நடைமுறையில் உள்ள சிலவகையான சீட்டிழுப்பு முறைகள் மூலம் கிடைக்கும் பரிசில்கள் பற்றிய மார்க்கத் தீர்ப்பு எப்படி அமையலாம்?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

அண்மைக் காலத்தில் சில வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை அதிகமதிகம் விற்பனை செய்யும் நோக்கில் முக்கியமான உத்தியொன்றைக் கையாண்டு வருகின்றன.ஓர் ஆங்கிலச் சொல்லைத் தெரிவு செய்து அந்த சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்துக்களையும் தமது பண்டத்தைச் சுற்றியுள்ள உறையின் உள் பகுதிக்குள் அச்சிட்டு அச்சொல்லின் எல்லா எழுத்துக்களையும் கொண்ட உறைகளை அல்லது பானத்தின் கொள்கலனை மூடியிருக்கும் மூடிகளை அவர்களுக்கு அனுப்பினால் குறிப்பிட்ட ஒரு தொகையைப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளன.வாடிக்கையளர்கள் பரிசு கிடைக்கும் என்ற பேரவாவில் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்குகிறார்கள்.பரிசு கிடைத்ததோ என்னவோ பொருள் விற்பனை மிக வேகமடைந்து விட்டது.அப்பாவிப் பொதுமக்களது நிலையோ ’கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதை தான்.சில நிறுவனங்கள் ’இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று கூறி தமது பொருட்களின் விற்பனையை அதிகரிக்கின்றன.ஆனால்,மக்களுக்குப் பொருட் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவை கொள்வனவுசெய்யப்படுகின்றன.

இது சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என சிந்தித்த போது, அரபு நாடுகளில் நடைமுறையில் உள்ள சில பரிசுத் திட்டங்கள் பற்றி கலாநிதி ஷெய்க் கர்ளாவி அவர்கள் தந்துள்ள விளக்கத்தையும் பத்வாவையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“சீட்டிழுப்புக்களை நடாத்தி வாடிக்கையாளர்களுக்குப் பெரும் பரிசில்களை வழங்குவதன் மூலம் அவர்களைக் கவரும் வியாபாரி உத்தி தற்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்டு வருகின்றது.முஸ்லிம்களான எம்மைப் பொருத்தவரையில் எமக்கு இது முற்றிலும் அந்நியமான, மேற்கத்திய சமூக அமைப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.தற்காலத்தில் பல வகையான சீட்டிழுப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பின்வரும் இரண்டு முறைகள் முக்கியம் பெறுகின்றன.

முதலாவது வகை:

இத்தகைய சீட்டிழுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு முதலில் கூப்பன்கள் (Coupon) அதாவது சுவீப் டிக்கட்டுக்கள் விநியோகிக்கப்படும். அவை 100 டொலர் அல்லது 1000 திர்ஹம் அல்லது 1000 றியால் போன்ற பணப் பெறுமதிகளுக்கு விற்கப்படுகின்றன. ஒருவர் ஒரு டிக்கட்டையோ ஒன்றுக்கு மேற்பட்ட டிக்கட்டுக்களையோ வாங்குவார். அதிக டிக்கட்டுக்களை வாங்குவோருக்குப் பரிசில்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் அதிகமாகும். பரிசுகள் பென்ஸ் கார், ஒரு கிலோ தங்கம் என்று மக்களின் மனங்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

இரண்டாவது வகை :

