பாவமான காரியங்களிலும் காலம் கடத்தப்படுகிறது. பாடசாலைகள், மக்தபுகள், மத்ரஸாக்கள், அஹதிய்யாக்கள் என்பன செயலிழந்து போயுள்ளன.

இஸ்லாமிய அமைப்புக்களாலும் தன்னார்வ நிறுவனங்களாலும் கடந்த காலங்களில் நடாத்தப்பட்டு வந்த இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வுகளும் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு இருக்கின்ற பொழுது சமூகம் இஸ்லாமிய தொடர்புகள் இல்லாமல் வாழுவது மிகப் பெரிய துரதிஷ்டமாகும்.

எனவே இதுபோன்ற ஒரு முயற்சி காலத்தின் உடனடி தேவையாகும்.

#உதாரணத்திற்கு சிலதலைப்புக்கள்

அல்லாஹ்வின் வல்லமை,

அவனது எம்மீது சொரிந்துள்ள அருள்கள்,

அவனது அறிவின் விசாலம்

நபிகளார் (ஸல்) செய்த தியாகங்கள்,

வயதில் கூடியவர்களுக்கான அவர்களது முன்மாதிரி

பெற்றாருக்கான பிள்ளைகளது கடமைகள்

தவ்பா, இஸ்திக்பார்

மிருகங்களின் உரிமைகள்

சூழல் பாதுகாப்பு

ஸதகாவின் முக்கியத்துவம்

அயல் வீட்டார் உரிமைகள்

திக்ரின் முக்கியத்துவம்

தொழுகையில் உள்ளச்சம்

தஹஜ்ஜுத் தொழுகையின் முக்கியத்துவம்

ஷைத்தானின் ஊசலாட்டங்களும் பாதுகாப்பும்

முக்கிய சூறாக்களுடைய விளக்கங்கள்.

குர்ஆனிய நற்சிந்தனைகள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ [التحريم:6]

“ஈமான் கொண்டவர்களே உங்களையும் உங்களது குடும்பத்தவர்களையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகள்”(சூரா அத்தஹ்ரீம்-6)

#இல்லத்தில் இறை சிந்தனை நிகழ்ச்சி நிரல்

  1. ஜமாஅத்தாக மஃரிப் தொழுகை
  2. மஃரிபுக்கு பின்னரான சுன்னத்தை ஒவ்வொருவரும் தனித்தனியாக நிறைவேற்றல்
  3. எல்லோரும் கூட்டாக ஓர் இடத்தில் அமருதல்(மஃரிப் தொழுத இடமாகவோ அல்லது கதிரைகளின் மீது இருந்த வண்ணமோ அமையலாம்)
  4. மாலையில் ஓதப்பட வேண்டிய அவ்ராதுகளை தனித்தனியாக ஓதுவது
  5. அல்குர்ஆனில் இருந்து ஒவ்வொருவரும் தலா அரைப்பக்கத்தை ஒருவர் ஓத ஏனையோர் செவிமடுத்து தஜ்வீத் சட்டங்களை தெரிந்தவர்கள் திருத்திக் கொடுப்பது.
  6. ஒருவர் ஒரு தலைப்பின் கீழ் ஒரு விடயத்தை முன்வைப்பது. அது பின்வரும் ஒன்றாக அமையலாம்;-

அல்குர்ஆனில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வசனங்களை ஓதி அதனை மொழிபெயர்ப்பது.

நபி(ஸல்) அவர்களது ஹதீஸ் ஒன்றை மொழிபெயர்ப்பது

வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை சுருக்கமாக முன்வைத்து அதன் படிப்பினைகளை எடுத்துக் கூறுவது.

இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரது கருத்தொன்றை விளக்குவது.

இதற்காக முன்கூட்டியே வீடிலுள்ள ஒருவரை தயாராக இருக்கும் படி குடும்பத் தலைவர் கட்டளையிட வேண்டும்.

தலைப்புகளை தெரிவு செய்யும் போதும் கருத்துகளை பகிரும்போதும் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:-

+ சர்சைகளைத்தோற்றுவிக்காதவை

+ ஈமானையும் பண்பாடுகளையும் வளர்க்கும் வகையிலானவை

+ எளிமையான பொருள்களைத் தருபவை

+ மஜ்லிஸில் இருக்கும் அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தவை

#இதன் பலாபலன்கள்

# நேரம் அல்லாஹ்வுக்கு விருப்பமான விதத்தில் பயனுள்ள வகையில் கழிக்கப் படுதல்

# வீட்டில் இஸ்லாமிய சூழல் உருவாக்குதல்

# தலைமைக்கு கட்டுப்படுதல்

# பாவமான செயல்களில் ஈடுபடுவோர் தயங்குதல்

# குர்ஆனுடன் ஹதீஸுடன் நல்லடியார்களது சம்பவங்களுடன் தொடர்பு ஏற்பட்டு வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்தல்

# மலக்குகளது துஆவும் மன நிறைவும் கிட்டுதல்

வல்லவன் அல்லாஹ் எமது வீட்டு சூழலை இஸ்லாமிய மணம் கமழும் சூழலாக அமைத்துக் கொள்ள அருள்பாலிப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top