Aids to non-Muslims

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான உதவிகள்

Ash S.H.M.Faleel(Naleemi)

முஸ்லிம் அல்லாதவர்களுடனான கொடுக்கல் வாங்கல் மற்றும் சமுக உறவுகளை நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பேணி வந்திருக்கிறார்கள்.பல்லின சமூக அமைப்பொன்றில் வாழும் எமக்கு இவற்றை சிறந்த முன்மாதிரிகளாகக் கொள்ள முடியும். அந்தவகையில் பின்வரும் வகையிலான உறவுப் பாலங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்தன:

அன்பளிப்பு வழங்குவதும் பெறுவதும்

ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்கவோ, அன்பளிப்பைப் பெறவோ முடியும். தான் பெற்ற அன்பளிப்புக்கு பிரதியுபகாரமாக எதனையும் வழங்கவும் முடியும்.ஏனெனில், நபி(ஸல்) அவர்களுக்கு அரசர்கள் அன்பளிப்புக்களை வழங்க அவற்றை அன்னார் ஏற்றிருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருந்துக்கூட.

ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் ‘‘நான் (கிறிஸ்தவ) நஜ்ஜாஸீ மன்னனுக்கு ஒரு ஆடையையும் (ஹுல்லத் حلة) குறிப்பிட்ட ஒர் அளவு கஸ்தூரியையும் அன்பளிப்பாக வழங்கினேன்.(1) என்றார்கள். ஹுல்லத் حلة என்ற சொல் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது. ’ஹுல்லத் ’என்றால் யமன் நாட்டு ஆடையொன்றாகும். மேலாடை கீழாடை இரண்டையும் அவ்வாடை கொண்டிருந்ததால் தான் அது ’ஹுல்லத்’ எனப்படும்.(2)

இமாம் புகாரீ அவர்கள் ‘இணைவைப்பவர்களிடமிருந்து அன்பளிப்புக்களைப் பெறுவது’ என்று ஒரு தலைப்பிட்டு அதன் கீழ் பின்வரும் இரு சம்பவங்களைப் பதிவு செய்கிறார்கள்.

(1) ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுக்கு ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் நஞ்சு இருந்தது. ஒரு யூதப் பெண் நஞ்சூட்டப்பட்ட ஆட்டை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் வந்தாள். அவர்கள் அதிலிருந்து சாப்பிட்டார்கள். பின்னர் அவள் அன்னாரது முன்னிலையில் அழைத்துவரப்பட்டு ‘அவளை நாம் கொலை செய்யவா?’ என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள்.

(2) ஒருதடவை (தற்போதைய எகிப்திற்கும் சிரியாவிற்கும் இடையில் அமைந்திருந்த) ‘ஐலா’ எனப்படும் பிரதேசத்தைச் சேர்ந்த அரசன் நபிகளாருக்கு வெள்ளை நிறக் கோவேறு கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள்.(3)

‘இணைவைப்பவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது’ என்று மற்றொரு தலைப்பை இட்டுள்ள இமாம் புகாரி அவர்கள் சூரா மும்தஹனாவின் “உங்களுடன் மார்க்க விடையத்திற்காக போராடாத….” (மும்தஹனா-8,9) என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டி விட்டு, பின்னர் உமர்(றழி) அவர்கள் மக்காவிலிருந்த தனது சகோதரர் ஒருவருக்கு அவர் இஸ்லாத்தில் ஙழைவதற்கு முன்பு ஓர் ஆடையை (அன்பளிப்பாக) அனுப்பிவைத்தார்கள் என்ற சம்பவத்தையும், அஸ்மா(றழி) அவர்கள் தனது தாயார் இணைவைப்பவராக இருந்த வேளையில் அவரை கவனிக்கும் படி நபி(ஸல்) உத்தரவு பிறப்பித்தார்கள் என்ற சம்பவத்தையும் உதாரணமாகக் காட்டுகிறார்கள். (4 )