இன்றைய சில வியாபார நிறுவனங்கள் அல்லது பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் போன்றவற்றால் நடாத்தப்படுவது அடுத்த வகை சீட்டிழுப்பாகும். ஒரு குறிப்பிட்ட தொகைப் பணப் பெறுமதிக்கு மேல் பொருட்களைக் கொள்வனவு செல்வோருக்கு சீட்டுக்கள் வழங்கப்பட்டு பின்னர் அவை குலுக்கப்பட்டு (Draw) குலுக்கல் முறையின் மூலம் ஒரு சில வாடிக்கையாளர்கள் மாத்திரம் அதிஷ்டசாலியாக, பரிசு வழங்கத் தெரிவு செய்யப்படுவர். இங்கு சீட்டுக்களுக்குத் தனியான பணப் பெறுமதி இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு பணத் தொகைக்கு மேலதிகமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வோர் இந்தச் சீட்டிழுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இது போன்ற சீட்டிழுப்பு முறைகள் பற்றிய ஷரீஆவின் தீர்ப்பு என்ன என்று பலரும் கேட்கிறார்கள். இவ்விடயம் பற்றிய மார்க்கத்தின் தீர்ப்பை அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஷரீஆவின் அடிப்படை விதிகளது வெளிச்சத்தில், பொதுவாக ஷரீஆவின் இலக்குகளை கருத்திற் கொண்டு வெளியிடுவது அறிஞர் பெருமக்களது பொறுப்பாகும்.

பரிசுத் திட்டங்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய ஷரீஆவினால் அங்கீகரிக்க்பபட்ட பரிசுத் திட்டமொன்று காணப்படுகின்றது. பயனுள்ள அறிவு முயற்சிகளுக்கு அல்லது நற்பணிகளுக்கு உற்சாகமளிக்கும் நோக்குடன் வழங்கப்படும் பரிசில்கள் இதில் அடங்கும். அல்குர்ஆனை மனனமிட்டமைக்காக, பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்றமைக்காக, இஸ்லாமிய அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றமைக்காக அல்லது குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலை நாட்டியமைக்காக வழங்கப்படும் பரிசில்களை இவற்றிற்கு உதாரணமாகக் கூறலாம். தற்காலத்தில் தனிமனிதர்கள் அல்லது அரசுகள் அல்லது தனிப்பட்ட நிறுவனங்கள் இத்தகைய பரிசில்களை வழங்குகின்றன. மன்னர் பைஸல் சர்வதேச விருது (King Faizal International Award) போன்ற பரிசில்கள் இந்த வகையில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஷரீஆவின் அங்கீகாரம் பெற்ற போட்டி உருவாகி நற்கிரியைகளின் பால் மக்கள் தூண்டப்படுவதற்கு வழியேற்றப்படுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் குதிரை ஓட்டப் போட்டி நடாத்தினார்கள். அதில் வென்றவர்களுக்கு பரிசு கொடுத்தார்கள். (முஸ்னத் அஹ்மத் 91.2) அதேபோல் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவைகள் செய்தமைக்குக் கைமாறாக நபி(ஸல்) அவர்கள் சில ஸஹாபாக்களுக்கு விஷேட பரிசில்களை வழங்கினார்கள். உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரழி) அவர்களுக்கு பனூநழீர் கோத்தினருக்குச் சொந்தமாக இருந்த ஒரு காணியைப் பரிசாக வழங்கினார்கள்.(புகாரி) என்ற ஹதீஸ் காணப்படுகின்றது.

இத்தகைய அமைப்பிலான பரிசில்கள் சிலவகையான நிபந்தனைகளைப் பெற்றுள்ள நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்கென நியமிக்கப்படும் ஒரு கமிட்டி இத்தகைய நிபந்தனைகளுக்கு உட்படும் நபர்களை இனங்காணும். பின்னர் அந்நபர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படும். இத்தகைய பரிசு வழங்கும் முறையில் எந்தத் தவறும் இல்லை. அது நல்லது என்பதில் கருத்து பேதமில்லை. ஆனால், பின்வரும் இரு அமைப்புக்களில் வழங்கப்படும் பரிசில்கள் பற்றி நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

முதலாம் வகை:

