ஒரு முஸ்லிம் தன் சகோதரனின் அவதூறைத் தடுக்க வேண்டியது கடமையாகும்

(இஸ்லாம் வெப் (Islamweb) தளத்தில் இருந்து பெறப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்)

ஒரு முஸ்லிமனுக்கு தனது சகோதர முஸ்லிமன் மீது உள்ள கடமைகளில் ஒன்று, அவரைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது அல்லது அவரைக் குறைத்து மதிப்பிடும்போது, அவரைப் பற்றி பேசப்படும் புறங்கூறலை (கீபத்) தடுத்து நிறுத்துவதும், அவருடைய கண்ணியத்தையும் மானத்தையும் பாதுகாப்பதும் ஆகும். ஒருவருடைய கண்ணியத்தை இழிவுபடுத்தும் ஒரு வார்த்தையாக இருந்தாலும், அதற்கு எதிராக அவர் தனது சகோதரனைப் பாதுகாக்க வேண்டும்.

நமது நபி ﷺ அவர்கள், ஒரு முஸ்லிமைப் பற்றி புறங்கூறப்படும் போது அதைத் தடுத்து, அவரைப் பாதுகாக்குமாறு நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அவ்வாறு செய்பவரை அல்லாஹ் மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பான் என்றும், நெருப்பிலிருந்து அவருக்கு ஒரு திரையை அமைப்பான் என்றும் நபி ﷺ அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

செயலுக்கேற்ற கூலி வழங்கப்படும்

அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنهما அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன். அவனுக்கு அநீதி செய்யமாட்டான்; அவனை எதிரியின் கையில் விட்டுவிடமாட்டான். தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனுடைய தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான். ஒரு முஸ்லிமுடைய ஒரு துன்பத்தை நீக்குபவனுடைய மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்குவான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைப்பவனுடைய குறைகளை அல்லாஹ் மறைப்பான்.” (ஸஹீஹுல் புகாரி)

இப்னு ஹஜர் رحمه الله கூறுகிறார்: “‘அவனை விட்டுவிடமாட்டான்’ என்பதன் பொருள்: அவனுக்கு தீங்கு விளைவிப்பவருடன் அவனைத் தனியாக விட்டுவிடமாட்டான்; அவனுக்கு தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையிலும் அவனை கைவிடமாட்டான். மாறாக, அவனுக்கு உதவி செய்து அவனைப் பாதுகாப்பான். இது அநீதியை விட்டுவிடுவதைக் காட்டிலும் குறிப்பானது. சூழ்நிலைக்கேற்ப இது சில நேரங்களில் கடமையாகவும், சில நேரங்களில் விரும்பத்தக்க செயலாகவும் அமையும்.”

இப்னு உதைமீன் رحمه الله கூறுகிறார்: “இதனால்தான் அறிஞர்கள்:-  ஒருவர் தனது சகோதரனின் கண்ணியம், உடல் மற்றும் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக அவருக்காகப் பரிந்து பேசுவது கடமையாகும்.” எனக்ஸகூறியுள்ளனர்:

முஸ்லிமின் கண்ணியத்தைப் பாதுகாப்பது தொடர்பான நபிவழிகள்

நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் ஹதீஸ்களிலும், ஒரு முஸ்லிமின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், அவனுடைய உரிமைகளையும் புனிதத்தன்மையையும் காப்பதற்கும் ஏராளமான வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன.

  1. உத்பான் இப்னு மாலிக் رضي الله عنه அவர்களின் ஹதீஸ்

உத்பான் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கிறார்:

நபி ﷺ அவர்கள் கேட்டார்கள்:

“மாலிக் இப்னு துக்ஷும் எங்கே இருக்கிறார்?”

ஒருவர் கூறினார்: “அவர் ஒரு முனாஃபிக்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிப்பதில்லை.”

அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “அவ்வாறு கூறாதீர்கள். அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியிருக்கிறாரே! அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை நாடியிருக்கலாம் அல்லவா? மேலும், அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியவரை நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் தடுத்துவிட்டான்.” (ஸஹீஹுல் புகாரி)

  1. கஅப் இப்னு மாலிக் رضي الله عنه அவர்களின் சம்பவம்:-

தபூக் போரின்போது நபி ﷺ அவர்கள் கஅப் இப்னு மாலிக் رضي الله عنه குறித்து தமது தோழர்களிடம்

“கஅப் இப்னு மாலிக் என்ன செய்தார்?”எனக் கேட்டார்கள்

பனூ ஸலமாவைச் சேர்ந்த ஒருவர் : “அல்லாஹ்வின் தூதரே! அவருடைய இரு ஆடைகளும், தனது தோற்றத்தைப் பார்த்து பெருமைப்படுவதும் அவரை வீட்டில் இருக்கச் செய்துவிட்டன.”எனக் கூறினார்.

