இஃதிகாப்

புனித ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படும் அமல்களில் இஃதிகாபும் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாபின் நிய்யத்துடன் பள்ளிவாயலில் முழுமையாக தங்கியிருந்திருக்கிறார்கள். ரமழானின் கடைசி 10 நாட்களில் இவ்வாறு தங்கியிருப்பதால் லைலதுல் கத்ர் இரவை அடையும் வாய்ப்பைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் நபியவர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் எனக் கருத இடமுண்டு. எனவே, ரமழானை அடையும் ஒவ்வொரு முஸ்லிமும், அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் நபியவர்களைப் பின்பற்றிய நன்மையை அடைந்துகொள்ளவும் நற்கூலிகளை சம்பாதித்துக் கொள்ளவும் இந்த இஃதிகாப் வணக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நபி(ஸல்) அவர்கள் ஏனைய காலங்களை விட ரமழானின் கடைசிப் பத்தில் அதிக சிரமமெடுத்து வணக்கங்களில் ஈடுபட்டார்கள் என ஆயிஷா நாயகி(றழி) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நபியவர்கள் ஒவ்வொரு வருடமும் ரமழானின் கடைசிப் பத்து நாட்களை இஃதிகாபில் கழித்தாலும் அவர்கள் வபாத்தாகிய வருடத்தில் 20 நாட்கள் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருந்த போது அவர்களுடன் அவர்களது மனைவியர் பலரும் ஸஹாபாக்களும் அவர்களோடு இஃதிகாப் இருந்தார்கள். நபியவர்களது வபாத்திற்குப் பிறகும் ஸஹாபாக்களும் நபியவர்களது மனைவியரும் இஃதிகாபை ரமழானில் கடைப்பிடித்தார்கள் என பல ரிவாயத்களில் கூறப்பட்டிருக்கிறது.

வகைகள்

பொதுவாக இஃதிகாபை சுன்னத்தானது, பர்ளானது என இரு வகையாகப் பிரிக்கலாம். பர்ளான ‘இஃதிகாப்| என்றால், ஒருவர் தனது தேவைகளில் ஒன்றை அல்லாஹ் நிறைவு செய்து தந்தால் பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைக்கிறார். இவர் தான் எத்தனை நாள் எங்கு இருப்பேன் என நேர்ந்தாரோ அப்படியே அந்த இஃதிகாபை நிறைவேற்ற வேண்டும். இது கட்டாயமான இஃதிகாபாகும். ஆனால், ரமழான் காலத்தில் ஒருவர் நன்மையை எதிர்பார்த்து பள்ளிவாசலில் நிய்யத்துடன் தங்கியிருப்பது சுன்னத் முஅக்கதாவாகும். அதாவது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். சிலவேளை ஒருவர் ஒரு குறுகிய நேரம் பள்ளியில் தங்கியிருப்பதாயினும் அதுவும் எண்ணத்தைப் பொறுத்து இஃதிகாப் ஆகவே கணிக்கப்படும். அதற்கு நன்மை கிடைக்கும். ஏதாவது தேவைக்காக அங்கிருந்து வெளியேறினால் மீண்டு வந்து சேர்ந்ததும் நிய்யத்தை அவர் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதாவது, நன்மையை எதிர்பார்த்து ஒருவர் பள்ளியில் உட்கார்ந்திருந்தாலும் அதற்கும் நன்மை கிடைக்கும். அதுவும் இஃதிகாபாகவே கணிக்கப்படும். நிய்யத் இல்லாமல் எவ்வளவு காலம் தங்கியிருந்தாலும் அது இஃதிகாப் ஆகமாட்டாது. இங்கு நிய்யத் என்பது வாயால் மொழியப்படுவதல்ல. ‘இப்பள்ளிவாசலில் தங்கியிருக்கும் வரை அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து தங்கியிருக்கிறேன்’ என மனத்தால் எண்ணிக் கொண்டால் போதுமானதாகும்.

சுன்னத்தான இஃதிகாப் இருக்கையில் ஏற்கனவே இருக்கத் தீர்மானித்த கால அளவுக்கு முன்னரே அதனை முடித்துக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை.

நிபந்தனைகள்

இஃதிகாப் இருப்பவருக்கு பின்வரும் நிபந்தனைகள் முக்கிய மானவை. ஒருவர் காபிராக, சிறுபிள்ளையாக, பெருந்துடக்குள்ளவராக இஃதிகாப் இருக்க முடியாது. பெண்கள் இருப்பதாயின் ஹய்ள், நிபாஸ் ஆகிய உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் இஃதிகாப் முறிந்துவிடும். இஃதிகாபிற்காக நிய்யத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஓய்வெடுக்க வேண்டுமென்ற நோக்கிலோ பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ தங்கியிருப்பது இஃதிகாப் ஆகமாட்டாது.