ஒருவன் ஒரு கூப்பனை அல்லது ஒரு டிக்கட்டை ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்துக் கொள்வனவு செய்கிறார். ஒரு பரிசுத் திட்டத்தில் கலந்து கொள்வதே இவரது நோக்கமாகும். பரிசு ஒரு வாகனமாக, தங்கப் பதக்கமாக, பணத் தொகையாக அல்லது வேறு எதுவுமாக இருக்கலாம். இது வெறும் சூது தான். இதை மது அருந்தும் பாவத்துடன் இணைத்தே அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். மது அருந்துவதும், சூதாடுவதும் ஷைத்தானின் செயல்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

‘விசுவாசம் கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானமும் சூதாட்டமும் சிலை வழிபாடும் அம்புகள் எறிந்து குறிகேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்.ஆகவே, நீங்கள் அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’ (அல்மாயிதா – 90)

‘நபியே! அவர்கள் உம்மிடம் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் பற்றி வினவுகின்றனர். நீர் கூறும். அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கின்றது. மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலன்களை விடப் பெரியது.'(அல்பகரா – 219)

சூதாட்டத்தில் ஈடுபடும் இரு தரப்பினரில் ஒரு தரப்பு நிச்சயமாக நஷ்டமடைகிறார்கள். இங்கு ஆயிரக்கணக்கானோர் அல்லது இலட்சக் கணக்கானோர் தாம் செலுத்திய பணத்தை இழக்க ஒருவர் மாத்திரம் பரிசுக்கு உரித்துடையவராகிறார். சர்வதேச அதிஷ்ட்டப் பந்தயம் அல்லது லொத்தர் சீட்டிழுப்பில் இப்படியான நிலையைக் காணலாம். இந்த வகைச் சூதாட்டத்தை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. ஏனெனில், கஷ்ட்டப்படாமல், நெற்றி வியர்வை சிந்தாமல்,முயற்சியின்றிப் பணம் சம்பாதிப்பதற்கு இது மக்களைப் பழக்கப்படுத்திவிடும். அல்லாஹ் அனுமதித்த முறைகளினூடாக அல்லாமல் சந்தர்ப்பவசமாக, அதிஷ்ட்டத்தினால் ஒருவன் செல்வந்தர்களது பட்டியலில் இணைந்து கொள்கிறான். ஆனால், உழைப்பதற்கு அல்லாஹ் பின்வருமாறு தான் வழிகாட்டியிருக்கிறான் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

‘நீங்கள் பூமியின் பல பாகங்களிலும் நடந்து சென்று அவனது உணவிலிருந்து புசியுங்கள்.’ (முல்க்-15) ‘பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்’ (ஜும்ஆ – 10)

எனவே, இஸ்லாம் சூதாட்டத்தை ஹராமாக்கியது ஒரு புறமிருக்க சீராக சிந்திக்கும் எவரும் சூது மூலம் பெறப்படும் வருமானத்தை நல்லதாகக் கருதமாட்டார்கள். இந்தவகைச் சூதாட்டம் ஹராம் என்பதில் எந்த அறிஞரும் சந்தேகம் கொள்ளமாட்டார். அதேவேளை இது சம்பந்தமாக இன்றுமொரு விடயத்தையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, இந்த சூதாட்டத்தின் மூலம் பெறப்படும் வருமானம் அநாதைகள், அங்கவீனர்கள் அல்லது ஏழைகளுக்குச் செலவு செய்யப்பட்டாலும் அந்தச் சூது ஹராமானதே. ஏனெனில், எவராவது நற்கருமங்களை தீய வழியினூடாக அடைவதனையோ, அசத்தியத்தின் உதவியால் சத்தியத்திற்குத் துணைபோக எடுக்கப்படும் முயற்சிகளையோ இஸ்லாம் அங்கீகரிக்காது. இலக்கு உண்ணதமானதாகவும், அதனை அடையும் ஊடகம்- வழிமுறை பரிசுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் தீவிர கரிசனை காட்டுகிறது. தூய்மையான வழிமுறையினூடாகவே கண்ணியமான இலக்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இஸ்லாமியப் போதனையாகும். இலக்கை அடைவதற்கு எத்தகைய வழிமுறையையும் கையாளலாம் என்பது கம்யூனிஸ அணுகுமுறையாகும். அதனை இஸ்லாம் முற்றாக மறுதலிக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் பரிசுத்தமானவன் அவன் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டான்’ (ஆதாரம் – ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறினார்கள். மேலும் ஒரு தடைவ, ‘அல்லாஹ் தீயதைத் தீயதால் அழிக்கமாட்டான்’ என்றும் கூறினார்கள். (ஆதாரம் – முஸ்னத் அஹ்மத்) ஹராம் மூலமாகச் சம்பாதித்து அதனை ஸதகா செய்வதற்கு உதாரணமாக நஜீஸை சிறு நீரால் சுத்தப்படுத்துவதைக் கூறமுடியும். அந்தச் சிறுநீர் அழுக்கை இன்னும் அதிகப்படுத்துமே தவிர குறைக்காது என்றும் எமது உலமாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே, இந்த வகைச் சீட்டிழுப்பும் ஹராமானது என்பதுடன் அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை நற்கருமங்களுக்குப் பயன்படுத்தலாகாது என்றும் அறிந்தோம்.

