Lockdown காலத்தில் சிறார்களுக்கான Media திட்டம்

அஷ்ஷைக் பளீல்

கொரோனா பரவுகிறது என்ற பயத்தின் பின்னர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவ மாணவியர்கள் வீடுகளுக்குள் அடங்கியிருக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் தமது நேரங்களை பயனுள்ள விதத்தில் கடத்துவதற்கான வழிவகைகள் பற்றி பெற்றோர் தீவிரமாக சிந்தித்து வருகிறார்கள்.

தனிமைப்படுத்தலின் போது வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற கேளிக்கைகள், திரைப்படம் பார்ப்பது, நீண்ட நேர தூக்கம், வீட்டு சூழலில் பிறருக்கு தொந்தரவாக அமைவது போன்றன இடம்பெறாதிருக்க அவர்களுக்கு சிறந்த பதிலீடுகளைக் காட்டிக் கொடுப்பது பெற்றாரதும் சமூகத்தவரும்  பொறுப்பாகும்.

பின்வருவனவற்றை அவர்கள் முறையாகச் செய்வதை வீட்டிலுள்ள பெற்றாரும் வயதுக்கு மூத்தவர்களும் பார்த்துக்கொள்வது அவசியம்:-

1.அவர்கள் ஐவேளை தொழுகைகளை உரிய நேரங்களில் ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டும்.

  1. குர்ஆன், சந்தர்ப்ப துஆக்கள், திக்ர் என்பவற்றில் முறையாக ஈடுபட வேண்டும்.
  2. பயனுள்ள விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும்.
  3. நல்ல ஓய்வும் தூக்கமும் அவசியம்
  4. வீட்டில் பெற்றாருக்கு அவர்கள் உதவிசெய்ய வேண்டும்.
  5. வீட்டில் இருப்பவர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும்.
  6. தமது காரியங்களை தாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
  7. பயன்மிக்க நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வாசிப்பது அவசியம்.

ஆனால் இவை போகவுள்ள நேரங்களை எப்படி அவர்கள் கடத்துவார்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

அண்மைக் காலத்தில் அவர்கள் இலத்திரனியல் உபகரணங்களை கையாளுவதற்கு அதிகம் பழக்கப்பட்டு விட்டார்கள்.அவை உள்ளடக்கியுள்ள விடயங்களும் மிகவும் கவர்ச்சியானவையும் கூட.

வீடியோக்கள், ஓடியோக்கள், விளையாட்டுக்கள் என்பன சிறார்களுக்கு மிகவும் கவர்ச்சியானவை. அவற்றில் ஈடுபடுகின்ற பொழுது அவர்களது நேரம் எப்படி கழிகிறது என்பதனை கூட உணரமுடியாத அளவுக்கு அவற்றோடு அவர்கள் கட்டுண்டு போவார்கள். இந்த யதார்த்தத்தை நாம் மறந்துவிட முடியாது.

எனவே கையடக்கத் தொலைபேசிகளிலும் டெப்புகளிலும் தனிப்பட்ட கணினிகளிலும் அவர்கள் சென்று பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும் போட்டிகளில் சம்பந்தப்படுவதற்கும் அறிவைக் கற்றுக் கொள்வதற்குமான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் எமது நேரத்தை முகாமைத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பயனற்ற காரியங்களில் சம்பந்தப் படக்கூடாது என்றும் இஸ்லாம் மிக அதிகமாக வலியுறுத்துவதால் எமது பிள்ளைகள் விடயமாகவும் நாம் கூடிய கரிசனை எடுக்க வேண்டும்.

சர்வதேச ரீதியாக இயங்கும் சில நிறுவனங்கள் முஸ்லிம் சிறார்கள் மற்றும்  மாணவர்களுக்கென்று பயனுள்ள இணையதளங்களை ஆரம்பித்திருக்கின்றன.

அந்த வலைத்தளங்களில்:-

¶ சிறார்களுக்கான கஸீதாக்கள்

¶ தஜ்வீது மற்றும் ஹிஃப்ள் வகுப்புகள்

¶ நபிமார்கள் மற்றும் நல்லடியார்களது கால கதைகள்

¶ இபாதத்களை முறையாக நிறைவேற்றுவதற்கான பயிற்சிகள்

¶ துஆக்களை மனனமிடுவதற்கான ஏற்பாடுகள்

¶ இஸ்லாமிய அறிவையும் பண்பாடுகளையும் வளர்ப்பதற்கான போட்டி நிகழ்ச்சிகள்.

போன்ற அம்சங்களைத் தாங்கிய நிகழ்ச்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை எமது சிறார்கள் மற்றும் மாணாக்கர்களுக்கும் நாம் அறிமுகம் செய்ய வேண்டும்.

அவை பற்றிய அறிவுள்ளவர்களது சேவை எமக்குத் தேவை.

மாணவர்கள் அவற்றின் மூலம் பயனடையும் காலமெல்லாம் அறிமுகம் செய்தவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் அதன் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும். மேலும் அவற்றோடு எமது மாணவர்களை சம்பந்தப்படுத்தினால் அவர்களது நேரத்தை பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும் அவர்களால் முடியும். இது பெற்றாருக்கு நாம் செய்யும் பேருதவியாகவும் அமையும்.

இவ்விடயம் தொடர்பான மேலதிகமான கலந்துரையாடல் எமக்கு மத்தியில் அவசியப்படுகிறது. உங்களது அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றன.

வல்லவன் அல்லாஹ் எமது பிள்ளைச் செல்வங்களை எமக்கு கண் குளிர்ச்சியானவர்களாக, முழுமையான இஸ்லாமிய  ஆளுமை கொண்டவர்களாக ஆக்குவாயாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top