அடுத்து இஃதிகாப் பள்ளிவாசலில் தான் இருக்க வேண்டும் என பல உலமாக்கள் கூறியிருக்கிறார்கள். ‘நீங்கள் பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருக்கையில் பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்ற இறை வசனத்தில் இஃதிகாப் பள்ளிவாயலில் ஈடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டிருப்பதால் பள்ளிவாயல் தான் இதற்கு பொருத்தமானது என அவர்கள் கூறுகிறார்கள். அத்துடன் ஜும்ஆப் பள்ளியில் இருப்பது சிறப்பு அதிகம் என இமாம் ஷாபிஈ, தெரிவித்திருந்தாலும் ஐவேளை தொழுகை நடக்கும் பள்ளிவாயல்களிலும் இருக்க முடியும் என வேறு சில இமாம்கள் கூறியிருக்கிறார்கள்.

ரமழான் கடைசிப் பத்தில் இஃதிகாப் ஈருக்க விரும்பும் ஒருவர் 10ம் இரவுக்காக சூரியன் மறையு முன்னர் அதனை ஆரம்பிக்க வேண்டும். மாதத்தின் கடைசி நாளைக்காக சூரியன் மறைந்த பின்னர் அதாவது ஷவ்வால் பிறை காணப்பட்;ட பின்னர் இஃதிகாபிலிருந்து வெளிவர முடியும்.

அமல்களில் ஈடுபடுவது

இஃதிகாப் இருப்பவர் வெறுமனே தங்கியிருக்காமல் முழு வருடத்திலும் கிடைக்காத அரிய சந்தர்ப்பமான அதனை நன்கு பயன்படுத்தி பின்வரும் காரியங்களில் முடியுமானவரை ஈடுபட்டு அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மென்மேலும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

1.குர்ஆன் திலாவத்

2.பர்ளான தொழுகைகளுக்கு முன் பின்னான சுன்னத்கள், ளுஹா, கியாமுல் லைல் போன்றவற்றைத் தொழுவது

3.திக்ர்

4.இஸ்திர்பார்

5.நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறுதல்

6.துஆக்களை அதிகமாகச் செய்தல்

7.தன்னை சுயவிசாரணை செய்தல்

8.மார்க்கப் பாடங்களைக் கற்பது

9.தப்ஸீர், ஹதீஸ் நூல்களை வாசிப்பது

10.நபிமார்கள், நல்லடியார்களது வரலாறுகளை வாசிப்பது

11.தனது அறிவுக்கும் சக்திக்கும் உற்பட்பட்ட வகையில் பிறருக்கு நல்ல, பயனுள்ள அம்சங்களைப் போதிப்பது

மேற்கூறப்பட்ட கருமங்களில் ஈடுபடுவது மிகவும் விரும்பத்தக்கனவாகும்.

நபிகளாரின் நடைமுறை

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பதற்காக பள்ளிவாயலின் ஒரு பகுதியில் தமக்கென ஒரு சிறிய கூடாரத்தை அடித்துக் கொண்டிருந்ததாக ஹதீஸ்களில் காண முடிகிறது. இபாதத்களில் ஈடுபடும்போது கவனம் வேறு திசைகளில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம்.

ஒருதடவை நபியவர்கள் பள்ளிவாயலினுள் கூடாரமொன்றை அடித்து இஃதிகாப் இருந்தார்கள். அவர்களது மனைவியரான ஆயிஷா, ஹப்ஸா, ஸைனப் (றழி) ஆகியோரும் நபியைப் பின்பற்றி கூடாரங்களை அடித்துக் கொண்டார்கள். இதனை அவதானித்த நபியவர்கள் அவற்றை உடைக்கும்படி கட்டளை பிறப்பித்ததாகவும், தொடர்ந்து நபியவர்கள் இஃதிகாப் இருக்காமல் ஷஷவ்வாலில் பத்து நாட்களில் அந்த இஃதிகாபை ‘களா| செய்ததாகவும் ரிவாயத்களில் காண முடிகிறது. கூடாரங்கள் அதிகரிப்பது பள்ளிவாயலுக்கு வருவோருக்கு இடையூறுகளை உண்டுபண்ணும் என்பதால் அவர்கள் இவ்வாறு தடைசெய்ததாக வியாக்கியானங்களில் தெரிவிக்கப்படுகிறது. முதலில் ஆயிஷா(றழி) அவர்களுக்கு கூடாரம் அடிக்க அனுமதி வழங்கிய நபியவர்கள், கூடாரங்கள் அதிகரித்த போது அதனை விரும்பவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டியன