அப்போது முஆத் இப்னு ஜபல் رضي الله عنه கூறினார்: “நீ கூறியது மிகவும் மோசமான வார்த்தை. அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் கூறுகிறேன்; அவரைப் பற்றி நாங்கள் நல்லதைத் தவிர வேறு எதையும் அறியவில்லை.”

அதைக் கேட்ட நபி ﷺ அவர்கள் அமைதியாக இருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னு உதைமீன் رحمه الله கூறுகிறார்: இமாம் நவவி رحمه الله அவர்கள் தனது “ரியாளுஸ் ஸாலிஹீன்” நூலில், கஅப் இப்னு மாலிக் رضي الله عنه அவர்களின் தவ்பா தொடர்பான சம்பவத்தைப் பற்றி கூறியுள்ளார்கள். கஅப் அவர்கள் தபூக் போரில் எந்த நியாயமான காரணமும் இல்லாமல் கலந்து கொள்ளாமல் இருந்தவர்களில் ஒருவராக இருந்தார்.

அவரைப் பற்றி அந்த மனிதர் கூறிய வார்த்தை சந்தேகமின்றி புறங்கூறலாகும், ஏனெனில் கஅப் அவர்கள் விரும்பாத ஒரு விஷயத்தை அவரைப் பற்றி கூறினார். ஆனால் அல்லாஹ் அவரைப் பாதுகாக்கும் ஒருவரை ஏற்படுத்தினான்.அப்போது  அவர்: “அவரைப் பற்றி நாங்கள் நல்லதைத் தவிர வேறு எதையும் அறியவில்லை” என்று கூறினார்.

நபி ﷺ அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

இதிலிருந்து, ஒருவர் மற்றொருவரைப் பற்றி புறங்கூறுவதைச் செவிமடுத்தால், அந்தப் புறங்கூறலைத் தடுத்து, பேசுபவரை அமைதிப்படுத்த முயற்சிப்பது கடமை என்பதை அறியலாம்.

  1. ஆயிஷா رضي الله عنها அவர்களுடைய சம்பவம்:-

நபி ﷺ அவர்கள் தமது அன்புக்குரிய மனைவியான ஆயிஷா رضي الله عنها அவர்களை மிகவும் நேசித்திருந்தாலும், அவர் ஸஃபிய்யா رضي الله عنها அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூறியபோது அதை நபி ﷺ அவர்கள் கண்டித்தார்கள்.

ஆயிஷா رضي الله عنها கூறினார்கள்: “நான் நபி ﷺ அவர்களிடம், ‘ஸஃபிய்யா இப்படிப்பட்டவர்’ என்று கூறினேன்” — அதாவது, அவர் உயரம் குறைந்தவர் என்று குறிப்பிட்டேன்.

அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நீ கூறிய அந்த ஒரு வார்த்தை கடல் நீரில் கலக்கப்பட்டால், அது கடல் நீரையே மாற்றிவிடும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.” (அபூ தாவூத்; அல்பானி رحمه الله அவர்கள் இதை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்.)

இப்னு உதைமீன் رحمه الله விளக்குகிறார்: அதாவது, கடலின் அளவும் பரப்பும் மிகப் பெரியதாக இருந்தாலும், அந்த ஒரு வார்த்தை அதில் கலந்தால் அது அதனைப் பாதிக்கும். வார்த்தை மிகவும் சிறியதாக இருந்தாலும் அதன் பாவம் மிகப் பெரியதாக இருக்கலாம்.

ஸஃபிய்யா رضي الله عنها அவர்களின் உயரம் உண்மையிலேயே குறைவாக இருந்தபோதிலும், அவரைப் பற்றி அப்படிக் கூறுவது அவருக்கு விருப்பமில்லாததாக இருந்ததால் அது புறங்கூறலாக அமைந்தது.

இதனால், புறங்கூறலைக் கடுமையாகத் தடுக்கும் ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். ஒருவரைப் பற்றி உண்மையான விஷயத்தையே கூறினாலும், அவர் அதை விரும்பாவிட்டால் அது புறங்கூறலாகும். அப்படியானால்,எந்த அடிப்படையும் இல்லாமல் பொய்யாகக் கூறப்படும் வார்த்தைகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அறிஞர்கள் : ‘புறங்கூறலைக் கேட்பவரும் புறங்கூறுபவரின் பாவத்தில் பங்காளியாகிறார்.’ எனக் கூறியுள்ளார்கள்.