கொடுக்கல் வாங்கல் முறை உறவுகள்

நபிகளார்(ஸல்) அவர்கள் தனது குடும்பத்தாரின் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்வதற்காக தனது கேடயத்தை ஒரு யூதரிடம் அடகுவைத்தார்கள். அவர்கள் இறக்கும் போது அக்கேடயம் அடகுவைக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. இச்சம்பவத்தை இமாம் புகாரி பதிவுசெய்துள்ளார்கள். ஆனால், தனது ஸகாபாக்களில் எவரிடமாவது அவர்கள் கடன் கேட்டிருக்கலாம். அவ்வாறு அவர்கள் கேட்டால் அவர்களில் எவரும் எதனையும் அவருக்காகத் கொடுக்காதிருக்கமாட்டார்கள். ஆனால், இந்த நடவடிக்கை மூலம் (பிறசமயத்தவரிடமிருந்தும் கடன் பெறலாம் என்பதை) தனது சமூகத்திற்கு நபியவர்கள் உணர்த்த விரும்பினார்கள் .(5)

நபிகளார்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு இசைவாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், யூத, கிறிஸ்தவ, மற்றும் உள்நாட்டையும் வெளிநாட்டையும் சேர்ந்த இணைவைப்போரான வியாபாரிகள் மதீனாவில் முஸ்லிம்களுடன் வியாபார உறவுகளை வைத்திருந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு முஸ்ரிக் (இணைவைப்பவர்)இடமிருந்து ஓர் ஆட்டைக் கொள்வளவு செய்ததாகவும் அதன் முலம் சமைக்கப்பட்ட இறைச்சியை அன்னாரும் அன்னாருடன் இருந்த 130 தோழர்களும் சாப்பிட்டதாகவும் ஸஹீஹுல் புகாரியின் ஹதீஸ் கூறுகிறது.(6)

அறிஞர் ஹமீதுல்லாஹ் கூறுகையில், நபிகளாரது காலத்தில் தூதுக்குழுக்களும் தூதுவர்களும் முஸ்லிமல்லாத கோத்திரத்து வியாபாரிகளும் நாளாந்தம் மதீனா வந்தனர். குலாபாஉர் ராஷிதூன்களது காலத்திலும் இது தொடர்ந்தது. கலீபா உமரிடம் ஒரு கிறிஸ்தவ வியாபாரி தனது முறைப்பாட்டைத் தெரிவிக்க கஃபதுல்லாஹ்வுக்கு வந்ததாக இமாம் அபூயூசுப் எழுதுகிறார்கள்.(7)

கலீபா உமர்(றழி) அவர்களது காலத்தில் கிறிஸ்தவர்கள் மதீனாவில் வியாபாரம் செய்துவந்தனர் என அப்துல் கரீம் ஸைதான் எழுதுகிறார்.(

தபூக் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி(ஸல்) கஃப் இப்னு மாலிக் என்ற தோழரை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தார்கள். அவ்வேளை ஷாம் தேசத்து (கஸ்ஸான்) அரசர் கஃபிற்கு இரகசியமாக ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்பி, மதீனாவில் அவர் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில் வாழவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஷாம் தேசம் வந்து சுகண்டியாக இருக்கலாம் என்றும் அதில் எழுதியிருந்தார்.அக்கடிதத்தை மதீனாவுக்கு எடுத்து வந்த நபர் பற்றி கூறும் ஹதீஸ், அவர்(பிறசமயத்தவரான) ஒரு விவசாயி என்றும் மதீனாவில் பொருட்கள் விற்பதற்காக அவர் ஷாம் என்ற (முஸ்லிமல்லாத பக்கத்து) நாட்டிலிருந்து மதீனா வந்திருந்தவர் என்றும் தெரிவிக்கிறது.(9)

சமுக உறவுகள்

பொதுவாக முஸ்லிம் அல்லாதவர்களை, அவர்கள் பிறசமயத்தவர்கள் என்பதற்காக முஸ்லிம்கள் ஒதுக்கிவைக்கவில்லை. நபிகளாரது காலம் முதல் இன்றுவரை அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சூரதுல் மும்தஹனாவின் ஒன்பதாம் வசனம் இதற்கான வழிகாட்டலை அவர்களுக்கு வழங்கியது. பின்வரும் உதாரணங்கள் மூலம் இதற்கான நடைமுறையை விளங்கலாம்.

