அஹதிய்யா, மக்தப் , ஓதப்பள்ளி

அஷ்ஷைக் பளீல்

முஸ்லிம் சிறார்களது மார்க்கக் கல்விக்காக நிறுவப்பட்ட அஹதிய்யா குர்ஆன் மத்ரஸா (ஓதப்பள்ளி) மக்தப் ஆகிய மூன்று அமைப்புக்களும் சிறார்களின் உள்ளங்களில் #ஈமானின் அடித்தளத்தை இடுவது அவர்களுக்கு குர்ஆனை திருத்தமாக ஓதப் பழக்குவது, அவர்கள் இபாதத்களை முறையாகச் செய்ய பயிற்றுவிப்பது அவர்களது பிஞ்சு உள்ளங்களில் மார்க்கத்தின் உன்னத பண்பாடுகளை விதைப்பது ஆகிய அடிப்படை நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட அமைப்புக்களாகும். ஆனால் அவற்றின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது? இது பற்றிய உயர்மட்ட கலந்துரையாடல்கள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த ஒவ்வோர் அமைப்பினதும் பாடத்திட்டம் போதனா முறைகள், ஆசிரியர் வாண்மை விருத்தி, பரிட்சைகள், மதிப்பீடுகள் போன்றன தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியப்படுகின்றன. இதற்காகத் துறை சார்ந்தவர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் சமூகத்தில் இந்த மூன்று நிறுவனங்கள் தொடர்பாகவும் விமர்சனங்களும் சில போது விரக்தியும் நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

அவற்றிடையே முரண்பாடுகள் நிலவுவது பற்றியும் அவற்றில் பல உப்புச் சப்பில்லாத நிலையில் இருப்பது சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நிலவுகின்றன.

ஆனால் முஸ்லிம் சிறுபான்மை நாடொன்றில் இப்படியான வாய்ப்புக்கள் அரிதாகவே கிடைக்கின்றன.

அஹதிய்யா என்பது இலங்கை அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனம். அதற்கென்று பாடத்திட்டத் தயாரிப்பு, பாடநூல்கள், பரீட்சைகள் என்பன அரச செலவிலேயே நடத்தப்படுகின்றன.

அப்படியிருக்க இலங்கையில் சுமார் 500க்கும் மேற்பட்ட அஹதிய்யாக்கள் இருந்தும் அவற்றில் சுமார் 150க்கும் குறைவானவையே இயங்கி வருகின்றன.இயங்கும் அஹதிய்யாக்களில் பல எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை போன்ற தகவல்கள் மிகவும் கவலை தருகின்றன.

இந்த நிறுவனத்தை ஸ்தாபித்தவர்கள் புனிதமான நோக்கங்களுக்காக அவற்றை கட்டிகாத்து வந்தார்கள். அவை மிக நிறைவான சேவையை ஒருகாலத்தில் ஆற்றி வந்தன. ஆனால் தற்போது இந்த அஹதிய்யாக்கள்,மக்தப்கள், மதரஸாக்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவுவது ஒருபுறமிருக்க அவற்றின் தராதரம் பற்றிய ஆய்வுகளும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

எனவே இது விடயமாக முழுச் சமூகமும் கவனமெடுத்து முயற்சிக்க வேண்டும் என்பது எமது அபிப்பிராயமாகும்.

அல்லாஹ் எமது கைகளில் தந்திருக்கின்ற இந்த சிறார்கள் தான் நாளைய தலைவர்கள். அவர்களது மார்க்க, பண்பாட்டு வளர்ச்சி விடயமாக நாம் கவனமெடுக்காத போது எதிர்காலத்தில் அந்த பரம்பரை இஸ்லாத்திலிருந்து தூரமாவதற்கும் பாவங்களில் ஈடுபடுவதற்கும் அது காரணமாக அமையும்.

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அதற்கும் அப்பால் அவர்கள் எதிர்காலத்தில் எம்மைக் குறை சொல்வார்கள். அல்லாஹ்வினுடைய கடுமையான விசாரணைக்கு இந்த நிறுவனங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்ற அனைவரும் உள்ளாக வேண்டிவரும்.

முதல் கோணல் முற்றும் கோணல்

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இந்தக் கூற்றுகள் கவனிக்கத்தக்கவை.

நாம் இந்த சிறார்களை அல்லாஹ்வுடன் அவனது தூதருடன் அல்குர்ஆனுடன் பண்பாடுகளுடன் சம்பந்தப்படுத்தத் தவறும் பட்சத்தில் அது ஒரு பெரிய துரோகமாகவும் பாவமாகவும் அமையும்.

அல்லாஹ் எம் சந்ததிகளையும் மற்றும் சிறார்களையும் எமக்கு கண் குளிர்ச்சியாகும் எதிர்காலத்தில் சிறந்ததொரு பரம்பரையாகவும் ஆக்குவானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top