அஷ்ஷைக் பளீல் (நளீமி)
அன்னார் அற்புதமான மனிதர். வாழ்வின் எதிரும் புதிருமான கட்டங்களில் அவர்களைக் காண முடியும். ஆன்மீகத்தினதும் லெளகீகத்தினதும் அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். சில உதாரணங்கள் மூலம் இதனை விளக்கலாம்.
ஆன்மீகத்தில் அதி உச்சநிலை
அவர்கள் ஜமாஅத் தொழுகையையும் தஹஜ்ஜத்தையும் தவறவிட மாட்டார்கள். திங்கள், வியாழன் நோன்பு பிடிப்பார்கள். திக்ரிலும் திலாவத்தில் சதாவும் திளைத்திருத்திருப்பார்கள். மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். எனவே அவர்கள் ஒரு துறவி.
குடும்பத் தலைவன்
11 மனைவியரைத் திருமணம் முடித்த கணவன். 7 பிள்ளைகளது அன்புள்ள தகப்பன். ஹஸன், ஹுஸைனுக்கான பாட்டன். வீட்டாருடன் மிக நெருக்கமாக, அன்பாக பழகி அவர்களுக்கு பணிவிடை செய்வார்கள். பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி முத்தம் கொடுத்து விளையாடுவார்கள்.”உங்களில் சிறந்தவர் தனது குடும்பத்தாருக்கு சிறந்தவர் ஆவார். உங்களுக்கு மத்தியில் குடும்பத்தாருக்கு சிறந்தவராக நான் இருக்கிறேன்” என்று கூறினார்கள். எனவே எல்லோரையும் மிஞ்சிய நல்லதொரு குடும்பஸ்தன்.
நீதிபதி
அவரது தோழர்கள் எதிர் நோக்கிய குடும்ப மற்றும் சொத்துத் தகராறுகள் அனைத்தின் பொழுதும் அந்த ஸஹாபாக்கள் அவரையே நாடி வந்து தீர்ப்புக்கேட்டு பின்பற்றினர். நுஃமான் பின் பஷீர்(ரழி)அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவர்களது பிள்ளைக்கு வழங்கிய அன்பளிப்பு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு நபியவர்களது சந்நிதிக்கு வந்து தீர்ப்புக் கேட்ட போது “உங்களது குழந்தைகளுக்கு இடையில் நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள். தனது மகள் பாத்திமா திருடினாலும் தண்டிப்பதாக கூறிய நீதிபதி அவர்கள்.
வெற்றிகரமான ஆசான்
பள்ளியில், பாதையில், வீட்டில் என்று பாராமல் தனது போதனைகளை எல்லா இடங்களிலும் தனது தோழர்களுக்கு மிக வெற்றிகரமாக ஏத்திவைத்த ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர் ஆசான் அவர்கள்.
படைத்தளபதி
எதிரிகளது ஆயுதப் போராட்டங்களை முறியடிப்பதற்காக தனது தோழர்களை கனகச்சிதமாக தயார்படுத்தியதுடன் திட்டமிட்டு படைகளை வழிநடாத்தி யுத்த தந்திரோபாயங்களை கையாண்ட படைத்தளபதியாக இருந்தார்கள்.
உழைப்பு
சொந்தக் காலில் நின்று உழைத்து உண்ணும் உழைப்பாளியாக இருந்தார்கள். மக்காவில்
ஆடுமேய்த்து சில கீராத்களை ஊதியமாகப் பெற்றதாக தனது தோழர்களுக்கு அவர்கள் கூறினார்கள் .அபூதாலிபுடன் வியாபாரத்துக்காக ஷாம் தேசம் சென்றார்கள். கதீஜா நாயகியின் பணத்தில் வியாபாரம் செய்தார்கள். எனவே அவர்கள் சிறந்த உழைப்பாளி.
மனிதாபிமானி
மத, குல, நிற, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சகல மனிதர்களையும் நேசித்தார்கள். நான் (மனித இனத்துக்கு)அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஓர் அருள்” என்றார்கள்.
அரசியல்வாதி
சிறந்த அரசியல் சாணாக்கியத்துடன் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு தலைமை தாங்கினார்கள்.
மதீனாவுக்கு வந்த வெளிநாட்டுத் தூதுக் குழுக்களுடன் மிகத் திறமையாக கருத்துப் பரிமாற்றம் செய்பவராக பிற நாட்டு அரசர்களுக்கு சொற்சுருக்கம் கொண்ட கடிதங்களை திறமையாக எழுதி வெளியுறவுகளை அற்புதமாக பேணும் ராஜதந்திரியாக, நாட்டை வழி நடத்துபவராக இருந்தார்கள்.
வெற்றியிலும் தோல்வியிலும் முன்மாதிரி
பத்ர் போன்ற யுத்தங்களின் போது வெற்றி பெற்ற போது மட்டுமன்றி உஹதில் தோல்வி கண்ட போதும் அதாவது எந்த நிலை ஏற்பட்டாலும் அவர்களிடம் முன்மாதிரி இருந்தது.