இரண்டாம் வகை:

இது கருத்து வேறுபாட்டுக்கிடமான ஒரு வகைச் சீட்டிழுப்பாகும். அதன் வடிவமாவது, ஒருவர் ஒரு வியாபார நிலையத்தில் ஒரு பொருளைக் கொள்வனவு செய்தால் அல்லது பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் தனது வாகனத்திற்குப் பெற்றோர் நிரப்பினால் செலுத்திய பணத்தொகையின் நிமித்தம் ஒரு கூப்பனைப் பெற்றுக் கொள்கிறார். இவ்வாறு விநியோகிக்கப்படும் கூப்பன்களின் இலக்கங்கள் சீட்டிழுப்பிற்காக விடப்பட்டு ஓரிருவருக்கு மாத்திரம் பரிசில்கள் வழங்கப்படும் இது ஹராமானதாகும். அது ஹராமானது என்பதற்குப் பின்வரும் நியாயங்கள் முன்வைக்கலாம்.

  1. சூதாட்டத்தின் உயிர் நாடி

இந்த வகை நடவடிக்கையானது முற்று முழுதாக சூதாட்டம் என்றில்லாவிட்டாலும் சூதாட்டத்தின் உயிர் நாடியை இது பெற்றிருக்கிறது. அதிஷ்ட்டத்ததை ((Chance) எதிர்பார்த்திருப்பது அல்லது அதில் தங்கியிருப்பது என்பது இரண்டுக்கும் பொதுவான உயிர் நாடியாகும். அல்லாஹ்வின் நியதிகளை அனுசரித்து உழைக்காமல் முடங்கியிருக்க இங்கு மனிதன் தள்ளப்படுகிறான். காரண காரிய விதிக்கு உட்பட்டு விவசாயம், கைத்தொழில், வியாபாரம் மற்றும் பல்வேறுபட்ட கைத்தொழில்களில் ஈடுபடாதிருக்கும் அவன் வானத்திலிருந்து ஒரு பரிசு இறங்கி தனது வறுமையைப் போக்கும் வரைக்கும் இழிநிலையை அகற்றும் வரைக்கும் காத்திருக்கிறான். அவன் வாழ்க்கைக்கு எப்பங்களிப்பையும் வழங்க முன்வராதிருக்கிறான். இந்த மனோபாவத்தை அதாவது பிறர் கஷ்ட்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்க தான் மாத்திரம் அதிஷ்ட்டத்தில் நம்பிக்கை வைத்து வாழலாமென்ற ஒருவரது எண்ணத்தை இஸ்லாம் நிராகரிக்கிறது. முஸ்லிம்களிடம் இது வரக்கூடாது என இஸ்லாம் விரும்புகிறது. இதற்கு மாற்றமாக அவர்கள் மலைகள், பள்ளத்தாக்குகள் எங்கும் ஏறி இறங்கி, சிரமமெடுத்து, கஷ்ட்டப்பட்டு தம் கைகளினாலேயே உழைத்து வாழ வேண்டும் என விரும்புகிறது. பாரசீகர்களால் உருவாக்கப்பட்ட நர்த் (சொக்கட்டான் போன்ற ஒரு சூதாட்டம்) விளையாட்டை நபி(ஸல்) அவர்கள் ஹராமாக்கினார்கள். ‘யார் நர்த் விளையாடினாரோ அவர் அல்லாஹ்வுக்கும் றஸுலுக்கும் மாறு செய்து விட்டார்.'(அபூதாவூத், இப்னுமாஜா) என்றும் ‘யார் நர்தஸீர் விளையாடினாரோ அவர் தனது கையைப் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவராவர்.'(முஸ்லிம், அபூதாவூத்) என்றும் குறிப்பிட்டார்கள். இந்த விளையாட்டில் உடல் உழைப்பிற்கோ சிந்தனைப் பிரயோகத்திற்கோ இடமில்லை. வெறுமனே அது அதிஷ்ட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஆனால், சதுரங்க (Chess) விளையாட்டு ஹராமானது என்பதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸிலும் ஆதாரமில்லை. அது ‘நர்த்’ ஐப் போலன்றி புத்தியைப் பிரயோகிப்பதனையும் சிந்திப்பதனையுமே அடிப்படையாகக் கொண்டதாகும். சதுரங்கம் ஹராம் என்றவர்கள் வேறு பல காரணங்களுக்காகவே அதனை ஹராம் என்றார்கள். உதாரணமாக அல்லாஹ்வை திக்ர் செய்வது, தொழுவது போன்றவற்றை விட்டு அது மக்களைத் தடுக்கின்றது. கடமைகளை விட்டு மக்களைத் திசை திருப்புகிறது என்பதே அவர்கள் கூறிய நியாயங்களாகும்.

