அஷ்ஷைக் பளீல் (நளீமி)
தற்போது நாம் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வித்தியாசமான பல சோதனைகளை எதிர்கொள்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிப்பதாகவும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அது தான் பின்னணி என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இவ்வாறு இஸ்லாத்தைப் பற்றிய மிக மோசமான அபாண்டங்களும் பொய்களும் கட்டப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படக் கூடாது என்பதில் பலர் மிக கவனமாக இருந்து வருகிறார்கள்.
இதனை இஸ்லாமோஃபோபியா என்று சொல்லமுடியும்.
முஸ்லிம்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு எதிராக யுத்தம் தொடுத்து அவர்களை அகதிகளாக்கி அவற்றில் இன்பம் காண்போரும் உலகில் இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் அதன் இயல்பு அது பல வித்தியாசமான சோதனைகளை சந்திக்கும் என்பதாகும்.இது அல்லாஹ் விதித்த நிபந்தனையாகவும் இருக்கிறது.
எனவே சோதனைகள் வருகின்ற பொழுது துவண்டு போவதோ நிராசையடைவதோ உண்மையான முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
இவை ஒன்றும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் புதியவை அல்ல.இவை நமது காலத்தில் மட்டும் தான் நடக்கின்றன என்றும் கூற முடியாது.
வரலாற்றுப் பாடம்
வரலாற்றில் நாம் பல முன்னுதாரணங்களை பார்க்கலாம். எந்த ஒரு நபியும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்திருக்கிறார்கள். இஸ்லாத்தின்படி வாழ ஆரம்பிக்கின்ற பொழுது கட்டாயமாக எதிர்ப்பு வந்து தான் தீரும்.
நபியவர்கள் மக்காவில் இருந்த போது பைத்தியக்காரர், சூனியக்காரர், சமூகத்தை பிரிப்பவர், கவிஞர் போன்ற மிகப் பயங்கரமான சொற்களால் அழைக்கப்பட்டார்கள். அவர்களது நற்பெயருக்கு எப்படியெல்லாம் களங்கம் விளைவிக்க முடியுமோ அப்படியெல்லாம் களங்கம் விளைவிக்க காபிர்கள் முற்பட்டார்கள். அவர்களுக்கும் தோழர்களுக்குமான அடிப்படை உரிமைகள் முற்றுமுழுதாக மறுக்கப்பட்டன. அவர்கள் அபூதாலிப் கணவாயில் தனது தோழர்களோடு சேர்த்து மூன்று வருடங்கள் முடக்கப்பட்டார்கள். மட்டுமல்ல தனது பிறந்தகத்தில் இருந்தே வெளியேறுவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களை கொலை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது. யுத்தகளத்தில் அவர்களுடைய பல் கூட ஷஹீதாக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்துக்குள் புல்லுருவிகள், காட்டிக் கொடுப்பவர்கள், முனாஃபிக்குகள் இருப்பார்கள் என்பதற்கு நபியவர்கள் காலத்திலேயே பல உதாரணங்களை பார்க்கிறோம். இதற்கு அப்துல்லாஹ் இப்னு உபை பின் சலூல், ஹாதிப் இப்னு அபீ பல்தஆ போன்றவர்கள் நல்ல உதாரணமாகும்.
நபியவர்கள் மிகத் துல்லியமாக தனது தூதை எத்திவைத்த பொழுதிலும் அதனை வீம்புக்காக எதிர்த்தவர்களில் வலீத் இப்னு முகீரா, அபூஜஹல், அபூலஹப் போன்றவர்களை பார்க்கிறோம்.
அல்லாஹ்வின் சுனன் (நியதிகள்)
இதுவெல்லாம் எப்போது நடந்தது? அல்லாஹ்வின் நேரடி கண்காணிப்பில் நபியவர்கள் இருந்த பொழுதும் வஹீ இறங்கிக் கொண்டிருந்த பொழுதும் இவை அனைத்தும் நடைபெற்றன. அல்லாஹுத்தஆலா இவற்றையெல்லாம் தடுத்திருக்க முடியும்.ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை.
காரணம் என்ன? இஸ்லாமிய தஃவாவின் பாதை, சமூக சீர்திருத்த பாதை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற பாடத்தை பின்னால் வரும் சமூகங்களுக்கும் சொல்ல வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாக இருந்து. சோதனைகளுக்குள்ளாலும் சவால்களுக்குள்ளாலும் தான் இஸ்லாத்தின் வெற்றி சாத்தியப்படும் என்பது அல்லாஹுத்தஆவின் ஏற்பாடு.
அதுமட்டுமல்லாமல்,பல சஹாபாக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.ரஃல் ஸக்வான் கோத்திரத்தினர் குர்ஆனை மனனம் செய்த 80க்கும் மேற்பட்ட ஹாபிள்களை கொன்றார்கள். இது நபியவர்களுடைய காலத்திலேயே நடந்தது.
