இந்த தகவல் கிடைத்தவுடன் மிகுந்த கவலையும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
1980 களிலிருந்து எனக்கு அவரைத் தெரியும். அவரிடம் பல நற்பண்புகள் காணப்பட்டன.
எவரைத் தான் சந்தித்தாலும் புன்முறுவலை உதிர்ப்பதும் உடனடியாக கைகளைப் பற்றி அக்கறையுடன் சலாம் கூறுவதும் சேமம் விசாரிப்பதும் அவரது பணிவினது அடையாளங்களாக இருந்தன.
எளிமையான உள்நாட்டு ஆடையுடன் கூடிய தோற்றத்திலேயே அவர் எப்போதும் இருப்பார். ஆனால் அவரது தோற்றத்தில் அன்றி அவரது இஸ்லாமிய ஆர்வத்திலும் அறிவிலும் பண்பாடுகளிலும் தான் அவரது ஈர்ப்பு இருந்தமையை காண முடிந்தது. இதனால் தான் அவர் மீது ஆழ்ந்த மரியாதையுடன் கூடிய நம்பிக்கை வைத்த அவர் தலைமைத்துவம் கொடுத்த இயக்க உறுப்பினர்கள் அவரை பல்லாண்டுகளாக இயக்கத் தலைவராக ஏற்று பின்பற்றியிருக்கிறார்கள்.
அவர் தன்னை தனது ஆதரவாளர்கள் விரும்பிய நிலையிலும் கூட சமூக நலன் கருதி தலைமைத்துவ ஆசையின்றி தலைமைத்துவத்தை விட்டுக் கொடுத்தார்.
இம்மண்ணில் மட்டுமன்றி கடல் கடந்த தேசங்களிலும் சென்று தனது சக்திக்கு உட்பட்ட வகையில் தஃவாப் பணி புரிந்த ஒரு தாஈக்கு அல்லாஹ்வின் அருளும் மனநிம்மதி யும் கிட்டட்டும்.
எந்தவொரு ஆழமான கருத்தையும் மிக எளிமையான உதாரணங்களோடும் ஆழமான உவமேயங்களோடும் விளக்கும் ஆற்றலை அவருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.
தான் சரியெனக் கருதும் எக்கருத்தையும் எடுத்துரைக்கும்
துணிச்சல் அவருக்கிருந்தது. தஃவாவில் சமயோசிதமும் தூர நோக்கும் அவசியம் என்பதை தனது உரைகள் மற்றும் எழுத்துக்கள் வாயிலாகவும் சதாவும் அவர் வலியுறுத்தி வந்திருக்கிறார்.அவரும் மனிதன் என்ற வகையில் தப்புத் தவறுகள் இடம் பெற்றிருக்கலாம். அதற்காக அவர் மன்னிப்புக்கு அப்பாற்பட்டவர் எனக் கூற முடியாது.
தனது உடன்பிறந்த சகோதரரும் அவர் புத்திரர்களும் கடும்போக்காளர்களாக இருப்பதை அடையாளம் கண்ட போது அவர்களை இயக்கத்தை விட்டும் ஓரம்கட்ட அவர் நடவடிக்கை எடுத்தமை குடும்ப உறவை விட இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருந்த அக்கறைக்கு சான்றாகும்.இந்த இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்கள் சமாதான சகவாழ்வை மேற்கொள்ள இந்த தீவிரவாதம் தடையாக அமையும் என்று அவர் நம்பினார்.இதனால் தான் ஈஸ்டர் தினத்தில் அரங்கேற்றப்பட்ட அடாவடித்தை அவர் கடுமையாகக் கண்டித்தார்.
எமது அறிவுக்கு எட்டிய வரையில்
அவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும் நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமையவில்லை என்பதற்கும் அப்பால் அவர் சமூக நல்லிணக்கத்துக்காகவும் தேச நலனுக்காகவும் உழைத்திருக்கிறார். அத்தகைய ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் பிழையாகப் புரியப்படிருக்கிறார். அல்லது அவர் பிழையாகப் புரியப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்படும் சிலரால் பிழையாக இனம்காட்டப்பட்டிருக்கிறார்.அவர் குற்றவாளியாக இருப்பின் தண்டிக்கப்பட வேண்டும் என சட்டமும் மனசாட்சியுடன் கூறுகின்றன. ஆனால், அவர் நிரபராதியாயின் அவர் பற்றிய அவதூறைக் கூறி அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியவர்கள் இனம்காணப்பட்டு
தண்டிக்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மட்டுமே சரியான நீதி கிடைக்கும்.
احكم الحاكمين
நீதிபதிகளுக்கெல்லாம் பெரிய நீதிபதி அவன்தான்.
சிறை சென்ற பலரை உலகம் கண்டிருக்கிறது. யூசுப்(அலை), இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், நெல்சன் மண்டேலா, காந்தி போன்றோர் நல்ல உதாரணங்கள்.
எனவே சிறை செல்வது ஒன்றும் ஆச்சரியமானதல்ல என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.
அல்லாஹ்வுக்கு மட்டுமே மிகச்சரியாக மனிதர்களை மண்டிட முடியும். எமது பதிவுகள் எமது அறிவின் எல்லைக்குள் இருந்து மட்டுமே வருகின்றன.
அல்லாஹ் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பொறுமையும் உயர்ந்த கூலியையும் கொடுப்பானாக!