  1. சுயநலத்தை வளர்க்கிறது:

இந்தவகை நடவடிக்கை மக்களிடம் சுயநல உணர்வையும் தன்னல வெறியையும் அதிகமாக வளர்த்துவிடும். எனவேதான், மேற்கத்தேய முதலாளித்துவத்தின் ஓர் சுரப்பாக – வெளிப்பாடாக இது இருக்கிறது. முதலாளித்துவம் என்பது மனிதனிடம் வெறியை ஏற்படுத்தி எரியச் செய்து விட்டு அதனைத் தூண்டிவிடுகிறது. ஒருவனது நடத்தையானது பிறரது நலன்களுக்கும் மானுஷிக இருப்புக்கும் எதிராக அமைந்தாலும் கூட அது பற்றி அது எக்கவலையும் கொள்ளமாட்டாது. எனவே கட்டுக் கடங்காத இந்த போட்டா போட்டி தான் முதலாளித்துவ அமைப்பின் அடிநாதமாக இருக்கிறது. அங்கு ஒரு வியாபாரி தான் பிறரை ஏறி மிதிப்பது பற்றிப் பொருட்படுத்தமாட்டான். முதலாளித்துவ அமைப்பில் நடக்கும் வியாபாரத்திற்குக் கூரிய நகங்களும், பற்களுமிருக்கின்றன. சாதாரண மக்கள் இவற்றால் கீறிக்கிழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மக்களை இரக்கமாகப் பார்ப்பது என்பது முதலாளித்துவத்திற்கு அந்நியமான ஒரு பண்பாகும்.

எனவே, முதலாளித்துவக் குடையின் கீழ் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை தம் பக்கம் கவர்ந்திழுக்க சகல விதமான கவர்ச்சிகளையும் பிரயோகிக்கிறார்கள். தம்மால் முடியுமான பிரசார விளம்பர உத்திகளையும் கையாளுகிறார்கள்.