எனவே, புறங்கூறுவது எவ்வாறு ஹராமோ, அதைக் கேட்டு ரசிப்பதும் ஹராமாகும். தீங்கு ஏற்படும் என்ற அச்சம் இல்லாவிட்டால், அதைத் தடுக்க வேண்டும். தீங்கு ஏற்படும் என்ற அச்சம் இருந்தால் அந்த இடத்தை விட்டு விலக வேண்டும்.

ஒருவர் அங்கிருந்து விலக முடியாத நிலையில் இருந்தால், தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பி, அதைச் செவிமடுக்காமல் இருக்க வேண்டும்.

எனவே, ஒருவர் தனது சகோதரனைப் பற்றி புறங்கூறப்படுவதைக் கேட்டால், நன்மையை ஏவுதல் மற்றும் தீமையைத் தடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக அதைக் கருத வேண்டும்.

இவ்வாறு செய்பவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவராவார்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாப்பவனின் முகத்திலிருந்து மறுமை நாளில் அல்லாஹ் நரக நெருப்பைத் தடுத்துவிடுவான்.”  (திர்மிதி; அவர் இதை ஹஸன் ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்)

  1. அபூ தர்தா رضي الله عنه அவர்களின் ஹதீஸ்:-

அபூ தர்தா رضي الله عنه அறிவிக்கிறார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாப்பவன் நரக நெருப்பிலிருந்து ஒரு திரையைப் பெறுவான்.” (திர்மிதி)

ஸன்ஆனி رحمه الله விளக்குகிறார்: “‘தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாப்பவன்’ என்பதன் பொருள்: அவனைப் பற்றி பேசப்படும் புறங்கூறலைத் தடுத்து நிறுத்துபவன். ‘அவனுக்கு ஒரு திரையாக இருக்கும்’ என்பதன் பொருள்: அந்தத் திரை அவனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும்.”

அவர் இல்லாதபோதும் அவருடைய கண்ணியத்தைப் பாதுகாக்கலாம்; அவர் முன்னிலையில் இருந்தாலும் பாதுகாக்கலாம். ஆனால் அவர் இல்லாதபோது அவரைப் பற்றி புறங்கூறப்படுவதைத் தடுப்பது சிறந்ததாகும்.

ஒருவருடைய கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் போலவே, அவருடைய செல்வத்தையும் இரத்தத்தையும் பாதுகாப்பது இன்னும் சிறந்ததும் அல்லாஹ்விடம் அதிக நற்கூலியுடையதுமாகும்.

திர்மிதியில் மற்றொரு அறிவிப்பில்: “தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாப்பவனுடைய முகத்திலிருந்து மறுமை நாளில் அல்லாஹ் நரக நெருப்பைத் தடுத்துவிடுவான்.” என்று வந்துள்ளது.

முபாரக்ஃபூரி رحمه الله கூறுகிறார்: “‘தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாப்பவன்’ என்பதன் பொருள்: தனது சகோதரனைப் பற்றி பேசப்படும் புறங்கூறலைத் தடுப்பவன். ‘அல்லாஹ் அவனுடைய முகத்திலிருந்து நரக நெருப்பைத் தடுத்துவிடுவான்’ என்பதன் பொருள்: அவனை நரக நெருப்பிலிருந்து விலக்கிவிடுவான்.”

முனாவி رحمه الله கூறுகிறார்: முகம் என்று குறிப்பாகக் கூறப்பட்டதன் காரணம், முகத்திற்கு வழங்கப்படும் தண்டனை வலியிலும் அவமானத்திலும் மிகவும் கடுமையானதாக இருப்பதாலாகும்.

  1. அஸ்மா பின்த் யஸீத் رضي الله عنها அவர்களின் ஹதீஸ்:-

அஸ்மா பின்த் யஸீத் رضي الله عنها அறிவிக்கிறார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் தனது சகோதரன் இல்லாத நேரத்தில் அவனைப் பற்றி புறங்கூறப்படும்போது, அவனுடைய கண்ணியத்தையும் மானத்தையும் பாதுகாத்தால், அவனை நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது உறுதியான வாக்குறுதியாகும்.” (அல்-பைஹகி)

காரி رحمه الله விளக்குகிறார்: “‘பாதுகாப்பவன்’ என்பதன் பொருள்: தடுத்துப் பாதுகாப்பவன். ‘தனது சகோதரனின் மாமிசத்தைப் பாதுகாப்பவன்’ என்பது புறங்கூறலைக் குறிக்கும் உருவகப் பயன்பாடாகும்.”

அதாவது, ஒருவர் தனது சகோதரர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி புறங்கூறுவதை மற்றொருவர் தடுத்து நிறுத்தினால், அவர் தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாத்தவராவார்.