நான்கு கலீபாக்களுடைய காலத்தில் அவர்கள் சமூகத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சந்தித்த சவால்கள் நாம் அறியாதவை அல்ல.
வரலாறு நெடுகிலும் பல இமாம்கள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள்.
இரண்டு வகை சவால்கள்
முஸ்லிம்கள் சந்தித்த துன்பங்களும் சவால்களும் இரண்டு வகைப்படும்.
- உலக வாழ்வில் அவர்கள் சந்தித்த துன்பங்கள்.
- தஃவாக் களத்தில் அவர்கள் சந்தித்த துன்பங்கள்.
உலக வாழ்வில் சந்தித்த துன்பங்கள்
¶ நபி ஐயூப் (அலை) – கடுமையான நோய்
¶ நபி யாகூப் (அலை), அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் -கண்கள் குருடு
¶ முஹம்மத் (ஸல்) – மிகமுக்கியமான, இக்கட்டான காலகட்டத்தில் மனைவி,அபூதாலிப் மரணம்,மகன் இப்ராஹீமின் மரணம்
தஃவாவில் சந்தித்தவை
¶ நபி நூஹ் (அலை) – மகன் தூதை ஏற்காமை
¶ நபி இப்ராஹீம் (அலை)- தகப்பன் தூதை ஏற்காமை
¶ நபி லூத் (அலை) – மனைவி தூதை ஏற்காமை
¶ நபி யூசுப் (அலை)- உடன்பிறந்த சகோதரர்களாலேயே வஞ்சிக்கப்பட்டு பின்னர் அபாண்டம் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்படல்.
¶ நபிகளாரின் அன்புத் துணைவியார் ஆயிஷா(ரழி) மீதான படுதூறு
¶ உமர், உஸ்மான்,அலி,ஹுசைன்(ரழி) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை
எனவே, இவை அனைத்தும் இஸ்லாமிய பாதையில் நாம் எதிர்கொள்கின்ற அல்லாஹ்வினுடைய ஏற்பாடுகள் தான்.
அல்குர்ஆனில் அல்லாஹ்:-
لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓاْ أَذًى كَثِيرًا ۚ وَإِن تَصْبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ
“(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.”(3:186)
என்று சொல்லுகிறான்.
மேலும்,
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْاْ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ
“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.”(2:214)
என்று வேறு ஓர் இடத்தில் கேட்கின்றான்.
ஈமானுடன் ஒட்டியதாகவே சோதனைகள் இருக்கும். ஈமானோடும், இஸ்லாத்தோடும் வாழ விரும்பினால் சோதனைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். பஞ்சணை மெத்தையில் இருந்துகொண்டு செங்கம்பள வரவேற்பை எதிர்பார்த்துக் கொண்டு இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாது. இத்தகைய சோதனைகளுக்கு பொறுமையோடு முகம் கொடுத்தால் அல்லாஹ்வின் அபரிமிதமான கூலிகள் கிடைக்கும்
சோதனைகள் ~ தண்டனைகள்
ஆனால் சோதனைகளுக்கும் தண்டனைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.
தண்டனைகள் என்றால் நாம் செய்த குற்றங்களுக்காக நாம் அல்லாஹுத்தஆலாவால் தண்டிக்கப்படுவது. அவனது கட்டளைகளை கடைப்பிடிக்காத போது, கடமைகளை செய்யாத போதும் நாம் தண்டிக்கப்படுவோம். அந்த நேரத்தில் அவற்றை சோதனைகளாக அன்றி தண்டனைகளாகவே பார்க்க வேண்டும்.
உஹத் யுத்தத்தில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் நபியவர்களது கட்டளைகளை ஸஹாபாக்கள் மீறியதாகும். எனவே 70 சஹாபாக்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது .அப்போது அல்லாஹுத்தஆலா தோல்வி ‘எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்கள் அது உங்களிடம் இருந்து வந்தது’ என்று பதில் சொன்னான்.
தற்போது உலகத்தில் இஸ்லாம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம்களுக்கு பயங்கரவாத லேபல் குத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:-
✓ ஒன்று இஸ்லாத்தை முஸ்லிம்களே தவறான விதத்தில் பின்பற்றுவது.
✓ இரண்டாவது, இஸ்லாத்தை மிகச் சரியாக பின்பற்றுவது
அதாவது எதிரும் புதிருமான இரண்டு காரணிகள்.