இதன் மூலம் மக்களது இருப்புக்கள் தரைமட்டமானால் என்ன, பிறரது வியாபாரத்தளங்கள் மூடு விழாக் கண்டால் என்ன, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்களது கோஷம் ‘நானே முக்கியம். இறப்பவன் இறக்கட்டும்’ என்பதாக இருக்கிறது. இந்தப் போக்கு முஸ்லிமின் போக்கிற்கு முற்றிலும் முரணானதாகும். பிறருக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் தனக்கு இலாபம் தேடிக் கொள்ளலாகாது என இஸ்லாம் முஸ்லிமுக்குப் போதிக்கிறது. ‘தீங்கு விளைவிக்கவும் கூடாது தீங்கு விளைவிக்கப்பட்டால் பதிலாக தீங்கு விளைவிக்கவும் கூடாது’ என்பது இஸ்லாம் காட்டிய வழியாகும். மனிதனுக்கு வழிகாட்ட வந்த வேதம் பின்வருமாறு கூறுகிறது:

‘நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் அத்திமீறலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டாம்.’ (அல்மாயிதா – 2)

அன்சாரின்கள் ‘தங்களுக்குக் தேவைகள் இருந்த போதிலும் தங்களை விட அவர்களையே (அதாவது முஹாஜிர்களையே) – அத்தேவைக்கு உரித்துடையவர்கள் எனக் கருதுகிறார்கள்.’.(அல்-ஹஷ்ர்-9) என அன்ஸாரிகளின் பரந்த தன்மையை குர்ஆன் விளக்குகிறது

நபி (ஸல்) அவர்கள் கூட ‘உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை ஈமான் கொண்டவராகமாட்டார்.’ (புகாரி, முஸ்லிம்) என்று கூறினார்கள்.

இந்தப் போதனைகளால் நெறிப்படுத்தப்படும் முஸ்லிம் ஒரு போதும் இந்த சுய நல முதலாளித்துவப் போக்கில் செல்லமாட்டான்.

அண்மைக்காலம் வரை சில இஸ்லாமிய நாடுகளில் இருந்த முஸ்லிம் வியாபாரிகள் ஒரு வழக்கத்தைக் கையாண்டு வந்தனர். அதாவது, ஒரு முஸ்லிம் வியாபாரி தனது கடைக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதையும் தனது பக்கத்துக் கடையில் எவருமே நுழையாமையையும் அவதானித்தால் அந்த பக்கத்துக் கடைக்குச் செல்லும்படி வாடிக்கையாளர்களுக்கு கூறுவார். ஆனால், தேவையான வியாபாரப் பொருட்கள் யாவும் அவரிடம் இருக்கும் போது தான் இவ்வாறு அவர் கூறுவதுண்டு.

இன்னும் சிலர் தமது குடும்பத்தினதும் செலவுக்குக் கட்டுப்படியாக கடையில் வியாபாரம் நடந்துவிட்டால் தமது பக்கத்துக் கடைக்காரன் உழைத்துக் கொள்ளட்டும் என்ற நோக்கில் தமது கடையை நேரகாலத்தோடு மூடிவிடுவார்கள்.

இத்தகைய சமத்துவ வாஞ்சையுடன் கூடிய, பிறர் நலமே தன்னலம் என்று எண்ணும் மனோபாவத்துடன் ஒப்பிடும் போது பிறரை துவம்சம் செய்து விட்டாவது நான் வாழவேண்டும் என்று நினைக்கும் சுய நலப் போக்கு எவ்வளவு இழிவானது! இத்தகைய பேராசை பிடித்த மனிதர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் சந்தையில் சிறியதொரு வியாபாரியின் கதிதான் என்ன? அவரை இராட்சத வியாபாரிகள் தங்கள் கால்களால் சவட்டி மிதிப்பார்கள். அவர்களது சக்கரங்கள் அவரைத் துண்டு துண்டாக்கிவிடும். அவர்களைப் போல் கவர்ச்சிமிக்க பரிசில்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாமையால் அவர் அவர்களை கவர வழியின்றி நிர்க்கதிக்குள்ளாவார்.