அபூஜஹ்ல் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் போன்ற கடுமையான எதிரிகளது சூழ்ச்சிகள், முட்டுக்கட்டைகள் ஏராளம் ஏற்பட்ட போது அவற்றை எப்படி வெற்றிகரமாக நிர்வகிப்பது எற்பதற்கும் முன்மாதிரி காட்டினார்கள்.
வித்தியாசமான சூழ்நிலைகளில்
வறுமை, நோய், உடல் சோர்வு போன்றன ஏற்பட்ட போது எப்படி இருப்பது என்பதில் முன்மாதிரியாக நடந்தார்கள்.
அவர்களது வாழ்வில் சிரிப்பு, அழுகை, கோபம், அன்பு, இரக்கம் எல்லாம் இருந்தது. அதாவது மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனைத்து சூழ்நிலைகளுக்குமான இஸ்லாமிய நிலைப்பாடுகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
لقد كان لكم في رسول الله اسوة حسنة
“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகான முன்மாதிரி உள்ளது”
என்ற குர்ஆனிய வசனம் இதனையே கூறுகிறது.
அவர்களை Multidimensional Personality பன்முக அபூர்வமான ஆளுமை Charismatic Leader ஆகர்ஷண தலைவர் என்று கூறலாம்.
வாழ்வில் ஒரு பகுதிக்கு அல்லது சில பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஏனைய பகுதிகளை புறக்கணித்த பல சமூகத் தலைவர்களை வரலாறு கண்டிருக்கிறது. உடலின் சில பாகங்கள் வீங்கி வேறு சில பகுதிகள் முற்றாக செயலிளந்த உடம்புக்கு அவர்களது வாழ்வை ஒப்பிட முடியும்.
சமநிலை வாழ்வு
ஆனால் நபிகளார் (ஸல்) அவர்கள் ஏக காலத்தில் உடல், அறிவு, ஆத்மா ஆகியவற்றின் தேவைகளை கவனித்தார்கள்.
உலகில் சிலர் அறிவுக்கடல்களாக இருப்பர்.ஆனால் அவர்களது வாழ்வில் பயங்கரமான ஆன்மீக வரட்சி அல்லது ஒழுக்க வீழ்ச்சி இருக்கும்.
சிலர் ஆட்சியை சிறப்பாக செய்வர்.ஆனால் குடும்ப வாழ்வில் அவர்கள் படுதோல்வி கண்டிருப்பர்.
சிலர் ஆன்மீகத்தில் உச்ச நிலையில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் சமூகக் களத்திலிருந்து முழுமையாக ஒதுங்கி துறவிகளாக இருப்பர்.
இத்தகையவர்களை முழுமையான முன்மாதிரிகளாக எடுக்க முடியாது.
நபிகளார் (ஸல்) அவர்களது பின்வரும் மூன்று நிலைகளையும் மனக்கண் முன் கொண்டுவந்து பார்ப்போம்.
- அல்லாஹ்வின் சந்நிதியில் நடுநிசியில் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.2. தனது பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுகிறார்கள். 3. தனது மனைவி ஆயிஷா நாயகியின் மடியில் தலை வைத்து படுத்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு வழிகாட்ட வருபவர்கள் வாழ்வின் எத்துறையையும் புறக்கணிக்கலாகாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
எல்லோரும் இடமளித்த சபை
நபி(ஸல்) அவர்களது சபையில் சமூகத்தின் சகல தரத்தவர்களும் இருந்தார்கள்.
- பணக்காரன் – ஏழை
- கவர்னர் – குடிமகன்
- தோழன் – எதிரி
- முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதோர்
- சிறார் – முதியோர்
- ஆண்கள் – பெண்கள்
- கறுப்பர் – வெள்ளையர்
அபீஸீனிய நாட்டு நீக்ரோ அடிமை பிலால் (ரலி) – மக்காவின் மிகப்பெரும் பணக்காரன் அபூபக்கர் (ரலி), ரோம் நாட்டு சுஹைப் (ரழி)- பாரசீக நாட்டு சல்மான்(ரழி) நபிகளார் (ஸல்) அவர்கள் தனது பணியில் வெற்றிகண்ட, உலகின் தனித்துவமான ஒரு தலைவராக மிளிர்ந்தமைக்கு காரணம் அவர்களை அல்லாஹ் அப்பணிக்காக தெரிவு செய்தது மட்டுமன்றி அணுவணுவாக அவன் வழிநடாத்தினான்.
அன்னார் தன்னைத் தானே நபியென்று உரிமை கொண்டாடியிருந்தால் இந்த சாதனைகளை ஈட்டியிருக்கவே முடியாது. அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு இது சிறந்த ஆதாரம்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا
“நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) – அவன் அனுமதிப்படி – அழைப்பவராகவும் பிரகாசிக்கும் விளக்காகவும் அனுப்பியுள்ளோம்” (33:44,45)
அத்தகைய ஒரு மனிதப் புனிதரை, பன்முக ஆளுமையைப் பின்பற்றி அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோமாக!
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
“(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.”(3:31)