∆ இஸ்லாத்தை பிழையாகப் பின்பற்றுவது:-
இஸ்லாத்தை தவறாக புரிந்து அதனை பிழையாக நடைமுறை படுத்துகின்ற ஐ.எஸ்.எஸ்.போன்ற தீவிரவாதிகளால் முஸ்லிம் சமூகம் தலைகுனிவை சந்தித்திருக்கிறது. இதன் மூலமாக நாம் தண்டிக்கபடுகிறோம். முஸ்லிம் சமூகம் வட்டி, இலஞ்சம்,ஊழல் போன்றவற்றோடு சம்பந்த படுகின்ற பொழுது, சடவாதத்திலும் சுய நலத்திலும் மூழ்கிப் போய் இருக்கின்ற பொழுது, அரசியல்வாதிகள் அராஜகத்துக்கு துணை போகின்ற பொழுது, அதாவது முஸ்லிம்கள் மார்க்க கடமைகளை புறக்கணிக்கின்ற பொழுது நிச்சயமாக தண்டனை இறங்கவே செய்யும்.
∆ இரண்டாவது, இஸ்லாமிய அடிப்படையில் மிகச்சரியாக வாழுகின்ற பொழுது:-
இத்தகைய சந்தர்ப்பங்களில் வருவதற்குப் பெயர் தான் சோதனையாகும் .உரிய முறையில் தொழுகை, ஸகாத் போன்றவற்றை நிறைவேற்றுவது, பெண்கள் ஹிஜாப் அணிவது, வட்டியில்லா பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது போன்றன இதற்கான உதாரணங்களாகும். இப்படியான சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் எதிரிகள் பொறாமைப்பட்டு இஸ்லாத்தை கருவறுக்கவும் முஸ்லிம்களை அழித்தொழிக்கவும் முயற்சிப்பார்கள்.
இஸ்லாத்தைப் நடைமுறைப்படுத்தாத போது அல்லது இஸ்லாத்திற்கு எதிராக நடந்து கொள்கின்ற பொழுது வருவது தான் தண்டனை.(அதாபு) இஸ்லாத்தை மிகச் சரியாக நடைமுறைப் படுத்துகின்ற பொழுது வருவது தான் சோதனை (பலாஉ)
எனவே நாம் சோதிக்கப்படுகின்றோமா தண்டிக்கப்படுகின்றோமா என்பது பற்றி நன்கு சிந்தித்து க் கொள்வோமாக!
சோதிக்கப்படுகின்ற பொழுது என்ன செய்ய வேண்டும்?
சோதனை என்றால் அல்லாஹ்வின் நியதி என்றும் அதனை தவிர்க்க முடியாது என்றும் சோதனைகள் ஊடாகவே இஸ்லாத்தின் வெற்றியை எதிர்பார்க்க முடியும் என்றும் மேலே பார்த்தோம்.
இப்படியாக சோதனைகள் வருகின்ற பொழுது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
- தொழுகையின் மூலமும் பொறுமையின் மூலமும் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்க வேண்டும்.
- திக்ர், அவ்ராதுகள்,என்பனவற்றில் ஈடுபடுவதால் துஆக்களைச் செய்வதால் அல்லாஹ்வின் பால் நாம் நெருங்க முடியும். சோதனைகளின் பொழுது மனநிம்மதி,இறை உதவி என்பன கிடைக்கும்.
- எமக்கு சோதனைகளும் தடைகளும் சவால்களும் வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஏற்பாடுகளிலும் கட்டாயமாக ஈடுபடவேண்டும். அவற்றில் ஈடுபட்ட பின்னரும் அவை பலனளிக்காத போது அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து பொறுமையாக இருக்க வேண்டும். உதாரணமாக நோய் வராமலிருக்க சுத்தமாக இருப்பது,எதிரிகளது சூழ்ச்சி வலைகளில் சிக்காதிருப்பதற்கு தற்காப்பு அறன்களை ஏற்படுத்திக் கொள்வது.
- சவால்களும் சூழ்ச்சிகளும் இடம்பெறும் போது அவற்றை உயர்ந்த பட்சம் முறியடிப்பதற்கான முழுமையான முயற்சிகளில் ஈடுபடுவது
- வெற்றிக்கான நிபந்தனைகளை தெளிவாகக் கண்டறிந்து அவற்றை எமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் அதற்கான பலம்களை திரட்டிக்கொள்வதும்:-
#ஈமானிய ஆத்மிக பலம்
#ஐக்கியம் என்ற பலம்
#அறிவு என்ற பலம்
#பண்பாட்டுப் பலம்
இவற்றையெல்லாம் உயர்ந்தபட்ச கடைபிடிக்கும் படி தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் எமக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள்.
إِنَّ اللّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ
“அல்லாஹ் எந்த ஒரு சமூகத்தையும் அச்சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை மாற்றுவதில்லை”
(அல்குர்ஆன்,அர்ரஅ த்-11)
முயற்சி எமது கடமை பிரதிபலனை தீர்மானிப்பது அல்லாஹ்வின் உரிமை.