  1. வாடிக்கையாளரின் பணம்

இந்தப் பாரிய பரிசில்களுக்காக வியாபாரியால் ஒதுக்கப்படும் பணம் வாடிக்கையாளர்களிடமிருந்தே அறவிடப்படுகிறது. அதாவது வியாபாரியால் பொருளை 80% விற்கு விற்க முடியும். ஆனால் 100% விற்கு அப்பொருளை அவன் விற்கும் போது 20% வை அவன் வாடிக்கையாளரிடமிருந்து (பரிசைக் கொள்வனவு செய்வதற்காக மறைமுகைமாக) பெற்றுக் கொள்கிறான். இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் அல்லது இலட்சக் கணக்கானோரால் செலுத்தப்பட்ட பணத் தொகையைக் கொண்டே வியாபாரி பரிசுக்கான பொருளை வாங்குகிறான். இந்தப் பொருள் தான் (பரிசாக) ஒரேயொரு அதிஷ்ட்டசாலிக்கு வழங்கப்படுகிறது. ஏனையோர் பாரிய எதிர்பார்ப்புடன் இருந்துவிட்டு இறுதியில் எதனையும் பெறாமல் போகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? ஒரு பொருளை அதற்கே உரிய பெறுமதியை விட அதிக பெறுமதிக்கு விற்பதன் மூலம் வியாபாரி வாடிக்கையாளர்களுக்கு அநீதியிழைத்துவிட்டான் என்பதே உண்மையாகும். இவ்வளவும் ஒரேயொருவரின் தேவையை ஆசையை நிறைவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளாகும்.

இது பற்றி சிலர், அனைவரினதும் விருப்பத்தின் பேரில் நடந்த ஒரு சீட்டிழுப்புத் தானே இது என வாதிடக் கூடும். சூதும் வட்டியும் கூட இரு தரப்பினரதும் விருப்பத்தின் பேரில்தான் நடக்கிறது. விருப்பம் அல்லது இரு தரப்பும் சம்மதம் என்று கூறினாலும் புத்திசாலிகள் எவரும் இங்கு நடக்கும் அநீதியை அறியாதிருக்க முடியாது. வேறு சிலர் பரிசில்களுக்காக ஒதுக்கப்படும் இந்தப் பாரியளவு பணத்தொகை வியாபாரிகளது இலாபத்திலிருந்தே பெறப்படுகின்றது என்றும் நுகர்வோரிடமிருந்து பெறப்படுவதில்லை என்றும் வாதிடலாம். ஆனால், நடைமுறை இதற்கு மாற்றமாகவே இருக்கின்றது. ஏனெனில், வியாபாரி தான் இட்ட மூலதனத்திற்கு இவ்வளவு தான் இலாபம் கிடைக்க வேண்டும் என ஏலவே தீர்மானித்துக் கொள்கின்றான். இவ்வாறு இலாபத்தைக் கணித்து ஒதுக்கிய பின்னர் தான் அதிகமான வாடிக்கையாளர்களை-நுகர்வோரை கவர்ந்திழுப்பதற்காக இவ்வளவு தொகை தேவை என்பதை நிர்ணயிக்கிறான். பின்னர் அதற்கான தனியான பண அளவை ஒதுக்குகிறான்.