  1. அபிஸீனியாவிலிருந்து கிறிஸ்தவ தூதுக்குழுவொன்று மதீனாவந்த போது, அவர்களை நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜுதுன் நபவியில் தங்கவைத்ததோடு, தானே முன்னின்று அவர்களுக்கு பணிவிடை செய்து விருந்தளித்தார்கள். அத்துடன் ‘எமது தோழர்கள் அபீஸினியா சென்றிருந்த போது இவர்கள் அவர்களை மதிப்போடும் மரியாதையோடும் நடாத்தினார்கள். எனவே, நானே இவர்களை மரியாதையாகக் கவனிக்க விரும்புகிறேன்” என்றார்கள்.(10)
  2. நஜ்ரானின் கிறிஸ்தவ தூதுக்குழுவினர் மதீனா வந்திருந்த போது அவர்களை நபி(ஸல்) பள்ளியில் தங்கவைத்தார்கள். தமது மார்க்கத்தைப் பாதுகாத்துப் பேச அவர்கள் விரும்பிய போது நபிகளார் அவர்களது பேச்சுக்கு செவிமடுத்து அவர்களுடன் கருத்துப்பரிமாறல் செய்தனர். இவை அனைத்தும் மிக நளினமாகவும் பண்பாகவும் நடந்து முடிந்தன.(11)
  3. அஸ்மா (றழி) அவர்கள், இணைவைப்பாளராக இருந்த தனது தாய் தன்னிடம் வந்த போது நபி(ஸல்) அவர்களிடம் போய் ‘நான் எனது தாயுடன் சேர்ந்து நடக்கவா? ’என வினவினார்கள். அப்போது நபியவர்கள் ‘ஆம் உமது தாயை சேர்ந்து நடப்பீராக’ என்றார்கள்.(12)
  4. நபி(ஸல்)அவர்கள் ஒரு யூதரை நோய் விசாரிக்கச் சென்று அவருக்கு இஸ்லாத்தைப் போதித்ததாகவும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட போது ‘என் மூலம் அவரை நரகிலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்’ எனக்கூறிய வண்ணம் அன்னார் அங்கிருந்து வெளிவந்ததாகவும் ஒரு ஹதீஸில் பதியப்பட்டுள்ளது.(13)
  5. உம்முல்ஹாரித் இப்னு அபீ ரபீஆ என்ற கிறிஸ்தவ பெண் இறந்த போது நபித்தோழர்கள் அவரது பிரேதத்தைப் பின்துயர்ந்து சென்றதாக இமாம் இப்னு ஹஸம் எழுதுகிறார்கள்.(14)
  6. ஒருவர் அருந்திவிட்டு எஞ்சவைத்துள்ள பானம் ‘சுஉர்’ (سؤر) எனப்படும். அதனை ஒரு முஸ்லிமோ அல்லது காபிரோ எஞ்ச வைத்திருந்தாலும் அது சுத்தமானதாகும். அவர்களது உடல்களோ பொருட்களோ அசுத்தமானவையல்ல. காபிர்கள் முஸ்லிம்களுடன் கலந்து பழகினார்கள். அவர்களது தூதுக்குழுக்கள் நபியவர்களிடம் வந்து பள்ளிவாசலுக்குள்ளும் வந்தனர். அவர்களது உடல்கள் பட்ட எந்த இடத்தையும் நபியவர்கள் கழுவும்படி பணிக்கவில்லை.(15)
  7. உமர்(றழி) அவர்கள் ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து வுளு செய்தார்கள். அது ‘நஜீஸ்’ ஆக இருக்குமா என அவர்கள் சந்தேகிக்கவுமில்லை, சந்தேகத்தினடியாக அது ‘நஜீஸ்’ என்று தீர்ப்பளிக்கவுமில்லை.(16)
  8. ‘காபிர்களதும் முனாபிக்களதும் வீடுகளில் (முஸ்லிம்கள்) குடியிருக்க முடியும். அவர்களது ஆடைகளை அணியமுடியும். ஆயுதங்களைத் தரிக்க முடியும். நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதி யூதர்களது நிலங்களைப் பயன்படுத்தியது போல் நாமும் பயன்படுத்தலாம்என இமாம் இப்னு தைமியா கூறுகின்கிறார்.(17)
  9. காபிர்களை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தமுடியும் என்பது பற்றி எழுதும் இப்னு தைமிய்யா, ‘நபி(ஸல்)அவர்களும் அபூபக்கர்(றழி) அவர்களும் மக்காவிலிருந்து முஹாஜிர்களாக வெளியேறிய போது, தியல் கோத்திரத்தவரான, வழிகாட்டுவதில் மிகத்திறமை பெற்றவராக விளங்கிய (காபிரான)இப்னு உரைகத் என்பவரை வழிகாட்டியாக வைத்துக் கொண்டனர். தமது விவகாரங்களிலும், தத்தமது வாகனங்கள் விடயமாகவும் அவரை அவர்கள் இருவரும் நம்பினார்கள்.அபூதாலிப் ஒரு முஸ்ரிகாக இருந்த போதும் நபி(ஸல்)அவர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்களைப் பாதுகாத்தும் வந்தார். நபி(ஸல்)அவர்கள் ‘குஸாஆ’ கோத்திரத்தாரின் உபதேசங்களை ஏற்றார்கள். இவ்வாறு இதற்கு அதிகமதிகம் உதாரணங்களைக் கூறமுடியும்(.18) ஆனால் இது விடயாமாக முன்னெச்சரிக்கைகளும் தேவை.