பள்ளிவாயலில் இஃதிகாப் இருப்பவர்கள் பயனற்ற வீணான பேச்சுக்களில் ஈடுபடலாகாது. ‘தனக்கு சம்பந்தமில்லாதவற்றை விட்டுவிடுவது ஒருவர் சிறந்த முஸ்லிமாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதேவேளை, தேவையான அம்சங்களைக் கூட கதைக்காமல் இருப்பதும் மக்ரூஹ் ஆகும். ஏனெனில், ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் குத்பா ஓதிக் கொண்டிருந்தபோது ஒருவர் நின்றுகொண்டிருப்பதை அவதானித்து அவர் ஏன் நிற்கிறாரென வினவினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அவர் உட்காராமல் நின்ற வண்ணம் இருப்பேன், வெய்யிலில் தான் நிற்பேன், பேசமாட்டேன். நோன்பிருப்பேன்| என நேர்ச்சை வைத்திருக்கிறார் என்றார்கள். அப்போது நபியவர்கள் அவர் பேசட்டும், நிழலில் நிற்கட்டும், அமர்ந்துகொள்ளட்டும். ஆனால், நோன்பை நிறைவு செய்யட்டும்| என்றார்கள். எனவே, இஸ்லாம் அங்கீகரிக்காத காரியங்களைக் கடைப்பிடித்து இஃதிகாப் இருப்பது – அதாவது அளவுக்கதிகம் உடலை வருத்திக்கொள்வது கூடாது என இந்த ஹதீஸிலிருந்து நவீனகால அறிஞர் சையித் சாபித் விளக்குகிறார்.

அனுமதிக்கப்பட்டவை

இஃதிகாப் இருப்பவர் நிர்ப்பந்தமான தேவைகளுக்காக பள்ளிவாயலிலிருந்து வெளியேறலாம். மனிதனது அடிப்படையான தேவைகள் நிமித்தமாக அன்றி இஃதிகாபிலிருக்கும் நபியவர்கள் தமது வீட்டுக்கு வரமாட்டார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. அந்தவகையில் பள்ளிவாயலின் எல்லைக்குள் நிறைவேற்ற முடியாத மலசலம் கழித்தல், நீராடுதல், வாந்தியைத் துப்புதல், நஜீஸை அகற்றுதல், மருந்தெடுத்தல் போன்ற தேவைகளுக்காக வெளிவரலாம். ஆனால்,நீண்டநேரத்தை வெளியே கழிக்கலாகாது. நபி(ஸல்) அவர்கள் இஃதிகாபில் இருந்த போது பள்ளிவாயிலின் சுவரோடு அவர்களது வீடும் இருந்ததால் தமது தலையை கழுவிவிடும்படியும் வாரிவிடும்படியும் ஆயிஷா நாயகிக்குக் கூறுவார்கள். இஃதிகாப் இருப்பவர் தலை வாருவது, தலைமயிரை சிரைப்பது, நகம் வெட்டுவது, நறுமணம் பூசுவது என்பவற்றில் ஈடுபட முடியும்.

இஃதிகாப் இருப்பவர் ஜனாஸாவைப் பின்தொடர முடியும் என்றும், நோயாளர்களை நோய்விசாரிக்கப் போக முடியுமென்றும் தனது வீட்டுக்கு வந்து தனது தேவைகளை நின்றவண்ணமே கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அலி(றழி) கூறியிருக்கிறார்கள். இதே கருத்தை இமாம் கதாதா கொண்டிருந்தார்கள். ஆனால்,நோய்விசாரிக்கவென்று நபியவர்கள் போகாமல் நோயாளியை கடந்து சென்றிருப்பதால் நாமும் அவ்வாறே செய்ய முடியும் என வேறு சிலர் கூறியிருக்கிறார்கள்.

பள்ளிவாயலின் மகிமையைப் பேணுவது

இருப்பினும் இஃதிகாப் இருப்பவர் பள்ளிவாயலின் தூய்மை, அமைதி, ஒழுங்கு என்பவற்றை கருத்திற்கொண்டு தான் தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர் பள்ளிவாயலினுள் தூங்குவதிலோ, உண்ணுவதிலோ, பருகுவதிலோ, கொடுக்கல்-வாங்கலில் மற்றும் திருமண ஒப்பந்தங்களில் ஈடுபடுவதிலோ எத்தவறும் கிடையாது. ஒரு தடவை நபியவர்களின் மனைவி ஸபிய்யா (றழி) அவர்கள் நபியவர்கள் இஃதிகாப் இருந்தவேளையில் அன்னாரை சந்திக்க பள்ளிவாயலுக்கு வந்ததாகவும் நபியவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் அவர்களோடு கதைத்துக் கொண்டிருந்துவிட்டு பின்னர் அவர்களை வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்ததாகவும் ஸஹீஹுல் புகாரியில் வரும் ஒரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தாம் வீட்டில் தொழுகைக்காக ஒதுக்கியுள்ள இடத்தில் இஃதிகாப் இருக்க முடியும் என இமாம் அபூஹனிபா தெரிவிக்கிறார்.

எனவே, ரமழானின் கடைசிப் பத்தில் சுன்னத் முஅக்கதாவாக இருக்கும் இஃதிகாப் என்ற இந்த நற்கருமத்தில் முடிந்த வரையில்,ஈடுபட்டு அபரிமிதமான நன்மைகளை சம்பாதிப்போமாக. அதில் லைலதுல் கத்ரை அடைந்துகொள்ள அல்லாஹ் எம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top