ஒரு பொருளைப் பரவலாக சந்தைப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுக்கலாம். ஆனால், இஸ்லாம் அதற்கும் சில வரையறைகளை இட்டுள்ளது. ஒரு பொருளின் தரத்தை உயர்ந்த பட்சம் நல்லதாக்கவும், முடியுமானவரை அதனைத் தரமாக உற்பத்தி செய்வதற்கும் முயற்சியெடுப்பது, பின்னர் மக்கள், குறிப்பாக பெருளாதார நிலையில் நலிவுற்றிருப்போர் அப்பொருளை இலகுவாகக் கொள்வனவு செய்ய வேண்டும் என்பதற்காக முடியுமானவரை அதன் விலையைக் குறைப்பது போன்றன அனுமதிக்கப்பட்ட நல்ல வழிமுறைகளாகும். ஆனால், இந்தப் பரிசில்களுக்கு விற்பனைப் பொருளின் தரத்துடனோ விலைகுறைப்புடனோ எந்த வகையிலும் சம்பந்தமில்லை. இவை அந்தப் பொருளுடன் சம்பந்தப்படாத வெளிக் காரணங்களைப் பயன்படுத்தி விற்பதக்காக எடுக்கப்படும் முயற்சிகளாகும். இது முழுக்க முழுக்க முதலாளித்துவப் போக்காகும். முதலாளித்துவம் இன்று வியாபாரப் பொருட்களின் விளம்பரத்துக்காக சுமார் 30% மான பணத் தொகையைச் செலவிடுகிறது. இறுதியில் ஏழை நுகர்வோனே இதன் பழுவைச் சுமக்கிறான். இதனை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

  1. வீண்விரயத்துக்கான தூண்டுதல்

இவ்வாறான பெரும் பரிசுத் தொகைகளது கவர்ச்சியானது பொருட்களை அதிகம் நுகரும் நிலைக்கு மக்களைத் தூண்டுகிறது. சிலவேளை அப்பொருளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லாத போதிலும் அவர்கள் அதனைக் கொள்வனவு செய்ய விரும்புவார்கள். இது மேற்குலகு முதலாளித்துவ நாகரிகத்தின் பண்பாகும். எனவே, சிலர் ‘நுகர்வு நாகரிகம்’ என அதற்குப் பெயரிட்டனர். இவர்களது தத்துவம் எமது தத்துவத்துக்கு முரணானது. அந்தப் போக்கு எமது போக்கிற்கு எதிரானது. எமது வாழ்க்கை நெறி செலவு செய்வதில் நடுநிலமையும் நிதானமும் தேவை என்கிறது. விரயத்தைத் தவிர்க்கிறது.

‘நீங்கள் உண்ணுங்கள். பருகுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள். அவன் (அல்லாஹ்) விரயம் செய்பவர்களை நிச்சயமாக விரும்பமாட்டான்.'(அல்-அஃராப் – 31) என்றும்,

‘அவர்கள் செலவு செய்யும் போது விரயம் செய்யமாட்டார்கள், இறுக்கமாக்கி (கொஞ்சமாக) செலவு செய்யவும்மாட்டார்கள். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் (அவர்களது செலவு அமைப்பு) இருக்கும்.’ (புர்கான் – 67) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இது அல்குர்ஆன் கற்றுத்தரும் சமநிலைத் தன்மையாகும். எனவே, உமர் (ரழி) அவர்கள் ‘பொருளை வாங்க வேண்டும் என்ற ஆசை வரும் போதெல்லாம் நீங்கள் அதனை வாங்குவதா?’ எனக் கேட்டார்கள். நுகர்வோர் தமது பொருட்களைக் கொள்வனவு செய்வதில் விரயம் செய்ய வேண்டும் என இந்த முதலாளித்துவவாதிகள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கான கவர்ச்சியான விளம்பரங்களையும் மயக்கும் பரிசுத் திட்டத்தையும் கைக்கொள்கிறார்கள். இதனால் சிலபோது நுகர்வோன் கடனுக்கும் தவணைக் கட்டண அடிப்படையிலும் கொள்வனவு செய்ய தூண்டப்படுகிறான். தன்னால் தாங்க முடியாத சுமையை அவன் சுமக்கிறான்.

கடன்காரன் கவலையில் இரவைக் கழிக்கிறான். நபி(ஸல்) அவர்கள் கடன் பழுவிலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் அடிக்கடி பிரார்த்தித்தார்கள். (புகாரி – 2893). அவர்கள் அதிகம் ‘அல்லாஹ்வே! பாவம் செய்வதைவிட்டும் கடன் எடுப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.’ என்று துஆக் கேட்டார்கள். அவர்களிடம் ‘ஏன் கடனை விட்டும் அதிகம் பாதுகா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top