எனவே,இலங்கை போன்ற – முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்ப இது போன்ற முன் உதாரணங்களை எமக்குப் பயன்படும்.

  1. முஸ்னத் அஹ்மத், பாகம் – 6, பக் – 404
  2. இப்னுல் அதீர், அந்நிஹாயா பாகம் : 01, பக் : 432
  3. ஸஹீஹுல் புஹாரி, கிதாபுல் ஹிபா, பாபு கபூலில் ஹதிய்யதி மினல் முஸ்ரிகீன், ஹதீஸ் இல -2615-2617
  4. ஸஹீஹுல் புஹாரி, கிதாபுல் ஹிபா, பாபுல் ஹதிய்யதி லில்முஸ்ரிகீன், ஹதீஸ் இல – 2619
  1. கர்ளாவி, அல்அகல்லிய்யாத் அத்தீனிய்யா. பக் : 42
  2. ஸஹீஹுல் புஹாரி, பாபு கபூலில் ஹதிய்யதி மினல் முஸ்ரிகீன், ஹதீஸ்: 2618
  3. Hameedullah, Relations of Muslim with Non-Muslims, Journal, Vol 7, No1, p10
  4. ஸைதான், அஹ்காமுத்திம்மிய்யீன். பக்-93
  5. ஸஹீஹுல் புஹாரி. கிதாபுல் மகாஸீ, பாபு ஹதீஸ் கஃப் இப்ன் மாலிக், ஹதீஸ் இல-4418, ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுத் தவ்பா, பாபு தவ்பதி கஃப் இப்னி மாலிக் வஸாஹிபைஹி ,ஹதீஸ் இல-2796.
  6. முஸ்தபா சிபாஈ, மின் ரவாஇ ஹளாரதினா, பக் : 120-121
  7. மேற்படி, பக் : 121
  8. ஸஹீஹுல் புஹாரி, கிதாபுல்அதப்,பாபு ஸிலதில்மர்அதி உம்மஹா,ஹதீஸ்-5979
  1. அபூதாவூத், கிதாபுல் ஜனாஇஸ், பாபு பீ இயாததி அத்திம்மீ, ஹதீஸ் இல-3095
  2. இப்னு ஹஸம், அல்முஹல்லா, பாகம்-5, பக் : 117
  3. ஸையித் ஸாபிக், பிக்ஹுல் ஸுன்னா, பாகம்-1, பக் : 21
  4. இப்னு தைமிய்யா, மஜ்மூஉ பதாவா, பாகம்-35, பக் : 155
  5. மேலது, பாகம்-4, பக் : 114
  6. மேலது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top