இங்கு புறங்கூறல் மனிதனின் மாமிசத்தை உண்பதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இது புறங்கூறலின் கொடுமையைத் தெளிவுபடுத்தும் வலிமையான உவமையாகும்.

முனாவி رحمه الله அவர்கள் “ஃபைதுல் கதீர்” நூலில் கூறுகிறார்: ஒரு முஃமினுடைய கண்ணியம் அவனுடைய இரத்தத்தைப் போன்றது. ஒருவருடைய கண்ணியத்தை அவமதிப்பது, அவனுடைய இரத்தத்தைச் சிந்தியதற்கு ஒப்பானது. அதேபோல், ஒருவருடைய கண்ணியத்தைப் பாதுகாப்பவன் அவனுடைய இரத்தத்தைப் பாதுகாத்தவனைப் போன்றவன். அதற்கான கூலியாக மறுமை நாளில் அல்லாஹ் அவனை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பான்.

ஒரு முஸ்லிமை கைவிடுவதிலிருந்து எச்சரிக்கை

நமது நபி ﷺ அவர்கள், ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தப்படும் நிலையில் கைவிடுவதையும், அவனுடைய கண்ணியத்தைப் பாதுகாக்காமல் இருப்பதையும் குறித்து நம்மை எச்சரித்துள்ளார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் رضي الله عنه அறிவிக்கிறார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் குறைக்கப்படும், அவனுடைய புனிதமான உரிமைகள் மீறப்படும் ஒரு சந்தர்ப்பத்தில், அவனுக்கு உதவி செய்யாமல் அவனை யார் கைவிடுகிறாரோ, அவருக்கு உதவி மிகவும் அவசியமாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ் அவரைக் கைவிடுவான். மேலும், ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் குறைக்கப்படும், அவனுடைய புனித உரிமைகள் மீறப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கு யார் உதவி செய்கிறாரோ, அவருக்கு உதவி மிகவும் அவசியமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்.”(அபூ தாவூத்)

முனாவி رحمه الله விளக்குகிறார்:

“‘அவனுடைய புனித உரிமைகள் மீறப்படும்’ என்பதன் பொருள்: அவனைப் பற்றி அனுமதிக்கப்படாத வார்த்தைகளைப் பேசுவது. இங்கு ‘புனித உரிமை’ என்பது மீறக்கூடாத உரிமையைக் குறிக்கிறது.”

“‘அவனுக்கு உதவி தேவைப்படும் இடத்தில் அல்லாஹ் அவனை கைவிடுவான்’ என்பதன் பொருள்: அவனுக்கு உதவி மிகவும் அவசியமாக இருக்கும் இடத்தில் — அதாவது மறுமை நாளில் — அல்லாஹ் அவனை கைவிடுவான். ஒரு முஃமினை கைவிடுவது கடுமையாகத் தடைசெய்யப்பட்டதாகும்.”

அதேபோல், ஒரு முஸ்லிமுக்கு அவனுடைய கண்ணியம் இழிவுபடுத்தப்படும் இடத்தில் உதவி செய்பவருக்கு, மறுமை நாளில் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். இது செயலுக்கேற்ற கூலியாகும்.

முடிவுரை

நமது நபி ﷺ அவர்கள் நமக்குக் கற்றுத்தந்தது என்னவென்றால்:

ஒரு முஸ்லிமனின் உரிமைகளில் ஒன்று, அவனைப் பற்றி புறங்கூறப்படும் போது விரைவாக அந்தப் புறங்கூறலைத் தடுத்து நிறுத்துவதும், அவனுடைய கண்ணியம் மற்றும் மானம் குறித்து பேசப்படும்போது அவனைப் பாதுகாப்பதும் ஆகும்.

இதைச் செய்யும்போது மென்மையுடனும் ஞானத்துடனும் செயல்பட வேண்டும்.

புறங்கூறலைத் தடுப்பவர், புறங்கூறுபவரைத் திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில், புறங்கூறலுக்கு உள்ளான தனது சகோதரனின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு செய்பவருக்கு பல சிறப்புகள் உள்ளன:

அல்லாஹ் அவருக்குப் பாதுகாவலனாக இருப்பான்.

இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு உதவி செய்வான்.

மறுமை நாளில் அவரை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பான்.

அவருக்கு நரக நெருப்பிலிருந்து ஒரு திரையை ஏற்படுத்துவான்.

இதற்கான அடிப்படை நபிமொழி: “தனது சகோதரனின் கண்ணியத்தைப் பாதுகாப்பவனுடைய முகத்திலிருந்து மறுமை நாளில் அல்லாஹ் நரக நெருப்பைத் தடுத்துவிடுவான்.”(திர்மிதி)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top